"ஆதி திராவிடர்களுக்கு தனி காவல் நிலையம் இல்லாதபோது தனி சுடுகாடு ஏன்?" நீதிமன்றம் கேள்வி

வேலூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தில் தலித் ஒருவரின் சடலத்தை பட்டா நிலத்தின் வழியாகக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தனி சுடுகாடு அமைத்துக் கொடுத்திருப்பது அரசே ஜாதியை ஊக்குவிப்பதுபோல இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த 55 வயதான குப்பன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.
அவரது உடலை அங்குள்ள மண்ணாற்றங்கரையில் தகனம் செய்யச் செல்லும்போது, தங்களது நிலத்தின் வழியாக எடுத்துச் செல்வதற்கு நிலத்தின் உரிமையாளர் தரப்பு மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து ஆற்றின் மேல் உள்ள பாலத்திலிருந்து கயிறு கட்டி குப்பனின் சடலத்தை ஆற்றுக்குள் இறக்கினர். கீழே இருந்தவர்கள் சடலத்தைப் பெற்றுக் கொண்டு, மண்ணாற்றங் கரையில் குப்பனுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தனர். குப்பனின் சடலம் இறக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் கடந்த புதன்கிழமையன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின.
ஊடகங்களில் வெளியான இது தொடர்பான செய்திகளை மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வின் முன்பாக கொண்டுவந்தார்.
இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம்கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம், நாராயணபுரம் ஊராட்சி பணந்தோப்பு பகுதியில் அரசுக்குச் சொந்தமாக உள்ள 3.16 ஏக்கர் நிலத்தில், 50 சென்ட் நிலத்தை ஆதி திராவிடர்களின் இடுகாட்டிற்காக ஒதுக்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாராயணபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கென தனி மயானம் அமைக்கப்பட்டுள்ளதாக தாசில்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஆதிதிராவிடர்களுக்கென தனியாக மருத்துவமனைகளோ, அரசு அலுவலகங்களோ, காவல் நிலையங்களோ இல்லாத நிலையில் அவர்களுக்கு என தனியாக மயானம் அமைத்துக் கொடுப்பதென்பது அரசே ஜாதிப் பிரிவினையை ஊக்குவிப்பது போல் உள்ளது என நீதிபதிகள் கூறினர்.
தெருக்களில் இருந்த ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும்போது, 'ஆதிதிராவிடர் நலப்பள்ளி' என்ற பெயர்களை நீக்காதது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பிறகு இந்த விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது, அரசு நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பனவற்றை மனுவாகத் தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
பிற செய்திகள்:
- சானிடரி நாப்கின், டயாப்பர் பொருட்களின் விலை குறைகிறதா?
- பும்ராவின் புயல்வேக பந்துவீச்சில் இந்தியா அபார வெற்றி - உலகை மிரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு என்ன ஆனது?
- ஜி7 மாநாட்டில் திடீரென கலந்து கொண்ட இரான் அமைச்சர்: வியப்பில் அமெரிக்கா
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் சிந்து
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்