சுபஸ்ரீ ரவி: அதிமுக பேனர் விழுந்து விபத்து: சென்னை இளம்பெண் பலி - கலைந்த கனடா கனவு

சுபஸ்ரீ
Image caption சுபஸ்ரீ

சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 23 வயது இளம்பெண் பலியாகியுள்ளார். பேனர் வைப்பதற்குச் சென்னை மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சுபஸ்ரீ

சென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. பி.டெக் படிப்பை முடித்துள்ள இவர் இன்று சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சுற்றுச் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

அந்தப் பகுதியில் சாலையில் உள்ள மீடியன் நெடுக, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளரும் பள்ளிக்கரணையின் முன்னாள் நகர் மன்ற உறுப்பினருமான சி.ஜெயகோபால் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மீடியனில் மட்டுமல்லாமல் சாலையின் இருபுறங்களிலும் இந்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

படத்தின் காப்புரிமை TWITTER

சுபஸ்ரீ அந்த வழியாகத் தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது, சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் லாரி, அவரது வாகனத்தில் மோதியது.

இதனால், சுபஸ்ரீ லாரியின் சக்கரத்திற்கு அடியில் சிக்கிப் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், லாரியை ஓட்டிவந்த மனோஜ் என்ற ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கனடா செல்வதற்காக விண்ணப்பித்திருந்த சுபஸ்ரீ, அதற்கான நேர்காணலை முடித்துவிட்டு வரும்போது இந்த விபத்து ஏற்பட்டது. உயிரிழந்த சுபஸ்ரீ அவரது பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார்.

கைது இல்லை

பேனர் வைத்தது தொடர்பாக யாரும் கைதுசெய்யப்படவில்லையென்றாலும், மரணத்திற்குக் காரணமாக இருப்பவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கான 336, 304ஏ பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், பேனர்கள் வைப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

சென்னையில் அனுமதியின்றி பேனர் வைத்தால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

விளம்பர பதாகைகள் அச்சிடும்போது, அதன் கீழ் அதற்கான அனுமதி எண், அனுமதி வழங்கப்பட்ட நாள், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம், கால அவகாசம் ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

மேலும், அனுமதியின்றி பேனர் அடித்துக்கொடுக்கும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அச்சகம் மூடி சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்திருந்தது.

நீதிமன்ற எச்சரிக்கை

இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோத பேனர்கள் குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தது. பேனர்கள் வைப்பதில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும் கூறியிருந்தது.

சுபஸ்ரீயின் மரணத்தையடுத்து, இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். "அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?" என அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Twitter

தற்போது ட்விட்டரில் #AdmkKilledSubasri என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்டு, முதலிடத்தில் இருக்கிறது.

இதற்கு முன்பாக கோயம்புத்தூரில் ரகு என்பவர் மீது இதேபோல பேனர் விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

Chennai மீனவ குப்பம் டூ ஆஸ்கர் - சிறுமி கமலியை உங்களுக்கு தெரியுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்