இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ளது மந்தநிலையா அல்லது பெருமந்தமா?

இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ளது மந்தநிலையா அல்லது பெருமந்தமா? படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, மந்தநிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சி முன்னெப்போதுமில்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பொருளாதார பெருமந்தத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது.

மோதி பிரதமாக பதவியேற்றத்திலிருந்து இதுவரை கடந்துள்ள 25 காலாண்டுகளில், கடந்த காலாண்டுதான் இருப்பதிலேயே மோசமான வளர்ச்சியை கண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர் விவேக் கௌல் கூறுகிறார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தாண்டின் இரண்டாவது காலாண்டிலும் குறைந்துள்ளது. கடந்த காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் ஐந்து சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. அதாவது, சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 0.8 சதவீத வீழ்ச்சி.

பொருளாதார மந்தநிலையா அல்லது பெருமந்தமா?

தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டில் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதத்தில் மந்தநிலை காணப்படுவதால், பொருளாதார பெருமந்தத்திற்குள் நாம் நுழைகிறோம் என்று கருத வேண்டுமா?

இந்தியா பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை பொருளாதார மந்தநிலை என்று அழைப்பதே சரியானதாக இருக்குமென்றும் பெருமந்த நிலையை அது இன்னும் அடையவில்லை என்றும் கூறுகிறார் மும்பையை சேர்ந்த பொருளாதார வல்லுநர் விவேக் கௌல்.

படத்தின் காப்புரிமை Getty Images

நிடி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜிவ் குமாரின் கருத்துப்படி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டின் வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை இந்திய பொருளாதாரத்தின் பெருமந்தத்தின் தொடக்கம் என்று கூறக் கூடாது. "இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தில் நிலவி வரும் சீரற்ற தன்மை ஒரு மிகப் பெரிய காரணம்" என்று ராஜிவ் கூறுகிறார்.

இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்பு மிகவும் வலிமையானது என்று கூறும் அவர், "கடந்த வாரம் நிதி அமைச்சர், நாட்டிலுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் மனநிலையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் அரசின் நடவடிக்கைகளை அறிவித்தார். ஏராளமான விழாக்களை கொண்ட நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்குள் நாம் தற்போது நுழைந்துள்ளோம். அது பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்."

பொருளாதார பெருமந்தம் என்றால் என்ன?

இன்னமும் பொருளாதார வல்லுநர்களுக்கிடையே பெரியளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட பதிலில்லாத கேள்வியே இது. பொருளாதாரரீதியில் பார்க்கும்போது, இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டில் மந்தமான வேகத்தில் வளர்ந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இருந்தபோதிலும், 2019-2020 நிதியாண்டில் மீதமுள்ள மூன்று காலாண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏறுமுகம் காணுமானால் இது பொருளாதார பெருமந்தம் என்று அழைக்கப்படாது.

பொருளாதார பெருமந்தத்தில் பல்வேறு நிலைகள் உள்ளனவா?

ஆம். ஒரு குறிப்பிட்ட நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி குறைகிறது என்று வைத்துக்கொள்வோம். பிறகு, மீதமுள்ள இரண்டு நிதியாண்டுகளில் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு வளர்ச்சி பாதைக்கு திரும்புமானால் அது ஒட்டுமொத்த நிதியாண்டுக்கும் சாதகமான நிலையை ஏற்படுத்தி தரும்.

இந்த சூழ்நிலையை, மேற்குலக நாடுகள் 'லேசான பெருமந்தம்' என்று குறிப்பிடுகின்றன. இதுவே ஒட்டுமொத்த நிதியாண்டும், முந்தைய நிதியாண்டுகளை விட கடும் பொருளாதார சரிவை சந்தித்தால் அதற்கு 'கடுமையான பெருமந்தம்' என்று பெயர். இதைவிட மோசமான நிலையை பெரும் பொருளியல் வீழ்ச்சி என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது, இந்த நிலையின்போது ஒரு நாட்டின் அனைத்து பொருளாதார கூறுகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.

1930களில் அமெரிக்கா சந்தித்த மிகப் பெரிய பொருளாதார சரிவு நிலையே தற்போது பெரும் பொருளியல் வீழ்ச்சி என்று குறிப்பிடப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நிலையின்போது, ஒரு நாட்டின் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை ஆகியவை முன்னெப்போதுமில்லாத நிலையை நோக்கி செல்லும்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் "உளவியல் ரீதியிலான பெரும் பொருளியல் வீழ்ச்சியாலும்" பாதிக்கப்படலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, "நுகர்வோர்கள் தங்களது பொருள்/ சேவை வாங்கும் திட்டங்களை வேண்டுமென்றே தள்ளிப்போட்டால், சந்தையில் அவற்றின் தேவை குறைந்து அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் வீழ்ச்சியை உண்டாக்கும். அதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்து, நிச்சயமற்ற சூழல் தொடர்ந்தால், மந்தநிலையின் ஒரு காலத்தில் வாழ்வதாக மக்கள் உணர்கிறார்கள்" என்று விவேக் கூறுகிறார்.

இந்தியாவின் பெருமந்தம் ஏற்பட்ட காலம் என்ன?

1991ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்தபோது, நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 28 பில்லியன் டாலர்களாக சரிந்தது. அதன் தற்போதைய மதிப்பு 491 பில்லியன் டாலர்களாக உள்ளது. கடந்த 2008-2009ஆம் ஆண்டுகளில் உலகளவில் பொருளாதார பெருமந்தம் உணரப்பட்ட நிலையிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.1 சதவீதம் வளர்ந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட இந்தியாவில் பொருளாதார பெருமந்தம் ஏற்படவில்லை என்று விவேக் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்