நரேந்திர மோதி - சீன அதிபர் ஷி ஜின்-பிங் உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் நடக்கிறதா?

மோதி - சீன பிரதமர் ஷி ஜின்-பிங் படத்தின் காப்புரிமை Getty Images

இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

தி இந்து (ஆங்கிலம்) - மாமல்லபுரத்தில் நடக்கிறதா மோதி - சீன பிரதமர் ஷி ஜின்-பிங் உச்சிமாநாடு?

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்-பிங் இடையிலான முறைசாரா உச்சிமாநாடு அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தி இந்து (ஆங்கிலம்) செய்தி வெளியிட்டுள்ளது.

"இருநாட்டு தலைவர்களுக்கிடையேயான சந்திப்பு வரும் அக்டோபர் மாதம் 11 மற்றும் 13ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான ஏற்பாடுகள் குறித்து மத்திய - மாநில அரசு அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த உச்சிமாநாட்டின்போது, இருநாட்டுத் தலைவர்களும் யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரத்திலுள்ள பல்வேறு இடங்களை பார்வையிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருநாட்டு தலைவர்களுக்கிடையேயான முதல் முறைசாரா உச்சிமாநாடு சென்ற ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தபோது, ஹூபே மாகாண அருங்காட்சியகத்தை இருவரும் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை: கீழடியில் 2,500 ஆண்டுக்கு முந்தைய சுடாத மண்குவளை கண்டெடுப்பு

படத்தின் காப்புரிமை Twitter

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுமார் 2, 500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடாத மண்குவளை கண்டெடுக்கப்பட்டதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது.

இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருள்கள், செப்பு காசுகள், உணவு குவளை, தண்ணீர் குவளை உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், அதிகளவில் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியவை கண்டறியப்பட்டன.

இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுடாத மண் குவளை கண்டெடுக்கப்பட்டது. மண்பாண்டப் பொருள்களை சுட்டால் மட்டுமே, புவியில் மட்காமல் நீண்ட நாள்கள் இருக்கும்.

சுடாத மண்பாண்டப் பொருள்கள் சில நூற்றாண்டுகளிலேயே மட்கிவிடும். ஆனால் கீழடியில் கிடைக்கப்பட்ட சுடாத மண் குவளை இன்று வரை மட்காமல் உள்ளது. மேலும் அது பளபளப்பாகவும் இருக்கிறது. இந்த குவளை 2,500 ஆண்டுகளாக மட்கிப் போகாமல் இருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்படைய வைத்துள்ளது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கலில் உலக சாதனை

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று முன்தினம் மட்டும் 49¼ லட்சம் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளது புதிய சாதனையாக கருதப்படுவதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் கடைசி நாள் ஆகும். இதனால், ஏராளமானோர் ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்வார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் உலக சாதனை படைக்கும் அளவுக்கு ஒரே நாளில் 49 லட்சத்து 29 ஆயிரத்து 121 கணக்குகள், ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட்டன. உலகத்தில் எந்த நாட்டு வருமான வரித்துறையும் ஒரே நாளில் இவ்வளவு வருமான வரி கணக்குகள் தாக்கலை கண்டிருக்காது என்று வருமான வரித்துறையை வழிநடத்தும் அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

ஒரு வினாடிக்கு சராசரியாக 196 கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கணக்கு தாக்கல் செய்வதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இணையதளத்தை முடக்கும் முயற்சிகள், 2 ஆயிரத்து 205 தடவை நடந்ததாகவும், வருமான வரித்துறையின் தகவல் பாதுகாப்பு குழு அந்த முயற்சிகளை முறியடித்ததாகவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது" என்று அந்த செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்