காஷ்மீர் பிரச்சனை: ‘கடந்தகால தவறுகளில் இருந்து இந்திய அதிகாரிகள் பாடம் கற்கவேண்டும்’’ - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

காஷ்மீரில் தற்போதைய நிலை என்ன? படத்தின் காப்புரிமை Getty Images

ஜம்மு காஷ்மீரில் அண்மையில் அமல்படுத்தப்பட்ட சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து அங்கு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதை இந்திய அரசு உறுதி செய்யவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் திங்கள்கிழமையன்று கூறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவிப்பு வெளிட்டபின்னர், ஜம்மு காஷ்மீரில் பல கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் கடந்த இரண்டு வாரங்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல பகுதிகளில் இயல்பு நிலை திரும்பவில்லை. மொபைல் மற்றும் இண்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டிருந்தது.

ஜம்மு காஷ்மீரில் குறிப்பிட்ட அளவு லேண்ட்லைன் சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அரசு, மீண்டும் பள்ளிகளை திறந்துள்ளது. அதேபோல் பெரிய கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடையையும் தளர்த்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

கடந்த வார இறுதியில் (ஆகஸ்ட் 17-18) நடந்த வன்முறை போராட்டங்களில் 8 பேர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீருக்கு விலகியே வாழும் மக்கள் தங்கள் உறவினர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க சில முன்னெச்சரிக்கை தடுப்புக்காவல் நடவடிக்கைகளை மட்டுமே எடுத்துள்ளதாக அரசு ஒப்பு கொண்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் லேண்ட்லைன் சேவைகள் செயல்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடந்த 16-ஆம் தேதியன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், மொபைல் மற்றும் இண்டர்நெட் சேவைகள் இன்னமும் முடங்கியுள்ளன.

இந்நிலையில் காஷ்மீர் நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பின் தெற்கு ஆசியா பகுதி இயக்குநர் மீனாட்சி கங்குலி, ''காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாக மட்டும் கூறிக்கொண்டு இந்திய அரசு இருக்கக்கூடாது. மக்களின் உரிமைகள் காக்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்'' என்று கூறியுள்ளார்.

''அமைதியான வழியில் மக்கள் கூடுவது, தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவது, தகவல் பரிமாற்றம் போன்றவற்றை தடுக்க அதிகாரிகள் கடும் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளகூடாது'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியா நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியில் இருந்து அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டிருந்தன. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டே, மொபைல் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதிகளில் பாதுகாப்பு படைகள் மற்றும் ஆயுதம் ஏந்திய குழுக்களால் நடந்த அத்துமீறல்கள் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் ஜூலை மாதத்தில் 43 பக்க அறிக்கையொன்றை வெளியிட்டது.

காஷ்மீரில் ஜூலை 2016-இல் தொடங்கிய வன்முறை போராட்டங்களை கட்டுக்குள் கொண்டுவர அதிக அளவு படைபலத்தை இந்திய தரப்பு பயன்படுத்தியதாக ஐ .நா கண்டறிந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

காஷ்மீரி இந்து பண்டிட் சமூகத்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது மற்றும் கொல்லப்பட்டது, மாநிலத்தில் வலுக்கட்டாயமாக பலர் காணாமல் ஆக்கப்பட்டது மற்றும் இந்திய பாதுகாப்பு படையினர் மீது கூறப்பட்ட பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு என காஷ்மீரில் முன்பு நடந்த வன்முறை மற்றும் அத்துமீறல்கள் தொடர்பாக நியாயம் கிடைக்கவில்லை என இந்த அறிக்கை குரல் எழுப்பியுள்ளது.

ஆனால் இந்த அறிக்கை ''பொய்யான மற்றும் தூண்டுதலால் உருவான ஒரு கதை'' என மறுத்துள்ள இந்திய அரசு, முக்கிய பிரச்சனையான எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்ற அம்சத்தை இந்த அறிக்கை புறக்கணித்துள்ளது என்று கூறியுள்ளது.

''மனித உரிமைகள் அத்துமீறல்கள் நடக்கவில்லை என மறுப்பதற்கு பதிலாக, கடந்தகால தவறுகளில் இருந்து இந்திய அதிகாரிகள் பாடம் கற்கவேண்டும். தங்கள் பொறுப்பை உணர்ந்து இனி அத்துமீறல்கள் நடக்காமல் தடுக்கலாம்'' என்று கங்குலி தெரிவித்தார்.

''ஐநா மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைகளை அமல்படுத்தவும், காஷ்மீரில் மனித உரிமைகளை பாதுகாக்கவும் இந்திய அரசுக்கு சம்மந்தப்பட்ட அரசுகள் மற்றும் ஐநா அமைப்பு ஆகியவை அழுத்தம் தரவேண்டும்'' என்று மேலும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :