பி.எஸ்.எஃப். தலைமை இயக்குநர் ரஜினிகாந்த் மிஸ்ரா பிரிவுபசார நிகழ்வால் படையில் அதிருப்தி ஏற்படக் காரணம் என்ன?

ரஜினிகாந்த் மிஸ்ரா படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரஜினிகாந்த் மிஸ்ரா

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் (பி.எஸ்.எப்.) ஒரு பிரிவினருக்குள் அதிர்ச்சியளிக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

பதவிக் காலத்தை நிறைவு செய்து செல்லும் அப்படையின் டைரக்டர் ஜெனரலுக்கு பிரிவுபசார இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விதம்தான் இதற்குக் காரணம் என்று, இந்தச் செய்தியாளரிடம் பேசிய பி.எஸ்.எப். படையை சேர்ந்த சிலர் கூறினர்.

கமாண்டண்ட் ரேங்க்கில் உள்ள மற்றும் 2வது பொறுப்பு நிலையில் உள்ள (2IC) -20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள அதிகாரிகள் மற்றும் துணை மற்றும் உதவிக் கமாண்டண்ட்கள் 15 பேருக்கு இந்த விருந்தில் `தகுதி குறைவானவை' என கூறப்படும் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவர்களில் கமாண்டன்ட்களும், 2வது பொறுப்பு நிலை அதிகாரிகளும் தங்கள் பட்டாலியன்களில் 1000 போரிடும் படையினருக்கு தலைமை வகிப்பவர்கள், துணை கமாண்டண்ட்கள் மற்றும் உதவிக் கமாண்டண்ட்கள் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களைக் கொண்ட சிறு பிரிவுகளுக்குத் தலைமை வகிப்பவர்கள். படைகளின் போரிடும் குழுவில் முக்கிய நிலையில் இருப்பவர்கள்.

`டைரக்டர் ஜெனரலுக்கு பிரிவுபசார இரவு விருந்து: கமிட்டிகளின் விவரங்கள்' என்ற தலைப்பில் புதுடெல்லி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஒப்புதலுடன் 2019 ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியிடப்பட்ட குறிப்பு தான் சர்ச்சைக்கு மையப் புள்ளியாக இருக்கிறது.

`டைரக்டர் ஜெனரலுக்கு பிரிவுபசார நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிவதை' உறுதி செய்வதற்காக இந்தக் குறிப்பு வெளியிடப் படுவதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கசிந்து வெளியான அந்தக் குறிப்பை இந்தச் செய்தியாளர் படித்துப் பார்த்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

விவரங்கள்:

  • `மூத்த அதிகாரிகள் / விருந்தினர்கள், பெண் விருந்தினர்களை வரவேற்பது மற்றும் அழைத்து வருதல்' பணிக்காக `வரவேற்புக் கமிட்டியில்' இரண்டு கமாண்டண்ட்கள் உள்பட ஐந்து அதிகாரிகள் இருப்பார்கள்.
  • `பதவியில் இருக்கும் அதிகாரிகள் பார்களில் கூட்டமாக சேருவதைத் தவிர்த்தல், மூத்த அதிகாரிகள் / விருந்தினர்களுக்கு அவ்வப்போது மது வகைகள் வழங்கப் படுவதை உறுதி செய்தல்' பணிகளைக் கவனிப்பதற்கு, `பார் கமிட்டி'யில் மூன்று அதிகாரிகள் இருப்பார்கள்.
  • `ஸ்நாக்ஸ், மது வகைகள், சூப் மற்றும் டின்னர் ஆகியவை லவுஞ்ச் பகுதியில் அவ்வப்போது விருந்தினர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும்' உறுதி செய்வதற்கு `ஸ்நாக்ஸ் மற்றும் இரவு விருந்து கமிட்டி'யில் நான்கு அதிகாரிகள் இருப்பார்கள்.
  • `மூத்த அதிகாரிகள் / அழைக்கப்பட்ட விருந்தினர்கள் தங்கள் இடங்களுக்குச் செல்வது மற்றும் அவ்வப்போது காத்திருப்பு அலுவலர்கள் அவர்களுக்கு சேவை செய்வது' ஆகியவற்றை உறுதி செய்வதற்கான `இருக்கை ஏற்பாட்டு கமிட்டியில்' மூன்று அதிகாரிகள் இருப்பார்கள்.
  • `மகளிருக்கான பகுதியில் மது வகைகளும், ஸ்நாக்ஸ்களும் கிடைக்கும் சேவையைக் கவனிக்க' ஓர் அதிகாரி நியமிக்கப் படுவார்.

தலைநகரில் நிஜாமுதீனில் பி.எஸ்.எப். அதிகாரிகள் உணவகத்தில் 2019 ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிரிவுபசார இரவு விருந்து நடைபெறவுள்ளது.

``நிகழ்ச்சிக்கு இரண்டு மணி நேரம் முன்னதாக, மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் புதுடெல்லி பிராண்ட்டியர் ஐ.ஜி.யின் அறிவுரைகளைக் கேட்பதற்கு ஆஜராகிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. நிகழ்ச்சி நேரம் முழுக்க அவர்கள் அனைவரும் அங்கிருந்து கவனமாகப் பணியாற்ற வேண்டும்'' என்று அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

``கேட்டரிங் நிறுவனங்கள் செய்யக் கூடிய பணிகளில் 15 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப் பட்டிருப்பது அவமதிக்கும் செயலாக உள்ளது. நாங்கள் நாட்டுக்கு சேவை செய்வதற்காக படையில் சேர்ந்தோமா அல்லது மூத்த அதிகாரிகளின் ஈகோவுக்கு சேவை செய்ய பணியில் சேர்ந்தோமா?'' என்று ஓர் அதிகாரி தெரிவித்தார். இப்படி கருத்துத் தெரிவிப்பது படையின் விதிகளுக்கு எதிரானதாகும் என்பதால் அவர் தமது பெயரை வெளியிட விரும்பவில்லை.

``இதுபோன்ற பணிகளை முந்தைய நிகழ்வுகளில் அதிகாரிகள் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பணிகள், அதை வெளிப்படுத்தியுள்ள தொனி ஆகியவை மோசமான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளன'' என்று பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு பி.எஸ்.எப். அதிகாரி கூறினார்.

இதுகுறித்து பி.எஸ்.எப். டைரக்டர் ஜெனரல் திரு. ரஜினிகாந்த் மிஸ்ராவிடம் கேட்கப்பட்டது. அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வந்துள்ள ஐ.பி.எஸ். அதிகாரி. ``இந்த பிரிவுபசார நிகழ்ச்சி அதிகாரிகளால் நடத்தப் படுகிறது. நான் இந்த நிகழ்வில் ஒரு விருந்தினர். வெளிப்படையாகக் கூறினால் எனக்கு இன்னும் அழைப்பிதழ் வரவில்லை. எந்த அதிகாரி ஓய்வு பெறும்போதும் நாங்கள் விருந்து அளிப்பது வழக்கம் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்'' என்று அவர் கூறினார்.

படையினர் அதிருப்தி தெரிவித்துள்ளது பற்றி அவருக்குத் தெரியுமா என்று கேட்டதற்கு, ``அந்த விவரங்கள் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது உண்மையாக இருந்தால், மிகவும் துரதிருஷ்டவசமானது. அடிப்படையில் படையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருப்பதை பி.எஸ்.எப். அதிகாரிகள் விரும்புவது இல்லை. என்னுடைய பிரிவுபசார நிகழ்ச்சி, கடந்த கால சர்ச்சைகளுக்கு கணக்கு தீர்த்துக் கொள்ளும் நிகழ்வாகப் பயன்படுத்தப்படுகிறது'' என்று கூறினார்.

பி.எஸ்.எப். பொறுப்பில் 2018 செப்டம்பர் 30ல் இருந்து மிஸ்ரா இருந்து வருகிறார். அவர் உத்தரப்பிரதேச மாநில ஐ.பி.எஸ். பட்டியலில் உள்ளவர். 2019 ஆகஸ்ட் 31 ஆம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார்.

இதுபற்றி விசாரிக்க முற்பட்டபோது, பி.எஸ்.எப். செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பி.எஸ்.எப். கூடுதல் டைரக்டர் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்ற எஸ்.கே.சூட் இதுபற்றி கருத்து கூறியபோது, ``இது தகுதிக் குறைபாடான செயல் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நிஜாமுதீன் உணவகம் போன்ற இடங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முழுமையாக தயார் நிலையில் இருப்பவை. பயிற்சி பெற்ற வீரர்களையும், இத்தனை அதிகாரிகளையும் இதில் ஈடுபடுத்தவேண்டிய அவசியம் என்ன? இது நல்ல யோசனையில்லை'' என்று கூறினார்.

``பிரிவுபசார இரவு விருந்து அளிப்பது பற்றி நான் சர்ச்சை எழுப்பவில்லை. அது வழக்கமான செயல்பாடு தான். இருந்தபோதிலும், எந்த வகையில் அதற்கு ஏற்பாடு செய்யப் படுகிறது என்பதில் நாம் நிச்சயமாக புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். என் அனுபவத்தில் பார்த்தவரை, இதுபோன்ற களப்பணிகளை கேட்டரிங் பிரிவினரே செய்வார்கள். இந்தப் பெயர்களும், கமிட்டிகளும் ஆட்கள் தங்களை முக்கியமானவர்கள் என்று உணரச் செய்வதற்கானவை மட்டுமே'' என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.) பணியாற்றி ஓய்வு பெற்ற டைரக்டர் ஜெனரல் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரியான ஒருவர் தெரிவித்தார்.

எல்லைப் பாதுகாப்புப் படையில் சுமார் 2,65,000 பேர் உள்ளனர். பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லைகளில் இந்திய எல்லைகளைக் காக்கும் முதன்மையான கடமையில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்துடன் உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிகள் பலவற்றிலும் அவர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

கடந்த காலத்தில் இதேபோன்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன.

உதாரணமாக, 2016 ஆம் ஆண்டில் அப்போதைய பி.எஸ்.எப். டைரக்டர் ஜெனரல் ஓய்வுபெற்ற போது நடந்த அணிவகுப்பில், எல்லைகளில் இருந்து 6600 வீரர்கள் பணியில் இருந்து வரவழைக்கப்பட்டு டெல்லியில் தங்க வைக்கப்பட்டனர். அதே ஆண்டில், சி.ஆர்.பி.எப். டைரக்டர் ஜெனரலின் மனைவியால் சர்ச்சை எழுந்தது. சி.ஆர்.பி.எப். வீரர்கள் அவருக்கு ஆடம்பரமான பிரிவுபசாரம் வழங்குவதை வெளியிடப்படாத புகைப்படங்கள் காட்டின.

பி.எஸ்.எப். மற்றும் சி.ஆர்.பி.எப். ஆகியவை மத்திய ஆயுத துணை ராணுவப் படைகள் (CAPF) ஆகும். இவற்றில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்