ப. சிதம்பரம்: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவல் மீண்டும் நீட்டிப்பு

ப.சிதம்பரம் படத்தின் காப்புரிமை Getty Images

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 2ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த 21-ம் தேதி ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தின் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ஆகஸ்ட் 22ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிபிஐ காவலில் எடுக்கப்பட்டார்.

சிபிஐ காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். ஏற்கனவே இந்த நீதிமன்றம் சிதம்பரத்திற்கு இரண்டு முறை காவலை நீட்டித்திருந்த நிலையில், இன்று மீண்டும் சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.

இதுதொடர்பான வழக்கில் முன்ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் சிதம்பரம். இடைக்கால நிவாரணம் அளிக்க உயர்நீதிமன்றம் மறுத்ததை அடுத்து அவர் உச்சநீதிமன்றத்தை அனுகினார்.

உச்சநீதிமன்றமும் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க மறுத்துவிட்டதை தொடர்ந்து அவர் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இதுதொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், சிதம்பரத்தை அடுத்த விசாரணை வரை கைது செய்யக்கூடாது என்று பாதுகாப்பு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: