தலித் இளைஞர்கள்: 21-ஆம் நூற்றாண்டிலும் உரிமை, சுயமரியாதைக்காக கடுமையாக போராடும் நிலை ஏன்?

திருமணம் படத்தின் காப்புரிமை Nikita Deshpande / BBC

அது மே மாதம். குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள தொராஜி என்ற பகுதியில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் 11 தலித் மணமகன்கள் கலந்து கொண்டனர்.

திருமண ஊர்வலங்களில் குதிரை மீது உயர் சாதியை சேர்ந்த மணமகன்களே அமர வேண்டும் என்ற பழைய பாரம்பரியத்தை ஏதோ ஒரு வகையில் அவர்கள் எதிர்த்தனர். இதனால், அப்பகுதியில் சாதி மோதல் ஏற்படலாம் என்ற பதற்றத்தால், அந்த ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டது.

பல ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம் செய்து வைக்கும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த யோகெஷ் பாஷா பிபிசியிடம் கூறுகையில், தலித் சமூகத்தினர் இனியும் பாகுபாடை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்றே இது நடத்தப்பட்டதாக கூறினார்.

தொராஜியில் உள்ள சுமார் 80 சதவீத தலித்துகளுக்கு நல்ல கல்வி கிடைத்திருக்கிறது. "பல மாணவர்கள் பொறியியல், மருத்துவம், சட்டப்படிப்புகளை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், தினசரி வாழ்வில் பாகுபாட்டை பொறுத்துக் கொள்ள முடியுமா? பாகுபாட்டிற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றே இந்த திருமண ஊர்வலத்தை நடத்தினோம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இது ஒரு தனிப்பட்ட சம்பவம் மட்டுமல்ல. இந்தியா முழுவதும் இதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. தலித் மக்கள் இந்த சமூகத்தில் தங்களது இடத்தை எல்லா வகையிலும் உறுதி செய்கிறார்கள். அது குதிரை மீது அமருவதாக இருந்தாலும் சரி. தாடி மீசை வைப்பதாக இருந்தாலும் சரி.

அதே நேரத்தில், தலித்துகளுக்கும், மற்ற சமூகத்தினருக்கும் இடையில் ஏற்படும் மோதலும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பாகுபாட்டிற்கு எதிராக சவால்விடும் நபர்கள், நன்கு படித்தவர்களாகவும், டாக்டர் பிஆர் அம்பேத்கரை படித்து, அதனால் தாக்கம் ஏற்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். நன்கு படிக்க வேண்டும், மரியாதையான வாழ்க்கைகாக போராட வேண்டும் என்ற அம்பேத்கரின் யோசனைகள் சில, இவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

"இது போன்ற பல சம்பவங்கள் இனி நடக்கும். படித்த தலித்துகள், தங்களின் வாழ்வாதாரத்திற்காக, கிராமங்கள் அல்லது நகரங்களில் இருக்கும் பணக்காரர்களை சார்ந்து இல்லை. அவர்கள் நகர்ப்புற பகுதிகளில் இருக்கும் தொழில் சந்தைகளை சார்ந்திருக்கிறார்கள்" என்கிறார் தலித் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான மார்டின் மெக்வான்.

உதாரணமாக லோர் கிராமத்தை சேர்ந்த மெஹுல் பர்மார், திருமண ஊர்வலங்களில் குதிரை மீது தலித்துகள் அமரக்கூடாது என்று அங்கிருந்த பழங்கால நடைமுறையை உடைக்க முயற்சித்தார். மெஹுல் அந்த கிராமத்தில் வாழ்ந்தாலும், அருகில் உள்ள அகமதாபாத்தில் பணியாற்றுகிறார். அவர் பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "நாங்கள் சம்பாதிக்கிறோம். எங்கள் திருமண ஊர்வலத்திற்காக எங்களால் குதிரையை வாங்க முடிகிறது என்றால், நாங்கள் ஏன் அதில் அமரக்கூடாது?" என்று கேள்வி எழுப்புகிறார்.

அவரது திருமண நிகழ்வின் போது முதல் முறையாக குதிரை மீது அமர்ந்தார் மெஹுல். அந்த கிராமத்தில் இதற்கு முன்பு தலித் சமூகத்தை சார்ந்த யாரும் குதிரை மீது அமர்ந்ததில்லை.

படத்தின் காப்புரிமை Nikita Deshpande / BBC

அதே போல உத்தராகண்ட் மாநிலம் தெஹ்ரி மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயதான ஜித்தேந்திர தாஸ். தலித் சமூகத்தை சேர்ந்த அவர், உயர்சாதி மக்களோடு, ஒரே மேஜையில் தலித்துகள் அமர்ந்து சாப்பிடக்கூடாது என்ற நடைமுறைக்கு சவால் விட்டவர். ஒரே மேஜையில் அமர்ந்து உணவு சாப்பிட்டதாக கடந்த மே மாதம், இவர் அடித்துக் கொல்லப்பட்டார். இவரை சார்ந்திருந்த இவரது தாய் மற்றும் சகோதரிக்கு மிஞ்சியது ஜித்தேந்திராவின் மோட்டார் பைக்கும், அவருடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றுதான்.

படத்தின் காப்புரிமை Manoharlal Nirala

கல்வியும், நகர்ப்புறத்துக்கு அதிகமாக வெளிப்பட்டிருப்பதும்தான், இதுபோன்ற மோதல்கள் அதிகரிப்பதற்கான இரு முக்கிய காரணங்களாகும்.

இந்தியாவில் 2014-15 காலகட்டத்தில் ஒன்றாம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பில் சேரும் தலித்துகளின் எண்ணிக்கை நாட்டின் தேசிய விகிதத்தைவிட அதிகமாக இருப்பதாக இந்திய அரசின் (2016) மனித வளம் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன. எனினும், உயர்படிப்புகளில் தலித் மாணவர்கள் சேர்வது நாட்டின் விகிதத்தைவிட குறைவாகவே இருக்கிறது.

"நாட்டின் பிற ஒதுக்கப்பட்ட பிரிவுகளைவிட, தலித்துகள் இடையே கல்வியறவு இடைவெளி வேகமாக நிரப்பப்பட்டு வருகிறது. பழைய நடைமுறைகளை அவர்கள் எதிர்ப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்" என்று மெக்வான் குறிப்பிடுகிறார்.

தலித்துகளின் கல்வியறிவு உயர்ந்து வருவதால், "பாகுபாட்டை அனுபவிக்க வேண்டியது விதி" என்பதை அவர்கள் நம்புவதாக இல்லை என்று சில வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

அரசாங்க வேலைகளில் மட்டும் அவர்கள் ஆர்வமாக இல்லை, சிறு தொழில் தொடங்குவதிலும் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பு (DICCI), பல தலித்துகளுக்கு தொழில் அறிவு குறித்து கற்றுத்தந்து, புதிய தொழில் தொடங்க ஊக்குவிக்கிறது.

DICCI அமைப்பின் தலைவர், மிலிந்த் காம்ப்ளே பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "தலித்துகள் அவர்கள் உரிமைகளை பெற நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். தற்போது நடைபெறும் மோதல்கள் மற்றும் போராட்டங்கள், இந்த போராட்டத்தின் முடிவாக இருப்பது போல தெரிகிறது. வரும் காலங்களில், அதிக தலித்துகள் குதிரைகள் மீது அமர்வார்கள், உயர்சாதியினர் முன்பு உணவு சாப்பிடுவார்கள், ஏனெனில் பல தலித் மக்கள் கல்வி பெறுகிறார்கள்" என்றார்.

படத்தின் காப்புரிமை Nikita Deshpande / BBC

எனினும், அரசியல் ஆய்வாளர் பத்ரி நாராயண் இதை வேறு விதமாக பார்க்கிறார். இந்த சிறு சிறு சம்பவங்கள் பெரிய இயக்கமாக மாறவில்லை என்றால் அரசியல் கட்சிகள் இந்த விவகாரங்களை கண்டுகொள்ள மாட்டார்கள். அரசியல் கட்சிகள் இதை கவனித்து சர்ச்சையாக்கவில்லை என்றால், அடிப்படை நிலையில் தலித் சமூகத்தினரின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவது கடினம் என்கிறார் பத்ரி.

தலித்துகளுக்கு தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதும் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று வல்லுநர்கள் நம்புகிறார்கள். அவர்களின் பொருளாதார வளர்ச்சி, கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு செல்வது, கல்வி போன்றவை எல்லாம், தங்களது ஒடுக்கப்பட்ட கடந்த காலங்களை உடைத்தெறிக்க அவர்களை ஊக்குவிக்கிறது.

எனினும், இதற்காக தலித்துகளுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்கள் முடிந்துவிட்டது என்று அர்த்தமாகாது என வல்லுநர்கள் கூறுகிறார்கள். வரும் ஆண்டுகளில் இதுபோன்ற மேலும் பல அட்டூழியங்கள் நடக்கப்போகிறது என்று அர்த்தம். "இன்னும் தலித் சமூகத்தை சேர்ந்த பலரும் கல்வியறிவு இல்லாமல் இருக்கிறார்கள்" என மெக்வான் கூறுகிறார்.

பீகார் போன்ற மாநிலங்களில், தலித்துக்கு மீது நடைபெறும் அட்டூழியங்களுக்கு எதிராக பல காலமாக போராடி வந்தாலும், அவையெல்லாம் வெளி உலகத்திற்கு வருவதில்லை என்கிறார் தலித் செயற்பாட்டாளர் பால் திவாகர். "இப்போது, ஒதுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்தவர்கள், ஊடகங்களில் வேலை செய்கிறார்கள் என்பதால், இது செய்திகளாக வரத் தொடங்கியுள்ளன. இது தலித்துகள் கல்வியறிவு பெற்றதன் விளைவாகும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

தலித் சமூகத்தை சார்ந்த பலரும் கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு குடியேறுவது அதிகமாகிவிட்டது. "அவர்கள் மீண்டும் தங்கள் கிராமங்களுக்கு வரும்போது, புதிய சிந்தனையுடம் வருகிறார்கள். பாகுபாடு காண்பிக்கப்படும்போது, அதற்கு பதிலடி கொடுக்க இந்த புதிய சிந்தனைகள் அவர்களுக்கு உதவுகிறது."

தலித்துகளின் முன்னேற்றம், சில உயர்சாதி மக்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை தருவதால், தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகளவில் காணப்படுவதாக DICCI அமைப்பின் தலைவர் மிலிந்த் காம்ப்ளே நம்புகிறார்.

எனினும், தொழில் மற்றும் வணிகத்தில் தலித்துகள் தங்கள் தடங்களை பதித்தருப்பது மிகவும் குறைவாக இருப்பதாக மிலிந்த் நம்புகிறார்.

சென்ற தலைமுறை தலித்துகள் சிலர் படித்திருந்தாலும், அவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தது போல இந்தத் தலைமுறையினர் இல்லை என்று மெக்வான் கூறுகிறார். இத்தலைமுறையினரின் குரல் உயர்ந்திருக்கிறது. அவர்கள் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு இருக்கிறது. மேலும் அவர் அம்பேத்கரின் சோஷியலிச சிந்தனையை நம்புகிறார்கள்.

"அம்பேத்கரின் சோஷியலிச மற்றும் சமத்துவ சிந்தனைகள் தற்கால இளைஞர்களின் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்