கார்த்தி சிதம்பரம்: "எங்கள் குடும்பத்தை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள்?”

கார்த்தி சிதம்பரம் படத்தின் காப்புரிமை Hindustan Times

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தனது தந்தையும், முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருப்பது உள்ளிட்ட பவ்வேறு விஷயங்கள் குறித்து, காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.

பிபிசி தமிழ் செய்தியாளர் அபர்ணா ராம்மூர்த்தி எடுத்த நேர்காணலின் தொகுப்பு

கேள்வி: ஆகஸ்ட் 21ஆம் தேதி உங்கள் தந்தை ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் இருந்து, கடந்த இரண்டு வாரங்களாக நடந்த நிகழ்வுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? சிபிஐ சிதம்பரத்தின் இல்லத்தில் சுவர் ஏறி குதித்து கைது செய்து இருக்கிறார்களே?

பதில்: பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவர்கள் தொடர்ந்து செய்யும் பழிவாங்கும் நடவடிக்கை இது. கடந்த இரண்டு வார நிகழ்வுகள் எனக்கு ஒன்றும் வியப்பு அளிக்கவில்லை. என் தந்தையையும், என்னையும் இலக்கு வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனது தந்தையின் நற்பெயரை சிதைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

இந்த அரசாங்கத்தை பற்றி ஆழமான விமர்சனங்கள் வைப்பவர் எனது தந்தை என்பதே இதற்கு காரணம். அவரை பொதுவெளியில் அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

என் தந்தையை கைது செய்ய ஏன் சுவர் ஏறி குதித்தார்கள் என்று தெரியவில்லை. அதற்கு தேவையே இல்லை. கதவை திறக்குமாறு கூறியிருந்தால், யாரேனும் கதவை திறந்திருப்பார்கள். என் தந்தை என்ன துப்பாக்கி, குண்டுகள் வைத்துக் கொண்டு பதுங்கியா இருந்தார்.

நோட்டீஸ் ஒட்டும்போது சிதம்பரம் வீட்டில் இல்லை என்று கூறப்பட்டதே?

ப: அந்த நோட்டீஸ் ஒரு வினோதமான நோட்டீஸ். இரவு 12 மணிக்கு நோட்டீஸ் ஒட்டி, இரண்டு மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறுகிறார்கள். இதற்கு முன்பு இப்படி ஒரு நோட்டீஸை யாருக்கும் ஒட்டியதாக நான் கேள்விப்பட்டதே இல்லை.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், சிபிஐ-யிடம் எந்த ஆதாரமும் இல்லை, எந்த கேள்விகளும் இல்லை என்ற வாதத்தை நீங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கிறீர்கள். இந்தியாவின் மிக முக்கியமான சிபிஐ போன்ற அமைப்பு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மாதிரியான ஒரு நபரை ஆதாரம் இல்லாமல் எப்படி கைது செய்துவிட முடியும்? அது எப்படி சாத்தியமாகும் என்று நினைக்கிறீர்கள்?

ப: அதுதான் இங்கு உண்மை. எந்த ஆதாரமும் இல்லை. சிபிஐ போன்ற அமைப்புகள் எல்லாம் சிபிஐ-ன் கைப்பாவை போன்று ஆகிவிட்டது.

2007-08ல் முறைகேடு நடந்ததாக கூறுகிறார்கள். 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் அவர்கள் ஆதாரத்தை தேடிக் கொண்டிருக்கிறார்களா?

ஆனால், தங்களிடம் ஆதாரம் இருப்பதாக சிபிஐ உறுதியாக கூறுகிறதே. பல ஆதாரங்கள் டிஜிட்டல் வடிவத்தில் இருக்கிறது என்றும் பல ஆவணங்கள் வெளிநாட்டில் இருப்பதால், அது வருவதற்காக காத்திருப்பதாக கூறுகிறார்களே?

