"வங்கிகளை இணைப்பதால் சாதாரண மக்களின் சேமிப்பு கரையும் ஆபத்து உள்ளது"

வெங்கடாச்சலம் படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption வெங்கடாச்சலம்

பொதுத்துறை வங்கிகளை இணைப்பதால், வங்கி ஊழியர்களின் வேலைகள் பறிபோவது மட்டுமல்ல,சாதாரண மக்களின் சேமிப்பு மேலும் கரையும் ஆபத்து உள்ளது என்கிறார் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம்.

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் 27 என்று இருந்த நிலையில் அவற்றை 12ஆக தற்போது மத்திய நிதி அமைச்சகம் மாற்றியுள்ளது. பொதுத்துறை வங்கிகளை இணைத்து பெரிய வங்கிகளாக மாற்றுவதால் வங்கிகளின் கடன் கொடுக்கும் திறன் அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்தாலும், அந்த நடவடிக்கை சாதாரண மக்களுக்கு பயனளிக்காது என்கிறார் வெங்கடாச்சலம்.

மேலும் பெரிய வங்கியாக செயல்பட்டு,பெருமுதலாளிகளுக்கு பெரிய கடனை கொடுத்து ஏமாந்தால் பெரிய நஷ்டம் ஏற்படும் என எச்சரிக்கிறார் 50 ஆண்டுகளாக வங்கி ஊழியர்களோடு வேலைசெய்யும் வெங்கடாச்சலம்.

பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து:

கேள்வி: பொதுத்துறை வங்கிகளை இணைப்பதால் யாருக்கும் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியாக கூறுகிறார். வங்கி ஊழியர்களுக்கு அமைச்சரின் வார்த்தையில் நம்பிக்கையில்லையா? போராட்டங்களை அறிவித்துள்ளதற்கான காரணம் என்ன?

பதில்: வங்கி ஊழியர்களுக்கு வேலை பறிக்கப்படாது என அமைச்சர் தெரிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் வங்கிகளை இணைக்கும்போது, கிளைகளை மூடுவார்கள், வங்கியில் வேலைசெய்தவர்கள் மற்றொரு ஊருக்கு மாற்றலாகி வேலைக்குப்போகவேண்டும். இந்த பணியிட மாற்றம் காரணமாக பலர் வேலையில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்படும். வங்கி கிளைகளை மூடுவதால், வங்கி ஊழியர்களுக்கு மட்டுமே பிரச்சனை என்பதில்லை. நாங்கள் போராடுவது எங்கள் உரிமைக்காக மட்டும் அல்ல. எளிய மக்களின் நம்பிக்கையாக வங்கிகள் உள்ளன. வங்கிகளின் செயல்பாட்டிற்கு பிரச்சனை என்பது சாதாரண மக்களையும் பாதிக்கும்.

பெரிய வங்கியாக செயல்படும்போது, பெரிய முதலாளிகளுக்கு கடன் கொடுப்பதில்தான் முன்னுரிமை இருக்கும். பொதுத்துறை வங்கியின் செயல்பாடு சாதாரண மக்களை முன்னேற்ற, அவர்களின் வளர்ச்சிக்கு உதவவேண்டும். ஆனால் கடன் கொடுப்பதில் சாதாரண மக்களின் எண்ணிக்கை குறைந்து, பெரிய முதலாளிகளுக்கு பணம் கொடுக்கும்போது, அவர்கள் கொடுக்கமுடியாமல்போனால், பெரிய நஷ்டம் ஏற்படும். சாதாரண மக்களுக்கு பணம் கொடுத்து, அதில் சிறிய தொகை திரும்பவரவில்லை என்றால் வங்கிக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும்.

பெரிய வங்கியாக மாற்றி, பெரிய முதலீடு கொடுக்கிறோம் என அரசு சொல்வது, ஒரு கசாப்புக் கடை வைத்திருப்பவர், கொழு கொழுவென ஆடு வளர்வதற்கு தீனிபோடுவதற்கு சமம்.

படத்தின் காப்புரிமை Getty Images

கேள்வி: ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் காரணமாக பலதுறைளிலும் ஆட்குறைப்பு நடைபெறுகிறது. அதேபோல வங்கிகளில் வேலைவாய்ப்புகள் குறைவதற்கு அரசு மட்டுமே எவ்வாறு பொறுப்பாகும்?

பதில்: இந்தியா வளர்ந்துவரும் நாடு. இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. தொழில்நுட்பத்தை கொண்டுவரவேண்டும், ஆனால் வேலைகளை பறிக்காமல், வளர்ச்சிக்கு ஏற்றவிதத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கலாம்.

எடுத்துக்காட்டாக ஸ்டேட் பேங்க் வங்கியோடு நான்கு வங்கிகளை இணைத்ததால், சுமார் 7,000 கிளை வங்கிகளை மூடினார்கள். இதுபோல 27 வங்கிகளை 12ஆக மாற்றும்போது, ஆயிரக்கணக்கான கிளைகள் மூடப்படும். ஏற்கனவே பலதுறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துவரும் நேரத்தில், வங்கித்துறையிலும் கிளைகளை மூடி புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகளை குறைத்தால், வங்கிவேலைக்காக தயாராகும் இளைஞர்கள் மற்றும் தற்போது வேலையில் இருப்பவர்களுக்கு நம்பிக்கையற்ற தன்மை ஏற்படும். வங்கி, காப்பீடு, ரயில்வே துறை போன்ற நிறுவனங்களில்தான் சாதாரண மக்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருமளவு உள்ளன. இதனை குறைத்தால் மேலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்.

கேள்வி: டிஜிட்டல் பணத்தின் பயன்பாடு அதிகரிக்கவேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கம் பணமதிப்பிழப்பை கொண்டுவந்ததாக அறிவித்தது. ஆன்லைன் வசதியில் பணப்பரிமாற்றத்தை மக்கள் தங்களது அலைபேசியில் உள்ள ஆப் மூலமாக மேற்கொள்கிறார்கள். கிளைகளை குறைப்பதால் டிஜிட்டல் பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதை மறுக்கமுடியுமா?

பதில்: இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் குறைவாக உள்ளது. படிப்பறிவு குறைவாக உள்ள நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கொண்டுவருவதில் என்ன பயன்? டிஜிட்டல் பயன்பாட்டை வரவேற்கிறோம். அதனை பெரிதும் பயன்படுத்துபவர்கள் படித்த, நகரத்தில் வசிக்கும் மக்கள். அரசு நடத்தும் சிறிய வங்கி கிளைகள் கிராமங்களில் செயல்படுகின்றன. இவற்றை மூடிவிட்டு, சாதாரண மக்களை டிஜிட்டல் முறைக்கு வாருங்கள் என அழைப்பது என்ன நியாயம்? முதலில் கல்விக் கடனை அதிகரித்து, கல்வியறிவை அதிகரித்து, பின்னர் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாறலாம். டிஜிட்டல் முறைக்கு மாற முதலில் இன்டர்நெட் வசதி வேண்டும். நகரங்களில் கூட இன்டர்நெட் பிரச்சனை செயல்படுவதில் பிரச்சனை இருக்கும்போது, கிராமத்தில் நிலைமை மோசமாக இருக்கும்.

சிறிய வங்கிகளை இணைத்து பெரிய வங்கியாக மாற்றுவதால், வங்கி நிர்வாகம் திறம்பட நடக்கும் என அரசாங்கம் கூறுகிறது. இதில் எதனை சிக்கலாக பார்க்கிறீர்கள்? கடந்த ஆண்டு எஸ்பிஐ வங்கியோடு இணைக்கப்பட்ட நான்கு வங்கிகள் தற்போது சிறப்பாக செயல்படுகின்றன என புள்ளிவிவரங்களோடு அரசு எடுத்துச்சொல்கிறது.

கிளைகளை மூடி, பெரிய வங்கிகளாக நம் வங்கிகள் மாறுவதால் கடன் அதிகமாக கொடுக்கலாம் என்கிறார்கள். ஆனால் உலகத்தரம் வாய்ந்த வங்கியாக நாம் மாறவேண்டும் என்பதைவிட, நம் நாட்டில், சாதாரண மக்களின் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தும் வங்கிகள்தான் நமக்கு உடனடியான தேவை. அதுதான் விரைவாக பொருளாதார மந்த நிலையில் இருந்து நாட்டை மீட்கும்.

சிறிய வங்கிகள், சாதாரண மக்களுக்கு சிறிய கடன்களை வழங்கி அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தினால், அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும், அவர்கள் வங்கியில் பணம் சேர்ப்பார்கள். நம் நாட்டில் பெருமுதலாளிகளைவிட சிறு வியாபாரிகள் அதிகம் இருக்கிறார்கள். இவர்களை முன்னேற்றாமல், பெரிய முதலாளிகளை முன்னேற்றினால், நாட்டின் பொருளாதாரம் முன்னேறும் வாய்ப்பு குறைவு. பெரிய வங்கிகளை விட, சிறிய கிளைகள் நம் நாட்டிற்கு தேவை.

அரசு முதலீட்டை அதிகரிப்போம் என அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது. வங்கிக்கு அரசு முதலீடு அளிப்பது என்பது குழந்தைக்கு தாய் பாலூட்டுவது போன்றது. வங்கியின் வருமானம் அரசுக்கு போகிறது, முதலீடு கொடுத்தால் மேலும் வங்கியின் செயல்பாடு அதிகரிக்கும். இதில் பெருமை இல்லை. மக்களுக்கு எளிமையாக கிடைக்கவேண்டிய கடன் திட்டங்களை செயல்படுத்த வங்கிகளுக்கு உதவினால், விரைவாக நாடு பொருளாதார சிக்கலில் இருந்து மீளும்.

கேள்வி:தனியார் வங்கிகள் வாராக்கடனை வசூலிப்பதில் காட்டும் அக்கறையை போல அரசாங்க வங்கிகள் அக்கறை காட்டுகிறார்களா? ஏன் அரசாங்க வங்கிகளின் வராக்கடனை வசூலிப்பதில் தாமதம் உள்ளது?

படத்தின் காப்புரிமை ROB ELLIOTT

பதில்: தனியார் வங்கிகள் பெரும்பாலும் கொடுப்பது வீட்டுக்கடன், வாகன கடன். கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால், அதற்கான பணத்திற்கு சொத்தை அல்லது வாகனத்தை எடுத்துக்கொள்கிறார்கள். தனியார் வங்கிகள் கூலிப் படைகளைவைத்துக்கூட வாராக்கடனை வசூலிப்பார்கள். அரசாங்க வங்கிக்கு தார்மீகப் பொறுப்பு உள்ளது. பெருநிறுவனங்கள் அரசு வங்கியில்தான் பெரிய கடன்களை பெறுகிறார்கள். ஒருவரை மிரட்டிப் பணத்தை வசூல் செய்யும் முறை அரசு வங்கியில் இல்லை. அதேபோல பெரிய வணிகர்கள் கடனை கொடுக்காமல் இருக்கும்போது, அவர்கள் மீது சிவில் வழக்கு மட்டுமே பதிவு செய்யமுடியும். கிரிமினல் வழக்கு பதிவு செய்யலாம் என்ற சட்டத்தை அரசாங்கம் கொண்டுவந்தால், உடனடியாக பணத்தை வசூல் செய்யமுடியும். எடுத்துக்காட்டாக விஜய் மல்லையா கடனை கொடுக்காமல், வெளிநாட்டில் இருக்கிறார். அவர் நிறுவனத்தின் மீது மட்டுமே வழக்கு போடமுடிந்தது, கிரிமினல் வழக்கு போட்டிருந்தால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.

கேள்வி: 2017ல் வீரப்ப மொய்லி தலைமையில் அமைந்த கமிட்டி கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டில் கொண்டுவரவேண்டிய மாற்றங்கள் விவாதிக்கப்பட்டன. அந்த கமிட்டியின் முக்கியமான பரிந்துரைகள் என்ன, எந்தஅளவில் அவை செயல்பாட்டிற்குவந்துள்ளன?

பதில்: வீரப்ப மொய்லி கமிட்டியில் சில நன்மைகள் இருந்தன. ஆனால் அவர்கள் கண்டறிந்த பெரிய பிரச்னை வாராக்கடன். வாராக்கடனை வசூலிப்பதற்கு (recovery)பதிலாக அரசாங்கம் வாராகடனுக்கு தீர்வு (resolve) காணுங்கள் என கூறுகிறது. எடுத்துக்காட்டாக, பூஷன் ஸ்டீல் என்ற நிறுவனம் செலுத்தவேண்டிய தொகை ரூ.56,000 கோடி, அந்த நிறுவனம் தரமுடியாது என இருக்கும் நிலையில் தீர்வு காணுங்கள் என அரசாங்கம் தெரிவித்தது. டாடா நிறுவனம் இந்த நிறுவனத்தை ரூ.35,000 கோடிக்கு வாங்க முன்வந்தது. இதன் முடிவில் வங்கிக்கு வெறும் ரூ.35,000 கோடிதான் கிடைத்தது. இது எந்த வகையில் பிரச்சினையை தீர்க்கும்? கடன் தொகை முழுதும் வங்கிக்கு திரும்ப கிடைக்கவில்லை.

அதேபோல அலோக் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் ரூ.30,000 கோடி தரவேண்டும். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் வெறும் ரூ.5,000 கோடியை மட்டும் செலுத்தி அந்த நிறுவனத்தை எடுத்துக்கொண்டது. இதன்மூலம் வங்கிக்கு கடன் பணம் திரும்பவில்லை. எந்த லாபமும் இல்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

அரசாங்கம் அடிக்கடி வாராக்கடனில் ரூ.ஒரு லட்சம் கோடியை வசூல் செய்துவிட்டோம் என்கிறார்கள். ஆனால் நான்கு லட்சம் கோடி வரவேண்டிய இடத்தில் வெறும் ஒரு லட்சம் கோடியை வாங்கி என்ன செய்யமுடியும்? வாராக்கடனை செலுத்தாத நபர்களின் விவரங்களை வெளிப்படையாக விளம்பரம் செய்து, கிரிமினல் நடவடிக்கை எடுக்க ஏன் அரசாங்கம் தயங்குகிறது.

வாராக்கடன் பிரச்னையை சரிப்படுத்த, தற்போது சாதாரண மக்களிடம் அபராதக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதை பார்க்கிறோம். ஏடிஎம் கார்ட் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம், காசோலை புத்தகத்திற்கு சேவை கட்டணம், குறைந்தபட்ச பணம் வங்கியில் இல்லாவிட்டால் அபராதம், வங்கியில் வந்து பணம் எடுப்பதில் சேவை கட்டணம் என பல விதமான கட்டணங்களை வங்கி வசூலிக்கிறது.

2018நிதிஆண்டில் அபராதம் கட்டணம் வசூலிக்கும் முறையின் கீழ், மூன்று மாத காலத்திற்கு ஈட்டும் லாபத்தை விட ரூ.1,500 கோடியை அதே மூன்று மாதத்தில் சாதாரண மக்களிடம் அபராத கட்டணமாக வசூல் செய்துள்ளது ஸ்டேட் வங்கி. இதுபோல பெரிய நிறுவனங்களிடம் பெரிய தொகையை கொடுத்து ஏமாந்து, எளிய மக்களிடம் பணத்தை அபராதமாக வசூலிக்கும் நிலைக்கு வந்துவிட்டோம் என்று கூறினார் வெங்கடாசலம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்