போக்குவரத்து விதிகளை மீறியவருக்கு ரூ. 23,000 அபராதம் விதித்த போலீஸார்

ஹரியானா படத்தின் காப்புரிமை Hindustan Times

ஹரியானா மாநிலம் குருகிராமில் மாநில போக்குவரத்து போலீஸார் புதிய மோட்டார் வாகன சட்டப்படி, வாகன ஓட்டி ஒருவருக்கு 23,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இந்த மாதத் தொடக்கத்திலிருந்து மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுக்க அமலுக்கு வந்துள்ளது.

இச்சூழலில், புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நேற்று திங்கள்கிழமை காலை சுமார் ஒரு மணியளவில் ஓட்டுநர் உரிமமின்றி, தலைக்கவசம் அணியாமல் பயணித்த தினேஷ் மதான் என்பவருக்கு மாநில போக்குவரத்துப் போலீசார் 23,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கு 5,000 ரூபாயும், வண்டியின் பதிவு சான்றிதழ் இல்லாததற்கு 5,000 ரூபாயும், மூன்றாம் நபர் பைக் காப்பீடு எடுக்காததற்கு 2,000 ரூபாயும், காற்று மாசுபாட்டின் தரத்தை மீறியதற்காக 10,000 ரூபாயும், ஹெல்மட் இல்லாமல் பயணித்ததற்கு 1,000 ரூபாயும் என மொத்தம் 23,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தான் ஹெல்மட் அணியவில்லை என்றும், தன்னிடம் வாகனப் பதிவுச் சான்றிதழ் இல்லை என்றும் இதனால், போக்குவரத்து போலீஸார் 23,000 அபராதம் விதித்து வாகனத்தை கைப்பற்றிவிட்டதாகவும் தினேஷ் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்