ப: இந்த வழக்கு என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு சொத்து இருக்கிறது என்பது வழக்கா அல்லது ஐஎன்எக்ஸ் நிறுவனத்திற்கு அரசு சட்டவிரோதமாக அனுமதி அளித்தது என்பது வழக்கா? இங்கு எது வழக்கு? நான் தினம்தோறும் பத்திரிகைகளை படிக்கும்போது, எனக்கு பல நாடுகளில் சொத்து இருக்கிறது. 17 நாடுகளில் சொத்து இருக்கிறது என்று எழுதியுள்ளார்கள். 17 நாடுகளில் சொத்து இருந்தால், எனக்கு சௌரியம்தான். போய் பார்த்துவிட்டு வரலாம் என்று நினைக்கிறேன்.

இந்த மாதிரியான பண மோசடியை புத்திசாலிகளால் மட்டுமே செய்ய முடியும். இது தொடர்பான விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை. அவருக்கு எங்கள் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்கக் கூடாது என்பது தெரிந்திருக்கிறது என்று சிபிஐ நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

ப: எங்களை புத்திசாலி என்று சிபிஐ கூறும் வாதத்தை மட்டும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அவங்களுக்கு வேண்டிய பதில் கொடுக்காததால் நாங்கள் மழுப்புகிறோம் என்று அர்த்தமா? இவர்கள் இல்லாத பூதத்தை உலகம் எல்லாம் தேடுகிறார்கள்.

சிபிஐ காவலில் இருக்கும் உங்கள் தந்தையை சந்தித்தீர்களா? என்ன பேசினீர்கள்?

ப: அவரை சந்தித்தேன். அவர் நன்றாக இருக்கிறார். எந்தக் குறையும் அங்கில்லை. ஆனால், எதற்காக காவலில் வைத்துள்ளார்கள்? என்னையும் இதற்கு முன்பு சிபிஐ காவலில் 11 நாட்கள் வைத்திருந்தார்கள். என்ன ஆதாரத்தை அவர்கள் கண்டுபிடித்தார்கள். எனக்கு உலகம் எல்லாம் சொத்து இருக்கிறது என்றால், சொத்து பட்டியலையாவது என்னிடம் கொடுக்க வேண்டும். இருக்கிறதா இல்லையா என்று பார்க்கலாம்.

உங்கள் தந்தை ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, நீங்களும், உங்கள் நிறுவனங்களும் பலனடைந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நீங்கள் என்ன நிறுவனங்களை நடத்துகிறீர்கள்? அவரது தொழில் என்ன? கார்த்தி சிதம்பரம் என்பவர் யார்?

ப: என் தந்தை மூலமாக நான் அடைந்த பலன் ஒன்றுதான். அவர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, நான் நாடாளுமன்றத்தை பார்வையிட எனக்கு இலவச பாஸ் கிடைக்கும். அதைத்தவிர நான் எந்த பலனும் அடையவில்லை.

என் தந்தை வழியாக எனக்கு பெரிய சொத்து உள்ளது. காஃபி தோட்டம் இருக்கிறது. அதை பார்த்துக் கொள்கிறேன். மேலும் செஸ் க்ளோபல் சர்விசஸ் என்ற கன்சல்டன்சி நிறுவனம் வைத்துள்ளேன். பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட டென்னிஸ் மேனேஜ்மன்ட் கம்பெனி வைத்திருக்கிறேன். இவ்வளவு மட்டுமே எனது தொழில்.

உங்களுக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் அதிருப்தி நிலவுவதாக ஒரு தோற்றம் இருக்கிறதே. அது உண்மையா?

ப: காங்கிரசில் உள்ள 52 எம்பிக்கள்தான் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவர். இன்றைய காங்கிரஸ் கட்சியில் நான் மையத்திலேயே இருக்கிறேன். காங்கிரஸ் பாரம்பரியம் மற்றும் சரித்தரத்தில் ஊரி வளர்ந்தவன் நான். எங்களுக்கும் அவர்களுக்கு எந்த விதமான இடைவெளியும் கிடையாது.

இந்த கைது சம்பவம் நடந்த உடனேயே, காங்கிரஸ் தலைமையில் இருந்து முழு ஆதரவு வந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை உங்களை தொடர்ந்து கொண்டு பேசினார்களா? நீங்கள் பேசினீர்களா?

