தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு படத்தின் காப்புரிமை Getty Images

இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

தினத்தந்தி: "தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிப்பு"

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்பந்தத்தின்படி தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவை 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்டவை. மீதமுள்ள சுங்கச்சாவடிகள் 2008-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டவை. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்தப்படி வருடத்துக்கு ஒருமுறை சுங்கச்சாவடியில் பயனாளர் கட்டணத்தை அதிகபட்சமாக 10 சதவீதம் உயர்த்திக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதன்படி 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், 2008-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 1992-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அடங்கின.

இந்தநிலையில் செப்டம்பர் மாதம் பிறந்ததை தொடர்ந்து 2008-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008-ன்படி, தமிழகத்தில் உள்ள 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது" என்று அந்த செய்தி விவரிக்கிறது.

இந்து தமிழ் திசை: "தனியார் பால் விலையும் உயர்வு"

படத்தின் காப்புரிமை Getty Images

ஆவின் பாலை தொடர்ந்து, தனியார் பால் விலையும் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

"தமிழகத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பொதுமக்களும் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இருப்பினும், ஆவின் பால் விலை உயர்வு குறைக்கப்படவில்லை.

இந்தநிலையில், ஹெரிடேஜ், திருமலா, டோட்லர், ஜெர்சி, சங்கம், கோவர்த்தனா, ஜேப்பியார் உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங் களும் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தியுள்ளது.

இதில், திருமலா, ஜேப்பியார் உள்ளிட்ட பால் நிறுவனங்கள் நேற்றுமுதல் விலை உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ளன. இதன்படி, இரு முறை சமன் படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் ரூ.38-ல் இருந்து ரூ.40 ஆக உயர்ந்துள்ளது.

சமன்படுத்தப்பட்ட பால் ரூ.40-ல் இருந்து ரூ.44 ஆகவும், நிலைப் படுத்தப்பட்ட பால் ரூ.50-ல் இருந்து ரூ.52-க்கும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.56-ல் இருந்து ரூ.58 ஆகவும் உயர்ந்துள்ளது. தயிர் 1 லிட்டர் ரூ.50-ல் இருந்து ரூ.56 ஆகவும் உயர்ந்துள்ளது" என்று அந்த செய்தி விவரிக்கிறது.

தினமணி: "விரைவில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை"

ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தமிழக செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, 'திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணங்களை ஒழுங்குபடுத்தியுள்ளோம். அதேபோன்று திரையரங்குகளில் விற்கப்படும் பொருட்களின் விலையையும் ஒழுங்குபடுத்த பல்வேறு விதிமுறைகளை வகுத்து, அதன்படி செயல்படுத்தி வருகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

நாள் ஒன்றுக்கு ஆன்லைன் மூலமாக எவ்வளவு டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. ஏற்கனவே கூறியபடி, திரையரங்கில் பார்க்கிங் கட்டணமும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

அதிகமான விலைக்கு சினிமா டிக்கெட்டுகள் வெளியில் விற்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. இதனால், ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் கொண்டு வரப்படும்" என்று அந்த செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்