மரங்களை பாதுகாத்தல்: ஆணியை பிடுங்கி சேவை செய்யும் போலீஸ்காரர்

ஆணிகளை பிடுங்கி மரங்களை காப்பாற்றி வரும் தலைமை காவலர்

விளம்பரத் தட்டிகளுக்காக மரங்களை சிலுவையில் அறையும் ஆணிகளை உயிர் நேயத்தோடு அகற்றி சேவை செய்கிறார் இந்த தலைமைக் காவலர். ஆம். இவர் பிடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணிகள்தான்.

மனிதர்களைப் போல மரங்களுக்கும் உயிர் உண்டு; அவற்றின் மீது ஆணி அடிப்பதால் நாளடைவில் அவை பட்டுப்போய்விடும் என்பது ராமநாதபுரத்தை சேர்ந்த தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசனின் கருத்து.

எனவே மரங்களில் ஆணிகொண்டு விளம்பரத் தட்டிகளை அடிப்பதால் சாலையோர மரங்களில் ஏறியிருக்கும் பல்லாயிரம் ஆணிகளை அகற்றுவதை ஒரு தன்னார்வ சேவையாகவே அவர் மேற்கொண்டு வருகிறார்.

மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பதாகைகளை கம்பியால் கட்டுகிறவர்கள் மீண்டும் அந்த ஆணிகளை பிடுங்குவதில்லை, கம்பிகளை கழற்றுவதில்லை.

விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் ஆணிகளையும், கம்பிகளையும் அகற்றாததால் மரங்கள் பெருத்த பாதிப்பிற்குள்ளாகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக காவலர் பணியில் இருந்து கொண்டே தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மரங்களில் ஏறியுள்ள இந்த ஆணிகளை அகற்றிவருகிறார் சுபாஷ் சீனிவாசன்.

ஆணி பிடுங்கும் பயணம்

தனது சொந்த காரில் ஓர் ஏணி, சுத்தியல் மற்றும் ஆணி பிடுங்கும் கருவிகளுடன் தனி ஆளாக புறப்படுகிறார்.

இராமநாதபுரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இரு புறமும் உள்ள மரங்களில் அவர் இந்தப் பணியை மேற்கொண்டுவருகிறார். காலை இரண்டு மணி நேரமும், மாலை இரண்டு மணி நேரமும் தனது வேலை நேரத்திற்குப் பிறகு இந்த வேலையில் ஈடுபடுவதாக அவர் கூறுகிறார்.

முதலில், ஆணி மரங்களின் ஆரோக்கியத்தை பாதித்துக்கும் என்று எந்த தகவலையும் அவர் அறிந்திருக்கவில்லை, ஆனால் மரங்கள் ஆணிகளால், அடிபட்டு உதவிக்காக தன்னை அழைப்பதாக உணர்ந்து மரங்களை ஆணியிலிருந்து விடுவிக்க முடிவு செய்து இந்த பணியினை துவங்கியதாக அவர் கூறுகிறார்.

அலட்சியப் பார்வைகளைப் பொருட்படுத்தாமல், இதுவரை மரங்களில் இருந்து தாம் அகற்றிய ஆணிகளின் எடை 20 கிலோ என்கிறார் சுபாஷ் சீனிவாசன்.

மக்கள் இப்போது அவரைப் பாராட்டத் தொடங்கியுள்ளனர். சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் சுபாஷ் சீனிவாசனை கௌரவிக்கும் விதமாக சான்றிதழ் வழங்கினார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுபாஷ் சீனிவாசன், "கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு மனிதர்கள் உயிர்வாழ மரங்கள் ஆக்ஸிஜன் தருகின்றன. ஆனால், மனிதர்கள் வியாபார நோக்கில் விளம்பரப் பலகைகளுக்காக மரங்களில் கண்மூடித் தனமாக ஆணிகளை அறைகின்றனர். "

"தமிழக அரசு மரங்களை இப்படி காயப்படுத்துபவர்கள் மீது வழக்குபதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் மரங்களை பாதுகாக்க முடியும். மரம் நட எனக்கு இடமில்லை. ஆனால் காயமடைந்த நூற்றுக்கணக்கான மரங்களை என்னால் காப்பாற்ற முடியும்," என்றார்.

ஆணி அடிப்பதால் மரங்களுக்கு என்ன ஆகும்?

இது குறித்து ராமநாதபுரம் வனத்துறை அதிகாரி சதீஸ் கூறுகையில், "நன்கு வளர்ந்த ஒரு மரம் வருடத்திற்கு 260 பவுண்ட் ஆக்சிஜனை வளி மண்டலத்திற்குத் தருகிறது.

இந்த அளவு ஆக்சிஜன் ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்குப் போதுமானது. அவ்வாறு பயன் தரக்கூடிய மரங்களை காயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மரங்களில் ஆணி அடிப்பதால் அவற்றுக்கு தொற்று ஏற்பட்டு வளர்ச்சி பாதிக்கப்பட்டு, பின்னர் அவை பட்டுவிடும்.

எனவே சாலைகள் ஓரம் உள்ள மரங்களில் யாரும் ஆணி அடிக்கக் கூடாது என வனத்துறை சார்பில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: