அரசுக்கு தேவையான நிதி திரட்ட தனியார்மயமாக்கம்: எதிர்க்கும் அரசு ஊழியர்கள்

போராட்டம் படத்தின் காப்புரிமை AFP/Getty Images

இந்தியாவில் 24 அரசு நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மற்றும் தனியார்மயமாக்கல் நடைமுறைகள் விரைவில் தொடங்கவுள்ளன.

2019-20 நிதியாண்டில் ரூ.1.05 லட்சம் கோடி நிதி திரட்டுவது என்ற இலக்கை நோக்கி அரசின் முயற்சிகள் உள்ளன.

நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கவும், மக்கள் நலத் திட்ட செலவுகளை சமாளிக்கவும் இந்தப் பணம் பயன்படுத்தப்படும்.

பங்குகள் விற்பனை மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கையால் வேலைவாய்ப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் அஞ்சுகின்றனர். குறிப்பாக நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டால் இந்த ஆபத்து அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது.

அரசு நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் தனியார்மயமாக்கல் முடிவை எதிர்க்க முடிவு செய்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆளும் பாஜகவின் சார்புடைய பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளரான பிரஜேஷ் உபாத்யாய, ``இரண்டு காரணங்களுக்காக தனியார்மயமாக்கல் மற்றும் பங்குகள் விற்பனை முடிவை நாங்கள் எதிர்க்கிறோம். நிர்வாகம் தனியாரின் கைகளுக்குச் சென்றால் வேலையிழப்பு ஏற்படும் வாய்ப்பு நிச்சயமாகிவிடும் என்பது முதலாவது காரணம். தனியார் நிறுவனங்கள் தொழிலாளர் நலன்களைக் கவனிப்பதைக் காட்டிலும் லாபம் ஈட்டுவதில் தான் அதிக கவனம் செலுத்தும் என்பதை அனுபவத்தில் நாங்கள் பார்த்திருக்கிறோம் என்பதால் தனியார் மயமாக்கலை நாங்கள் எதிர்க்கிறோம். இது இரண்டாவது காரணம்'' என்று கூறியுள்ளார்.

பங்குகள் விற்பனை மற்றும் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் சட்டப்படி நடப்பதாக நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறுகிறார். ``தொழிற்சங்கங்களுடன் நாங்கள் பேசினோம். நட்டம் ஈட்டும் நிறுவனங்களில் வேலைபார்க்க விரும்பவில்லை. லாபம் ஈட்டும் நிறுவனங்களில் வேலைபார்க்க தாங்கள் விரும்புவதாக அவர்கள் கூறினர்'' என்று அவர் தெரிவித்தார்.

பங்குகள் விற்பனையைப் பொறுத்தவரை முதலாளி நிலைமையும், நிர்வாகமும் அரசிடம் தான் இருக்கும். இது வேலை இழப்புக்கோ அல்லது தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் சூழ்நிலையையோ உருவாக்காது. ஆனால் ஓர் அரசு நிறுவனத்தின் பங்குகள் முழுமையாகத் தனியாருக்கு விற்கப்பட்டால், முதலாளித்துவ நிலைமையை அரசு இழப்பதுடன், நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டையும் இழக்கிறது.

படத்தின் காப்புரிமை NurPhoto/Getty Images

தொழிலாளர்களை தொடர்ந்து பணியில் வைத்துக் கொள்வது அல்லது பணி நீக்கம் செய்வது என்பது புதிய முதலாளிகளின் விருப்ப உரிமையாகிவிடும். பெரும்பாலான நேரங்களில் தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள் அல்லது அவர்களுக்கு முன்கூட்டியே கட்டாய ஓய்வு அளிக்கப் படுகிறது.

அரசு ஊழியர்களின் செயல்திறனும், தொழில் நிபுணத்துவமும் குறைவாக இருப்பதாகக் கூறி தனியார் நிறுவனங்கள் இவ்வாறு செய்கின்றன.

இதை கடுமையாக மறுக்கிறார் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பி. அபிமன்யூ.

படத்தின் காப்புரிமை NOAH SEELAM/Getty Images

``எங்களுக்கு எதிரான புகார்கள் சரியானவை அல்ல. தனியார் நிறுவன அலுவலர்களுக்கு இணையான தொழில் நிபுணத்துவம் எங்களிடமும் உள்ளது. வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுத் தருவதற்கு நாங்கள் பல முகாம்கள் நடத்தியுள்ளோம். அனுசரணையாக நடந்து கொள்ள கற்றுத் தந்திருக்கிறோம்'' என்று அவர் கூறினார்.

நாங்கள் புத்திசாலிகள், இலக்குகளை எட்டியிருக்கிறோம். நிறுவனத்தின் மீது அக்கறை கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தனியார்மயமாக்கம் என்பது தொழிலாளர்களை தெருவில் நிறுத்திவிடுவது என்று பொருளாகிவிடாது என்று பொருளாதார நிபுணர் விவேக் கவுல் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை INDRANIL MUKHERJEE/GETTY IMAGES

“அலுவலர்களுக்கு நிதி அளிப்புத் திட்டங்கள் அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ``அலுவலர்களுக்கு தாமாக முன்வந்து ஓய்வுபெறும் வி.ஆர்.எஸ். திட்டம் அளிக்கப்படும். வைப்புநிதி அளிக்கப்படும். அவர்களுக்குப் பணிக் கொடை அளிக்கப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.

பி.எஸ்.என்.எல். அலுவலர் சங்கத்தில் 1.75 லட்சம் பேர் உள்ளனர். நாடு முழுக்க கிளைகளைக் கொண்டிருக்கிறது. ஆனாலும், மரணப் படுக்கையில் இருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனமாக அது இருக்கிறது. பணம் முதலீடு மற்றும் நவீனமயமாக்கல் சாத்தியப்படாமல் அந்த நிறுவனம் சிரமத்தில் உள்ளதாக திரு. அபிமன்யூ கூறுகிறார்.