ப: நான் ராகுல் காந்தியிடம் பேசினேன். இது ஒரு அரசியல் காழ்புணர்வால் போடப்பட்ட வழக்கு என்று அவர்களுக்கே நன்றாக தெரியும். காங்கிரஸ் கட்சியில் பிரபலமாக இருப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கு, அவர்களது குரல்களை நெறிப்பதற்காக நடத்தப்படும் நாடகம் இது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தை வைத்துதான் இந்த வழக்கு நகர்கிறது. ப.சிதம்பரத்தின் கைது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திராணி கூறியிருக்கிறாரே?

ப: அவர்கள் மகிழ்ச்சி அடைந்தால் எனக்கென்ன. அல்லது வருத்தமடைந்தால் எனக்கென்ன? எனக்கும் அவருக்கும், என்ன சம்பந்தம். ஒரே ஒருமுறை சிபிஐ கூட்டிச் சென்றபோது மட்டுமே நான் அவரை பார்த்தேன். அவரை வைத்து இங்கு ஒரு அரசியல் நாடகம் நடக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆளுங்கட்சியாக இருந்தபோது, சிபிஐ ஆளும் அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக பாஜக குற்றஞ்சாட்டியது. தற்போது பாஜக ஆளுங்கட்சியாக இருக்கும்போது, அதே குற்றச்சாட்டை காங்கிரஸ் வைக்கிறது. சிபிஐ ஒரு தனிப்பட்ட அமைப்பாக செயல்பட முடியவில்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? சிபிஐ ஒரு கூண்டுக்கிளி என்பது உண்மையா?

ப: அதை நீங்கள் சிபிஐ-யிடம்தான் கேட்க வேண்டும். இந்த அரசாங்கம் துஷ்பிரயோகம் செய்கின்ற அளவிற்கு, வேறு எந்த அரசாங்கமும் சரித்திரத்தில் செய்ததில்லை. இதற்கு முன்பும் மத்தியில் வாஜ்பேயி தலைமையில், பாஜக அரசாங்கம் இருந்திருக்கிறது. ஆனால், இவர்கள் இந்த அமைப்பை தவறாக பயன்படுத்திய அளவிற்கு வேறு யாரும் செய்ததில்லை.

உங்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது. உங்களை குற்றமற்றவர் என்று எவ்வாறு நிரூபிக்கப் போகிறீர்கள்?

ப: என் மீது குற்றச்சாட்டே இல்லை. குற்றச்சாட்டு வைத்தால்தான் பதில் சொல்ல முடியும்.

குற்றச்சாட்டுகள் இல்லாமல்தான் இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறதா?

ப: வழக்கே நடக்கவில்லை. ஆரம்பக்கட்ட விசாரணைதான் நடைபெறுகிறது. இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

படத்தின் காப்புரிமை Hindustan Times

உங்கள் குடும்பமே சிபிஐ-ன் விசாரணை வளையத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். இதை எப்படி கையாள்கிறீர்கள்?

ப: நாங்கள் அனைவருமே வழக்கறிஞர்கள். இதுதான் இன்றைய அரசியல் சூழல் என்று நினைத்துக் கொள்கிறோம். பாசிச அரசாங்கத்திற்கு எதிராக போராடுகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எங்களை மட்டும் ஏன் இப்படி குறி வைக்க வேண்டும். யார் குடும்பத்தின் மீது இப்படி வழக்கு போட்டிருக்கிறார்கள்? ஏனென்றால், இந்த அரசாங்கத்தை என் தந்தை கடுமையாக விமர்சிப்பவர்.

ப.சிதம்பரத்தின் கைதுக்கு எதிராக திமுக வலுவான குரல் எழுப்பவில்லை என்ற விமர்சனம் உள்ளதே?

ப: அப்படி இல்லை. கைது செய்யப்பட்ட பின் உடனடியாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அவ்வளவுதான் செய்ய முடியும். அதற்கு மேல் ஒரு கட்சியால் என்ன செய்ய முடியும். கனிமொழி என்னிடம் தனிப்பட்ட முறையில் என்னிடம் போனில் பேசினார்.

இந்த விவகாரத்தை நாங்கள் சட்டப்படிதான் எதிர்கொள்ள முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்