ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாள்: மாவட்ட நிர்வாகம் முதல் மகேந்திரா நிறுவனம் வரை குவியும் உதவிகள்

இட்லிப் பாட்டி

கோவை மாவட்டம், வடிவேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் புதிய வீடு கட்டி தருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களில் பிபிசி தமிழ் உட்படப் பல ஊடகங்களில் செய்தியாக வந்த ஒரு ரூபாய் இட்லிப்பாட்டிக்கு பிரதமரின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கமலாத்தாள் பாட்டி குறித்து ஊடகங்களில் தொடர்ந்து வந்த செய்திகளால், பலர் பாட்டியின் வீடு தேடிச் சென்று தங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு பொருள் உதவியும் செய்து வருகின்றனர்.

மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா பாட்டி குறித்த செய்தியை பகிர்ந்து பாட்டியின் வியாபாரத்தில் தான் முதலீடு செய்ய விரும்புவதாகவும், அவருக்கு எரிவாயு அடுப்பு வாங்கி தருவதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று கமலாத்தாள் பாட்டியைத் தனது அலுவலகத்திற்கு வரவழைத்த கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவரது சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

வீடு பழுதடைந்த நிலையில் இருப்பதாகப் பாட்டி கூறியதைக் கேட்ட ஆட்சியர், பிரதமரின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தரப்படும் எனவும், தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

யார் இந்த ஒரு ரூபாய் இட்லிப் பாட்டி?

கோவை மாவட்டம் ஆலாந்துறை வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள். 85 வயதான கமலாத்தாள் தனது ஒரு ரூபாய் இட்லி குறித்த ஊடகங்களின் செய்தியால் பிரபலம் அடைந்தார்.

கமலாத்தாள் பாட்டி தனது இட்லி வியாபாரம் தொடங்கிய முதல் 15 வருடங்கள் 50 பைசாவுக்கும், அதன் பிறகு தற்போது வரை ஒரு ரூபாய்க்கும் இட்லி விற்று வருகிறார்.

வீட்டிற்கு வாங்கிச்செல்லப் பாத்திரம் கொண்டு வந்தால் மட்டுமே இட்லி கொடுக்கிறார்.

பாட்டியின் சுவையான இட்லிக்கு வடிவேலம்பாளையத்தை சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டருக்குள் இருக்கும் ஊர்களிலிருந்து தினமும் பலர் வந்து செல்கின்றனர்.

பாட்டிக்கு ஆதரவாக அவரது பேரன் புருசோத்தமன் இருந்து வருகிறார்.

இந்தத் தள்ளாத வயதிலும், ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மிக் கல்லில் சட்னி அரைக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்