ஏதோ காரணத்துக்காக 4ஜி அலைக்கற்றை சேவையில் ஈடுபட முடியாமல் அந்த நிறுவனத்தை அரசு தடுத்துவிட்டது.

இதற்காக அரசின் மீது அபிமன்யூ கோபமாக இருக்கிறார். ``பி.எஸ்.என்.எல். அழியட்டும்; அதை நவீனப்படுத்த வேண்டாம்; அதில் முதலீடு செய்ய வேண்டாம் என்பது தான் அரசின் அணுகுமுறை போலத் தெரிகிறது'' என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை AFP

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த நிறுவனத்தை அரசு புறக்கணிக்கிறது என்று அவர் கூருகிறார். இந்தப் புகார் பற்றிக் கேட்டதற்கு நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அலுவலர்கள் உபரியாக உள்ளனர் என்பதும், அந்த நிறுவனம் அதிக நட்டத்தில் இயங்குகிறது என்பதும் அரசு கூறும் காரணங்களாக உள்ளன. எனவே 50 வயதைத் தாண்டிய அலுவலர்களுக்கு வி.ஆர்.எஸ். திட்டம் ஒன்றை அரசு முன்வைத்துள்ளது.

பங்குகள் விற்பனைக்கான அரசு நிறுவனங்களின் பட்டியலில் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் சேர்க்கப்படுமா என்பது பற்றி இதுவரை தெளிவான எந்தத் தகவலும் இல்லை. ஆனால் 4ஜி அலைக்கற்றை பெற்றுக் கொள்ள அனுமதித்ததன் மூலம், சந்தையில் போட்டியில் ஈடுபட அந்த நிறுவனத்துக்கு அரசு அனுமதித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் அரசின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்று. இதை விற்பதற்கான நடைமுறைகளும் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் தொழிலாளர்களும் தங்கள் எதிர்காலம் பற்றி கவலை கொண்டிருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்க அரசு கடுமையான விதிமுறைகளை முன்வைத்தது. ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்யக் கூடாது என்பதும் அதில் அடங்கும். அந்த நிறுவனத்தை வாங்க யாருமே முன்வரவில்லை.

இந்த முறை விதிமுறைகள் மிகவும் தளர்த்தப் பட்டுள்ளன. அதை வாங்கக் கூடியவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு யாரையும் பணி நீக்கம் செய்ய முடியாது என்று விதிமுறை இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நாட்டில் வேலையில்லா பிரச்சினை தீவிரமாக உள்ள சூழ்நிலையில், பங்குகள் விற்பனை மற்றும் தனியார்மயமாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.

அரசின், குறிப்பிட்ட கால தொழிலாளர் நிலை கணக்கெடுப்பு (பி.எல்.எப்.எஸ்.) இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, 2017-18ல் நாட்டில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 1.82 கோடியாகவும், இளம் பெண்களின் எண்ணிக்கை 2.72 கோடியாகவும் இருந்தது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் இளைஞர்கள் மக்கள் தொகை 333 மில்லியன்களாக இருந்தது. அது 2021ல் 367 மில்லியனைத் தொடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தியாவில் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு குறித்து பி.எல்.எப்.எஸ். அமைப்பு காலாண்டுக்கு ஒரு முறையும், நகரம் மற்றும் கிராமப் புறங்களில் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து ஆண்டுக்கு ஒரு முறையும் அறிக்கை வெளியிடுகிறது.

படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN/Getty Images

2018 அக்டோபர் - டிசம்பர் மாதத்துக்கான அதன் அறிக்கையின்படி, நாட்டில் வேலைக்குச் செல்லும் தகுதியுள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வேலையில்லாமல் இருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

15 முதல் 29 வயது வரை உள்ள, வேலை தேடும் நிலையில் உள்ள நகர்ப்புற இளைஞர்களில் வேலையில்லா பிரச்சினை கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்றும், கடந்த ஆண்டு டிசம்பரில் வேலையில்லா இளைஞர்களின் அளவு 23.7 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2018 டிசம்பரில் முடிந்த காலாண்டில், வேலையில்லா பிரச்சினை பிகாரில் அதிகபட்சமாக (40.9%) இருந்தது. அதற்கடுத்து கேரளா (37%), ஒடிசா (35.7%) என்று இருந்தது. குறைந்தபட்ச இடத்தில் குஜராத் (9.6%) இருந்தது.

வேலைவாய்ப்பின்மை குறித்த அரசின் புள்ளிவிவரங்கள் பொதுத் தேர்தல்களுக்கு முன்பு வெளியானபோது, அவை இறுதி அறிக்கையில் உள்ள அம்சங்கள் அல்ல என்று மத்திய அரசு கூறியது.

இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிந்துள்ள நிலையில், வேலையில்லா திண்டாட்டம் மேலும் மோசமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN/Getty Images

ஆனால் வேலையில்லா திண்டாட்ட பிரச்சனை ஊதிப் பெரிதாக்கப் பட்டிருப்பதாக அரசு நம்புகிறது.

நரேந்திர மோதியின் ஆட்சிக் காலத்தில் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் பெருமளவு உயர்ந்திருக்கிறது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். இன்றைக்கு இந்தியா மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் அவர்.

வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மக்களுக்கு சமையல் எரிவாயு, மின்சாரம் கிடைத்துள்ளது. விவசாயிகளுக்கு பணம், கழிவறைகள் கிடைத்துள்ளன என்கிறார்.

``மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசு பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது, வாழ்வின் நிலை உயர்ந்துள்ளது'' என்று ராஜீவ் குமார் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: