ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: சிபிஐ-யின் மாண்பை குலைக்கிறதா? - முன்னாள் அதிகாரி ரகோத்தமன் பேட்டி

சிபிஐ அதிகாரிகளால் அழைத்து செல்லப்படும் ப. சிதம்பரம் படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES/GETTY IMAGES
Image caption சிபிஐ அதிகாரிகளால் அழைத்து செல்லப்படும் ப. சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்தபோது, சிபிஐ அதிகாரிகள் பரபரப்பாக செயல்பட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.

சிபிஐ அதிகாரிகள் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சம்மன் கொடுத்து சிதம்பரத்தை கைது செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ள நேரத்தில், சிபிஐ கைது நடைமுறையில் இதுவரை இல்லாத வகையில், சம்மன் கொடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் உடனடியாக கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது என விமர்சிக்கிறார் ரகோத்தமன்.

பிபிசி தமிழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து:

கேள்வி: முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்த முறையை பற்றி முன்னாள் சிபிஐ அதிகாரியாக உங்கள் கருத்து என்ன?

Image caption முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்

பதில்: சிதம்பரத்தை கைது செய்தது ஓவர் அக்சன் (over action) நிகழ்வு. பொதுவாக சம்மன் கொடுத்தவுடன் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஜாமீன் மனு செய்தால் அவரை உடனே கைது செய்யமாட்டோம். அவருக்கு ஒரு வாய்ப்பு இருப்பதால், உடனடி கைது இருக்காது.

சிதம்பரத்தின் வீட்டில் சுவற்றை எட்டிகுதித்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்த நடவடிக்கை முறையற்றது. சிபிஐ ஒரு புலனாய்வு பிரிவு. ஒருவரை கைது செய்ய தேவையான எல்லா ஆதாரங்களையும் திரட்டி, அவரை விசாரணைக்கு அழைத்து பின்னர் கைது செய்யலாம். அவர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் என்ற நிலையில் அவகாசம் தராமல் கைது செய்யக்கூடாது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், சிதம்பரம் முன்னர் பலமுறை ஆஜராகியிருக்கிறார். மேலும் செய்தியாளர் சந்திப்பை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடத்திவிட்டு, அவர் நேராக வீட்டுக்கு சென்றிருக்கிறார். அவர் கைது நடவடிக்கையை எதிர்பார்த்துத்தான் சென்றிருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று.

ஆனால் சிபிஐ அதிகாரிகள் சில நிமிடங்கள் கூட காத்திருக்காமல், சுவரை ஏறி குதித்து சென்றது சிபிஐ மீதான மாண்பைக் குலைக்கும் விதத்தில் அமைந்துவிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ப.சிதம்பரம் வெளிநாடு செல்லாமல் இருக்க அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.

சிதம்பரம் காணவில்லை, அவர் ஒளிந்துகொண்டிருக்கிறார் என தகவல் பரவின. அவர் காங்கிரஸ் அலுவலகத்தில் நேரில் வந்து பேசுகிறார். வீட்டுக்கு செல்கிறார் என்கிறபோது அவர் வெளியே ஓட வாய்ப்பில்லை என்பதை அதிகாரிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

அவரது வீட்டைச்சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கலாம். உடனே அவர் சரண்டர் ஆவார் என எதிர்பார்க்கக்கூடாது. அவருக்கு அவகாசம் கொடுத்து கைது செய்திருக்கலாம். உடனடி கைது என்பது உள்ளூர் காவல்துறை பின்பற்றும் முறை.

சிபிஐ என்பது அமெரிக்காவில் உள்ள எஃப்பிஐ போல மதிக்கப்படும் ஒரு புலனாய்வு நிறுவனம். ஆனால் சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதத்தில், சிபிஐ தேவையில்லாமல் பரபரப்பாகச் செயல்பட்டது போல தோன்றுகிறது.

சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்ற விதியை பின்பற்றியதாக பாஜகவினர் கூறுகின்றனர். சிதம்பரம் ஆஜராகியிருந்தால், அவரை கைது செய்ய இவ்வளவு முயற்சிகளை அதிகாரிகள் எடுத்திருக்கமாட்டார்கள் என்கிறார்கள்.

சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பது பேச்சுக்கு மட்டும்தான். சிபிஐ விதிகளின்படி, இணை செயலர் பதவி வகிக்கும் அதிகாரி மற்றும் அவருக்கு அடுத்த உயர் அதிகாரிகள், முன்னாள் மற்றும் பதவியில் உள்ள அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்ய சில கட்டுப்பாடுகளை பின்பற்றவேண்டும்.

அவர்களை கைது செய்ய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெறவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை சொல்கிறது.

முன்னதாக, உச்சநீதிமன்ற நீதிபதி வர்மா இந்த விதிமுறை பாரபட்சம் கொண்டதாக உள்ளது என கூறிய நீக்கினார்.

ஆனால் 1999ல் வாஜ்பேயி அரசாங்கம் இந்த விதியை மீண்டும் கொண்டுவந்தது. சட்டம் சமம் என்றாலும், சட்டத்தை செயல்படுத்தும் விதம் எல்லோருக்கும் சமமானதாக இல்லை என்பதுதான் உண்மை. சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என வாதிடுபவர்கள் இந்த விதிமுறை பற்றி தெளிவாக புரிந்துகொண்டு பேசவேண்டும்.

படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES/GETTY IMAGES
Image caption சிதம்பரத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு எதிராக தொண்டர்கள் முழக்கம்

முன்னதாக, சிதம்பரத்தின் வீட்டில் சம்மன் நோட்டீஸ் ஒட்டியது தவறு. சிபிஐ விதிமுறைகளின்படி சம்மன் நோட்டீசை குற்றஞ்சாட்டப்பட்டவர் அல்லது அவரது வீட்டில் உள்ள ஒருவரிடம் நேரில் கொடுத்து, சம்மனை பெற்றுவிட்டதற்கான கையெழுத்தை பெற்றுவரவேண்டும்.

சிவில் வழக்கில்தான், வீட்டுசுவற்றில் நோட்டீஸ் ஒட்டுவார்கள். சம்மன் கொடுத்து, மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்பது சிபிஐயில் பின்பற்றப்படும் நடைமுறை. இதை சிதம்பரம் கைதில் பின்பற்றவில்லை.

சிதம்பரம் தனது கருத்துக்களை தெரிவித்துவிட்டு வீட்டுக்கு செல்கிறார் என்கிறபோது, அவர் கைது செய்யப்படுவோம் என்பதை அறிந்துள்ளார். அவரை கைதுசெய்ய அதிகாரிகள் ஏன் இத்தனை அவசரமாக செயல்படுகிறார்கள்.

கேள்வி: சிதம்பரம் கைதானவுடன், சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் இந்த கைது நடவடிக்கை ஒரு நாடகம். தொலைக்காட்சிகளுக்கு பரபரப்பான காட்சிகளை வழங்குவதற்காக நடத்தப்பட்ட நாடகம் என குறிப்பிட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடந்தது என்கிறார். நீங்கள் சிபிஐ வழக்குகளில் இதுபோன்ற உடனடி கைது நடவடிக்கை எடுத்த நிகழ்வை குறிப்பிடமுடியுமா?

படத்தின் காப்புரிமை VISHAL BHATNAGAR/NURPHOTO VIA GETTY IMAGES

பதில்; கார்த்தி சிதம்பரம் இது ஒரு நாடகம் என்கிறார். பாஜக ஆதரவாளர்கள் இந்த கைது சட்டப்படி நடந்தது என்கிறார்கள்.

என்னை பொறுத்தவரை, சம்மன் கொடுத்தவுடன் கைது என்ற நடப்பை நான் இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. சிதம்பரம் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் பெயில் மனுவை நிராகரித்தவுடன் உடனடியாக கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் வேலைசெய்ய தொடங்கிவிட்டார்கள்.

உச்சநீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை விசாரிக்க வெள்ளிக்கிழமை வரை காத்திருக்கவேண்டும் என கூறிவிட்டது.

அதற்கு முன்னதாக அவசரமாக ஏன் கைதுசெய்யவேண்டும்? ஒருவேளை அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால், அவரை கைது செய்யமுடியாது என்பதால் உடனடியாக கைது செய்கிறார்கள் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

நான் 36 ஆண்டுகள் சிபிஐ பிரிவில் வேலை செய்தேன். இதுபோல சம்மன் அனுப்பியவுடன் கைது என்ற முறையை நான் பார்த்ததில்லை. குற்றஞ்சுமத்தப்பட்ட நபருக்கு வெறும் இரண்டு மணி நேரம் மட்டும் அவகாசம் கொடுத்து உடனே வரவேண்டும் என சொன்னது இதுவே முதல்முறையாக இருக்கும்.

1977ல் இந்திரா காந்தியை ஊழல் வழக்கில் சிபிஐ கைது செய்யவேண்டும் என்று முடிவு. அந்த அதிகாரிகள் குழுவில் நானும் இருந்தேன். காலையில் சம்மன் கொடுத்து, அவரது பதிலை பெற பொறுத்திருந்தோம். இணக்கமாக அந்த கைது நடவடிக்கை அமைந்தது. சிபிஐ அதிகாரிகள் கண்ணியமாக நடக்கவேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: