நிர்மலா சீதாராமனின் பொருளாதார சலுகை அறிவிப்புகள்: யானைப்பசிக்கு சோளப்பொரியா?

நிதியமைச்சரின் பொருளாதார சலுகை அறிவிப்புகள்: யானைப்பசிக்கு சோளப்பொரியா? படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நிர்மலா சீதாராமன்

வீழ்ந்து போன இந்திய பொருளாதாரத்தை, உடைந்துபோன முதலீட்டாளர்களின் நம்பிக்கையை, சரிந்து கொண்டிருக்கும் பங்கு சந்தையை சரிசெய்ய பத்து நாட்களுக்கும் மேலாக அனைவரும் எதிர்பார்த்திருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பொருளாதார சலுகைகள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இவற்றில் முக்கியமானவை கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு தற்போது திரும்ப பெறப்பட்டவை. இவை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மீது விதிக்கப்பட்ட மூலதன ஆதாயத்தின் மீதுள்ள வரிக்கு மேலான சர்சார்ஜ், தொழில் நிறுவனங்கள் செய்யவேண்டிய சமூக பொறுப்புகளில் (Corporate Social Responsibility) விதிமீறல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்படாது மற்றும் ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட ஏஞ்சல் வரியினை திரும்ப பெறுதல்.

இது தவிர பொதுத்துறை வங்கிகளின் கடன்வழங்க ஏதுவாக ருபாய் 70,000 கோடி மறுமுதலீடு மத்திய அரசு வழங்கும். மேலும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தோடு ( Repo Rate) வங்கிகளின் வட்டி விகிதம் ஒன்றிணைக்கப்படும். ஆட்டோ மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான ஒருசில அறிவிப்புகள். கூடவே சில நிர்வாக சீர்திருத்தங்கள். இவை அனைத்தும் எந்த ஒரு நிதிச்சுமையும் இல்லாதவை.

நமது பொருளாதாரம் சந்தித்து வரும் வரலாறு காணாத பின்னடைவுகளுக்கும் அதனலான விளைவுகளுக்கும் இந்த அறிவிப்புகள் போதுமானதா? நமது அனைத்து பிரச்சனைகளுக்கும் இது தீர்வாகுமா? என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

"நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை செய்த அறிவிப்புகள் அனைத்திலும் மிகவும் வரவேற்கத்தக்கது "எல்லாம் எமக்கு தெரியும்" என்ற போக்கை கைவிட்டு தொழில்துறையின் கவலைகளை கேட்டு பதிலளிக்க தயாரானதே" என்று எகனாமிக் டைம்ஸின் தலையங்கம் பாராட்டுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய பொருளாதாரம் கடந்த பத்து ஆண்டுகளாகவே தொடர் பின்னடைவை சந்தித்து வருகின்றது. சரிவை சரிசெய்வோம் என்று வாக்குறுதியளித்து 2014 தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக அரசு தனது பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், அவசரகதியில் அமல்படுத்தப்பட்ட G.S.T. வரியாலும் பொருளாதார சரிவின் வேகத்தை அதிகப்படுத்தியது.

இவற்றுக்கெல்லாம் மேலாக பொருளாதார பின்னடைவை என்றுமே அங்கீகரிக்காமல் பொருளாதாரம் நன்றாகவே உள்ளது என்றும் அதற்கேற்றவாறு புள்ளிவிவரங்கள் ஒப்புக்கொள்ளும்வரை அவற்றை துன்புறுத்தியும் வந்தது. ஆனால் அரசியில் பிரச்சனைகளை மூடி மறைப்பது போல் பொருளாதார பிரச்சனைகளை மறைக்க முடியாத சூழல்களில் 'முத்தலாக்' ' காஷ்மீர்' போன்ற அரசியில் பிரச்சனைகளை கொண்டு திசைதிருப்புவதுமாக இருந்த போக்கிலிருந்து இந்த மாற்றத்தை வரவேற்வேண்டியதுதான்.

மேலும் இந்த அறிவிப்புகளின் அடிப்படையே பட்ஜெட்டில் செய்த தவறை திருத்திக்கொள்வதென்பதால் ஒன்றிரெண்டு துறை சார்ந்த அதுவும் ஒருசில அறிவிப்புகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிரெண்டு அறிவிப்புகள் வரவிருப்பதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.

