நிர்மலா சீதாராமன்: இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - மெகா திட்டம் அறிவிப்பு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் படத்தின் காப்புரிமை PREM SINGH
Image caption மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கடந்த வெள்ளிக்கிழமையன்று சில முக்கிய பொருளாதார அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று ( ஆகஸ்ட் 30) நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் வங்கிகள் இணைப்பு தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வங்கிகள் இணைப்பு மற்றும் கடன் வசூல் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

''கடன் வசூலில் மத்திய அரசு சாதனை படைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு கடன் வசூலின் அளவு மிகவும் அதிகரித்துள்ளது'' என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வங்கி நிர்வாகத்தில் அரசின் தலையீடு துளியும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக நிதி அமைச்சர் எடுத்துரைத்தார். 

வங்கிகள் இணைப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைட்டட் வங்கி ஆகியவை இணைக்கப்படும் என்றும், 17.95 லட்சம் கோடி ரூபாயோடு இவை இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டு, 15.20 லட்சம் கோடி ரூபாயுடன் அது நாட்டின் நான்காவது பொதுத்துறை வங்கியாக செய்யப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார். 

படத்தின் காப்புரிமை ANI

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மிகப்பெரும் திட்டத்தை விளக்கி பேசிய நிதி அமைச்சர் ''யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி ஆகியவை இணைக்கப்படும். இவை இந்தியாவின் ஐந்தாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும்" என்று தெரிவித்தார். 

"இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டு 8.08 லட்சம் கோடி ரூபாயுடன் இவை ஏழாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும்" என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.

பேங்க் ஆஃப் பரோடா, விஐயா பேங்க் மற்றும் தேனா பேங்க் ஆகிய வங்கிகளின் லாபம் அவற்றின் இணைப்புக்கு பிறகு 710 கோடியாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு திட்டம் குறித்து விளக்கமாக பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'இன்றைய பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்புக்கு பிறகு இந்தியாவில் இதுவரை 27 பொதுத்துறை வங்கிகள் இருந்துவந்த நிலை மாறி இனி 12 பொதுத்துறை வங்கிகள் செயல்படும்' என்று குறிப்பிட்டார்.

வேறு என்ன அறிவிப்புகள்?

சில்லறை  வணிகத்துக்கான கடன் வழங்குவது 21 % அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

250 கோடி ரூபாய்க்கு மேலாக உள்ள ஓவ்வொரு கடனையும் கண்காணிக்க சிறப்பு முகமைகள் ஏற்படுத்தப்படும் என்று கடன் வசூல் குறித்து பேசியபோது நிர்மலா சீதாராமன் மேலும் எடுத்துரைத்தார். 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்