மத்திய பிரதேசம்: மழை நிற்க வேண்டி வேத மந்திரங்கள் முழங்க தவளைகளுக்கு நடத்தப்பட்ட விவாகரத்து சடங்கு

மழை நிற்க வேண்டி தவளைகளுக்கு விவாகரத்து

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை வழங்குகிறோம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா: மத்திய பிரதேசத்தில் மழை நிற்க வேண்டி தவளைகளுக்கு விவாகரத்து

மத்திய பிரதேசத்தில் பெய்துவரும் கடும் மழையை நிறுத்த வேண்டி ஓம் ஷிவ் சேவா மண்டல் உறுப்பினர்கள் தவளைக்கு விவாகரத்து செய்யும் பூஜையை பரிகாரமாக செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் இதே தவளைகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஓம் ஷிவ் சேவா மண்டல் உறுப்பினர்கள் திருமணம் செய்து வைத்தனர்.

மழை கடவுளை மகிழ்விக்கும் முயற்சியில் மத்திய பிரதேசம் போபாலில் உள்ள இந்திரபுரி கோயிலில் வேத மந்திரங்கள் ஒலிக்க தவளை பொம்மைகளுக்கு விவாகரத்து செய்யும் நிகழ்வு நடந்தது.

கடந்த ஜுலை 19ஆம் தேதி, மத்திய பிரதேசத்தில் கடும் வறட்சி மாதிரியான காலகட்டத்தை எதிர்கொண்ட போது, இதே தவளை பொம்மைகளுக்கு ஓம் ஷிவ் சேவா மண்டல் உறுப்பினர்கள் திருமணம் முடித்து வைத்தனர்.

ஆனால், தற்போது போபாலில் பெய்த மழையின் அளவை ஒப்பிடும் போது, கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் மழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் ஷிவ் சேவா மண்டல் உறுப்பினர்கள் இந்த விவாகரத்து பூஜையை நிறைவேற்றியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி தெரிவிக்கிறது.

தினமலர்: "பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரை மீட்க தயார் நிலையில் இந்திய ராணுவம்"

படத்தின் காப்புரிமை Hindustan Times

பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரை மீட்க வேண்டி இருந்தால் அதற்கு இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக இந்திய ராணுவத்தின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரும், பா.ஜ. வைச் சேர்ந்தவருமான ஜிதேந்திர சிங் சமீபத்தில் ஒரு பேட்டியில், "பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் இந்தியாவின் அடுத்த இலக்கு" என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து ராணுவ தளபதி பிபின் ராவத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, மத்திய அரசுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவு செய்யும் என்றும், அரசு உத்தரவிட்டால் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து அமைப்புகளும் அதை நிறைவேற்ற தயாராக உள்ளன என்றும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி விவரிக்கிறது.

தினமணி: பூமியைப் போன்ற மற்றொரு கிரகம் கண்டுபிடிப்பு

பூமியிலிருந்து 110 ஒளி ஆண்டு தூரத்தில் அமைந்திருக்கும் கே2-18பி என்ற கிரகத்தில் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கே2-18பி கிரகம் பூமியைப் போல் 8 மடங்கு பெரிதானது. பூமியைப் போலவே தட்பவெப்ப நிலையைக் கொண்டது.

இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களிலேயே, உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலையைக் கொண்டுள்ள, பூமி அல்லாத ஒரே கிரகம் இதுவாகும் என்று நேச்சர் அஸ்ட்ரானமி அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இச்செய்தி விவரிக்கிறது.

தினத்தந்தி: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோயிலை போன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் இலவசமாக லட்டு வழங்கப்பட உள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில், இந்தியாவில் உள்ள தூய்மையான புனித தலங்களில் மீனாட்சி அம்மன் கோவில் 2வது இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும், அதிகாலை நடை திறந்ததில் இருந்து, இரவு நடை சாத்தப்படும் வரை, தீபாவளி திருநாளான வருகிற 27.10.2019ஆம் தேதி முதல் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளதாக அந்நாளிதழின் செய்தி விவரிக்கிறது.

நான் ஏன் ஹிஜாப் அணிந்து ஆபாச படத்தில் நடித்தேன்? - Mia Khalifa interview

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: