அருண் ஜெட்லியை தாக்கிய 'சாஃப்ட் திசு புற்றுநோய்' பற்றி தெரியுமா?

Arun Jaitley படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி சனிக்கிழமை மதியம் காலமானார்.

சிறுநீரக செயலிழப்பு மற்றும் மிகவும் அரியதொரு வகையான புற்றுநோயால் அவர் துன்புற்று வந்தார்.

மூச்சுத் திணறலால் துன்புறுவதாக ஜெட்லி கூறியதால், ஆகஸ்ட் 9ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், அவரது நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

எய்ம்ஸ் வெளியிட்ட மருத்துவ குறிப்பில், அவரது நிலைமை மோசமாகவே இருப்பதாகவும், ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவரது இதயம் சரியாக இயங்குவதையும் அந்த மருத்துவக் குறிப்பு தெரிவித்தது.

படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES/Getty Images

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் முதலாவது ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, சாஃப்ட் திசு சர்கோமா (Soft Tissue Sarcoma) என்ற அரியதொரு புற்றுநோயால் துன்புற்று வந்தார்.

திசுக்கள், தசைகள், தசைநார்கள், மூட்டுகள் மற்றும் பிற உடல் அமைப்புகள் வழியாக மிகவும் மெதுவாகப் பரவுவதால், இந்த வகைப் புற்றுநோயை கண்டறிவது மிகவும் கடினம்.

மருத்துவ நிபுணர்கள் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், மனித உடலில் புற்று அல்லாத பல கட்டிகள் உள்ளன. இவை உடலின் பிற பகுதிகளுக்கு பரவுவதில்லை. உயிருக்கு ஆபத்தானதும் அல்ல. ஆனால், புற்றாக மாறுவதற்குச் சாத்தியமுடைய கட்டிகள் படிப்படியாகக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிடுகின்றன. இதுதான் ’சாஃப்ட் திசு சார்கோமா’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த நோய் உடலின் எந்த பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம் என்றும், பொதுவாக கைகள் மற்றும் கால்களிலுள்ள தசைகளை பாதிக்கிறது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தசைகளில் வீக்கம், எலும்புகள் மற்றும் கட்டிகளில் ஏற்படும் வலி நீண்டகாலம் தொடர்வது இந்த நோய்க்கான அறிகுறிகளாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

மருத்துவ அறிக்கைகளின்படி, அருண் ஜெட்லியின் இடது கால் சாஃப்ட் திசு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த காலில் அறுவை சிகிச்சை செய்ய அருண் ஜெட்லி அமெரிக்கா சென்று வந்தார்.

சிறுநீரக மற்றும் இதய நோயாலும் பாதிப்பு

சிறுநீரக நோயாலும் அருண் ஜெட்லி துன்புற்றிருந்தார். கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

அப்போது அவர் நிதியமைச்சராக இருந்தார். இந்த சிகிச்சையின்போது, நிதி அமைச்சக பொறுப்பு பியூஸ் கோயலிடம் வழங்கப்பட்டது.

நலமடைந்த பின்னர், 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிதி அமைச்சராக அருண் ஜெட்லி மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த ஆண்டு தனது சிறுநீரக நோய் பற்றி அருண் ஜெட்லியே ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். கடந்த ஆண்டு டயாலிஸிஸ் மேற்கொள்ள எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்ட பின்னர், "சீறுநீரம் மற்றும் நோய்த் தொற்று தொடர்பாக நான் சிகிச்சை பெற்று வருகிறேன்," என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்

சிறுநீரக சிக்கல்களுக்கு அப்பாற்பட்டு, அருண் ஜெட்லி பிற நோய்களாலும் துன்புற்றார். 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரைப்பையில் கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அருண் ஜெட்லி, 2005ம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோதியின் அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றபோது, தனது உடல்நலக்குறைவைச் சுட்டிக்காட்டி அமைச்சர் பொறுப்பு எதுவும் வேண்டாம் என்று ஜெட்லி கூறிவிட்டார்.

அவருக்குப் பதிலாக, நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: