ப.சிதம்பரம் முன்ஜாமின்: அவசர விசாரணைக்கு மறுத்த உச்ச நீதிமன்றம்

ப.சிதம்பரம் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ப.சிதம்பரம்

இந்திய அரசியலில் செல்வாக்கு மிக்க நபராக விளங்கிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாவதில் இருந்து இடைக்காலத் தடை வாங்குவதற்கான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவே ஒவ்வொரு நீதிமன்றமாக ஏறி இறங்க வேண்டியிருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

அவரது மனு இரண்டு முறை நீதிபதிகள் முன்பு வந்தபோதும், விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை.

முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமையன்று விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு குறித்த விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக சிதம்பரத்தைக் கைது செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க நேற்று டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை விசாரிக்கக் கோரி, நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு முறையிட்டார்.

ஆனால், அந்த அமர்வு, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று கோரி இதனை பரிந்துரை செய்வதாக கூறியது.

அப்போது, அதுவரை ப.சிதம்பரத்திற்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கபில் சிபில் முறையிட்டார்.

அதனையும் தலைமை நீதிபதி அமர்வே முடிவு செய்யும் என்று நீதிபதி ரமணா தெரிவித்தார்.

மேலும் அமலாக்கத்துறை ப.சிதம்பரம் வெளிநாடு செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

'2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும்'

செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் அவரது உதவியாளரிடம் தகவல் விசாரித்துச் சென்றனர். சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டுக்கு வந்தது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இட்ட டிவிட்டர் பதிவு:

சிதம்பரம் வீட்டில் இல்லாததால் வீட்டு சுவரில் நள்ளிரவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. விசாரணை தொடர்பாக இரண்டு மணி நேரத்திற்குள் சிபிஐ முன் தோன்றுமாறு நோட்டீஸில் குறிப்பிடப்பட்டது.

இந்த நோட்டீஸ் குறித்து சிதம்பரத்தின் வழக்கறிஞர் அர்ஷ்தீப் சிங் குரானா சிபிஐக்கு அளித்த பதிலில், 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று எனது கட்சிக்காரருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு எந்த சட்டவிதியின்படி பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று நோட்டீஸில் குறிப்பிடப்படவில்லை என்று சிபியின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவரது வழக்குரைஞர் மொஹித் மாத்தூர் உயர் நீதிமன்றத்தில் 3 நாள் அவகாசம் கேட்டார்.

அது பற்றி பரிசீலிப்பதாகக் கூறிய நீதிபதி சுனில் கௌர் பின்னர் அவகாச கோரிக்கையை மறுத்தார்.

உச்சநீதிமன்றத்தில் மனு

இதற்கிடையே, தாம் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை அணுகினார். இந்த மனுவே தற்போது தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.

முதலீடு பெற்ற நிறுவனத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ ப.சிதம்பரத்தின் மகன் கட்டுப்படுத்துவதால், அவரது தலையீட்டின்பேரிலேயே வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரிய அனுமதி அளிக்கப்பட்டதாக நம்புவதற்கு தங்களுக்கு காரணம் இருப்பதாக அமலாக்கப் பிரிவு நீதிமன்றத்தில் வாதிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்