ஐ.ஜி. முருகன் மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகார்: தெலங்கானாவுக்கு மாற்றம்

லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. மீதான பாலியல் புகார்: தெலங்கானாவுக்கு மாற்றம்

லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. முருகன் மீது காவல்துறை பெண் அதிகாரி அளித்த பாலியல் புகாரை தெலங்கானா காவல்துறை விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. முருகன் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக அவருக்குக் கீழ் பணியாற்றும் பெண் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் குறித்து விசாரிக்கக் கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து தமிழக காவல்துறை தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்தப் புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரிக்க வேண்டுமென பரிந்துரைத்தது.

விசாகா குழுவில் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதியை நியமிக்கக் கோரியும், முருகனை பணிமாற்றம் செய்யக் கோரியும் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீ லட்சுமி பிரசாத் தலைமையில் புதிய விசாகா குழு அமைக்கப்பட்டது.

இதற்கிடையில், தனக்கு எதிரான சி.பி.சி.ஐ.டி. விசாரணையை எதிர்த்து ஐ.ஜி. முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். காவல் துறையிலேயே விசாகா கமிட்டி உள்ளதால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டப்படி நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டிக்கு உத்தரவிட்டதோடு, ஐ.ஜி. முருகனுக்கு எதிராக பணி விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

தன் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐ.ஜி. முருகன் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த ஆதிகேசவலு, சசிதரன் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்தது.

இதற்கிடையில், வழக்கு இந்த அமர்விலிருந்து வழக்கு வினித் கோத்தாரி, சி.வி. கார்த்திகேயன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரு கமிட்டிகளிலும் பெண் அதிகாரிக்கு திருப்தி இல்லை என்பதால், நீதிமன்றம்தான் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டுமெனக் கூறினார். அப்போது, நீதிமன்றம் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றலாமா எனக் கேட்டது.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்தோ, பெண் உயரதிகாரி ஒருவரை வைத்தோ வழக்கை தமிழ்நாட்டிலேயே விசாரிக்கலாம் எனக் கூறினார். ஐ.ஜி. முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணையை தமிழகத்தில்தான் நடத்த வேண்டுமென வாதிட்டார். பெண் காவல்துறை அதிகாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை கேரளா போன்ற அருகில் உள்ள வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டுமெனக் கோரினார்.

இதனைப் பதிவுசெய்துகொண்ட நீதிமன்றம், இந்தப் புகாரை தெலுங்கானா மாநில காவல்துறை விசாரிக்க வேண்டுமென இன்று தீர்ப்பளித்தது.

வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக தலைமைச் செயலாளர், தெலங்கானா மாநில காவல்துறை தலைவருக்கு அனுப்ப வேண்டுமெனவும், ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளும் அம்மாநில டிஜிபி அம்மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பெண் காவல்துறை அதிகாரியைவைத்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடித்து, அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றியதால், தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லையென அர்த்தமில்லை என்றும் விசாரணை சுதந்திரமாக நடக்கவும் விவரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவுமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஐ.ஜி. முருகன் மீதான புகார் என்ன?

லஞ்ச ஒழிப்புத் துறையில் ஐ.ஜியாக இருக்கும் முருகன், சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியை இரவு நேரங்களில் தொடர்பு கொண்டுபேசியதோடு, அவருடைய அறைக்கு அழைத்துத் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பது, ஆடை மற்றும் சிகை அலங்காரம் குறித்து கருத்து தெரிவிப்பது போன்றவற்றில் ஈடுபட்டதாக சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி குற்றம்சாட்டினார்.

ஒரு நாள் முருகன், அந்த பெண் அதிகாரியைத் தன் அறைக்கு அழைத்து அறைக் கதவை அடைத்து விட்டு, தனிப்பட்ட கேள்விகளை கேட்டதாகவும் அந்தப் பெண் அதிகாரி கதவைத் திறந்து வெளியில் வர முயன்றபோது, கட்டிப்பிடித்ததாகவும் அவரிடமிருந்து தான் தப்பித்து வந்ததாகவும் அந்த அதிகாரி தன் புகாரில் கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: