தமிழிசை செளந்தரராஜன்: தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம்

செளந்தரராஜன் படத்தின் காப்புரிமை Facebook

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை ராஜிநாமா செய்ய வேண்டும்.

எனவே புதிய தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழிசை.

"தெலங்கானாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாடுவேன்" என்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

"எப்போதும் எளிமையாகவே தொடர்ந்து இருப்பேன்." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றுள்ள இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகள் ஆவார்.

நடைபெற்ற மக்களவைத் தேர்தல் 2019-ல் தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை, தேர்தலில் தோல்வியுற்றார்.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

தமிழிசை இதுவரை இரண்டு முறை தமிழகச் சட்டமன்ற தேர்தலிலும், இரண்டு முறை மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு தமிழிசை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் கீழ் இயங்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது தமிழிசை அந்த பொறுப்பில் 3 ஆண்டுக் காலம் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

புதிய ஆளுநர்கள்

இன்று குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய ஆளுநர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான கேரளாவின் ஆளுநர் சதாசிவத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அது நீடிக்கப்படவில்லை, ஆரிஃப் முகமத் கான் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரியும், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் ஆளுநராக பந்தாரு தாத்ரேயாவும், ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்ராஜ் மிஷ்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்