இது ஆட்டோ போன்ற ஒருசில நிறுவனங்களையோ, வெளிநாட்டு முதலீட்டாளர்களையோ திருப்திபடுத்தலாம். பங்குச்சந்தையின் தொடர் சரிவைகூட முடிவுக்கு கொண்டு வரலாம். ஆனால் சரியும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை தடுத்து நிறுத்தி அதை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தொழில் துறை அதுவும் ஒன்றிரெண்டு , வெளிநாட்டு முதலீட்டார்கள் பங்குச்சந்தை தாண்டி நமது நாட்டில் விவசாயம், கிராமப்புறம், முறைசாரா துறை, ஏற்றுமதி, இறக்குமதி என்று அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்காண வேலையிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது. அதன் விளைவாக தனி மனித வருமானம் குறைந்து ,வாங்கும் சக்தி சரிந்து அதனால் உற்பத்தி செய்த பொருள்கள் விற்பனையின்றி தேங்கியுள்ள சூழல் எழுந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதன் விளைவு மேலும் உற்பத்திக்குறைவு, வேலையிழப்பு வருமானக்குறைவு, தேவைக்குறைவு அதிகமாகி வருவதால் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் கீழ் நோக்கி போகும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிதியமைச்சரின் அறிவிப்புகள் யானைப்பசிக்கு சோளப்பொரி வழங்கியது போன்றுதான்.

இன்றைக்குள்ள முக்கியமான சவால் தனியார் முதலீடுகள் செய்ய வேண்டும். நுகர்வோர் வேலைபெற்று செலவு செய்ய வேண்டும். வங்கிகள் வங்கிகளில்லாத நிதி நிறுவனங்கள் கடன் வழங்க முன் வர மீண்டும். இவையெதுவுமே இன்று நடக்க வில்லை. இந்த சூழலில் மத்திய அரசின் கொள்கை நிலைப்பாடு இரண்டு விதமாக உள்ளது. ஒன்று நிதிக்கொள்கை Fiscal Policy) மற்றொண்று பணக்கொள்கை (Monetary Policy ).

பணக்கொள்கை

கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை (ரெபோ ரேட்) நான்கு முறை அதாவது 110 புள்ளிகள் குறைத்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த பொதுமக்களின் தேவைக்காகவும் மற்றும் தனியார் முதலீடுக்காகவும் வங்கிகளில் மக்கள் கடன் பெறுவார்கள் அது உற்பத்தியினை ஊக்குவித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த முயற்சிகள் எந்த ஒரு பலனையும் இதுவரை தரவில்லை. மாறாக தனியார் முதலீடு, பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் முதலீடுகள் நடக்கும் என்றோ, நுகர்வோர் கடன்பெற விரைவார்கள் என்றோ எதிர்பார்ப்பது அப்பாவித்தனமானது.

வட்டி விகிதம் குறைந்தால் வங்கிகள் உடனே கடன் கொடுக்க முடியாது. 8-9 லட்சம் கோடி ருபாய் வாராக்கடன் தொல்லையிலிருந்து அவர்கள் மீண்டால் கடன் கொடுக்க முன்வருவார்கள். அப்படியே அவர்கள் கடன் கொடுக்க முன் வந்தாலும் தனியார் யாரும் ஓடி வந்து முதலீடு செய்ய மாட்டார்கள். காரணம் அவர்கள் ஏற்கனவே உற்பத்தி செய்து விற்காமல் தேங்கியுள்ள பொருள்கள் விற்பனையாகி உயர்ந்து வரும் உபரி உற்பத்தித்திறன் (excess productive capacity) முழுவதும் பயன்படுத்தப்பட்டால் தான் அதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

முதலீடுகள் என்பது வட்டிவிகிதத்தை மட்டும் சார்ந்திருப்பது கிடையாது. பல்வேறு காரணிகள் முதலீட்டு முடிவுகளை தீர்மானிக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது மனோதத்துவ ரீதியதானது. அதாவது எதிர்காலத்தை பற்றிய அனைவரின் எதிர்பார்ப்பு எப்படியிருக்கின்றது என்பதை பொறுத்தே அது அமையும் என்கிறார் பொருளியல் மேதை கீன்ஸ்.

பொருளாதாரம் சரித்துக்கொண்டுள்ள இந்த சூழலில் எதிர்காலம் பற்றிய கணிப்புகள் கவலைக்கிடமாகவே உள்ளதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையற்று இருக்கும் நிலையில் அரசு தனது நடவடிக்கையின் மூலம் அவற்றை சரி செய்வதற்கு மாறாக தொடர்ந்து அந்த நம்பிக்கையினை மேலும் தகர்க்கும் வண்ணம் செய்து வரும் பணமதிப்பிழப்பு, G.ST., அண்மை பட்ஜெட் போன்ற வற்றை தவிர்க்க வேண்டும். தவிர அனைத்து தரப்பினரின் தேவை குறைந்துள்ள இன்றைய நிலையில் வட்டிக்குறைப்பை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது.

நிதிக்கொள்கை

இப்படி பணக்கொள்கை உதவாத சூழலில் அரசு முன்வந்து நிதிக்கொள்கை மூலம் முதலீட்டு செலவுகளையும், அடிப்படை கட்டுமான முக்கியமாக ஊரக கட்டுமான செலவுகளை உயர்த்தி இந்த பெரும் மந்தத்திலிருந்து பொருளாதாரத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்பது தொழிலதிபர்கள், முதலீட்டார்கள் மற்றும் பொருளாதார அறிஞர்களின் நிலைப்பாடு.

தனது சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோதி அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு அடிப்படை கட்டுமானங்களுக்கு 100 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்து 5 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான பொருளாதாரத்தை உருவாக்குவோம் என்று வழக்கம் போல் சூளுரைத்தார். அப்படியானால் அரசு ஆண்டுக்கு 20 லட்சம் கோடிக்கு முதலீடு செய்ய வேண்டும்.

இதற்கான நிதி ஆதாரங்களுக்கு ஏதாவது வாய்ப்பு உள்ளதா என்று பார்ப்போம். மத்திய அரசின் தற்போதைய நிதி நிலையினை அட்டவணை தெளிவு படுத்துகின்றது. நடப்பு நிதியாண்டியின் மொத்த செலவு 27.9 லட்சம் கோடி ருபாய். அனால் வரவு வெறும் 19.6 லட்சம் கோடி ருபாய். இந்த பற்றாக்குறையினை சரி செய்ய அரசு பட்ஜெட்டுக்குள் வாங்கும் கடன் 7 லட்சம் கோடி ருபாய் பட்ஜெட்டுக்கு வெளியில் வாங்கும் கடன் 5-6 லட்சம் கோடி. இந்த கடன்களுக்கு செலுத்தும் வட்டி தான் அரசின் செலவுகளில் மிக அதிகமானது. மேலும் பட்ஜெட்டுக்குள் வாங்கும் கடன் முழுவதும் வட்டி செலுத்தவே சரியாக உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில், 2019-20 முதலீட்டு செலவு வெறும் 3.4 லட்சம் கோடி ருபாய் தான். இது சென்ற (2018-19) ஆண்டைக்காட்டிலும் ( 3.2 லட்சம் கோடி ) வளர்ந்த விகிதம் வெறும் 7 சதவீதம். ஆனால் வருவாய் செலவு, கடன் வாங்குவது போன்றவை இரண்டு இலக்கங்களில் வளர்கின்றன. இந்த வேகத்தில் அரசு 20 லட்சம் கோடி ருபாய் எங்கிருந்து செலவு செய்யும் என்பது மற்ற புள்ளி விவரங்களை போன்றே ஒரு புரியாத புதிர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்வெள்ளிக்கிழமை இது பற்றி எதுவும் அறிவிக்கவில்லை.

பணக்கொள்கை பலனளிக்காத இந்த சூழலில் நிதிக்கொள்கைக்கான வாய்ப்புகள் கடினமாக உள்ள இந்த சூழலில் தொழில்துறை முதலீட்டாளர்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்கவதை நிறுத்தி, அரசு சாதாரண மக்களின் தேவையினை ஊக்கப்படுத்தும் அளவுக்கு பெட்ரோல் டீசல் போன்றவற்றின் மீதான உயர்ந்த பட்ச ஜிஎஸ்டி வரிகளை குறைத்து, ஊரக செலவுகளை உயர்த்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

மேலும் பொருளாதார பிரச்சனைகளை சரியான முறையில் ஆய்ந்து ஆலோசனை வழங்க சிறந்த அனுபவமிக்க பொருளாதார வல்லுநர்கள் மத்திய அரசிடம் இன்றைக்கு இல்லை. கடந்த 70 ஆண்டுகளாக மொகலானபிஸ், வி. கே. ஆர். வி. ராவ், கே.என். ராஜ் சுக்மாய் சக்கரவர்த்தி, மன்மோகன் சிங், கௌஷிக் பாசு, ரகுராம் ராஜன் போன்ற உலக புகழ்பெற்ற தலைசிறந்த பொருளாதார அறிஞர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே பொருளாதார முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த அரசிலும் உர்ஜித் படேல், அரவிந்த் சுப்பிரமணியம், பனகாரியா போன்ற தலை சிறந்த அறிஞர்கள் இருந்த போதிலும், வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் திரும்பி சென்று விட்டனர். இன்றைக்கு பெயர் சொல்லக்கூடிய அளவிற்கு பொருளியல் வல்லுநர்கள் யாரும் மத்திய அரசில் இல்லை.

(இந்திய பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து ஏராளமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் இவ்வேளையில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பொருளாதார சலுகை அறிவிப்புகள் மற்றும் நிதி அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம் எழுதியுள்ள கட்டுரை இது. இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்