சுபஸ்ரீ மரணம்: 'விவாகரத்துக்கு மட்டும்தான் அரசியல் கட்சியினர் பேனர் வைப்பதில்லை' - உயர் நீதிமன்ற நீதிபதிகள்

சுபஸ்ரீ

சென்னை பள்ளிக்கரணையில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில், இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவத்தில் சட்ட விரோத பேனர்கள் வைக்க அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முறைகேடாக பேனர் வைக்கக் காரணமாக இருந்த அதிகாரிகளிடம் இருந்து பணம் வசூலித்து சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விதிகளை மீறி பேனர் வைத்ததற்காக எந்தெந்த அரசியல் கட்சியினர் மீதி எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, சுபஸ்ரீ மீது மோதிய லாரியின் ஓட்டுநர் மீது என்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சுபஸ்ரீ மரணத்தைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை இன்று (வெள்ளிக்கிழமை) சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமி தொடர்ந்தார்.

அந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி ஆகியோரின் அமர்வின் முன் இன்று காலை தொடங்கிய விசாரணை மதியமும் தொடர்ந்தபோது இந்தக் கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

பேனர்கள் வைப்பதைத் தவிர்க்குமாறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் தொண்டர்களை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவித்தபோது, அவர்கள் அறிக்கையாக வெளியிடுவது மட்டுமல்லாது, பேனர்கள் வைக்கப்படாது என ஏன் நீதிமன்றத்தில் உத்தரவாதமாக தெரிவிக்க கூடாது என்றும் கேட்டனர்.

காத்து குத்து, கிடா வெட்டு என அனைத்துக்கும் பேனர் வைக்கிறார்கள். விவாகரத்துக்கு மட்டும்தான் அரசியல் கட்சியினர் இன்னும் பேனர் வைப்பதில்லை என்றும் நீதிபதிகள் அப்போது விமர்சித்தனர்.

வியாழக்கிழமை பகல் 2:30 மணிக்கு விபத்து நடந்துள்ளது, மாலை 6 மணி வரை ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேட்ட நீதிபதிகள் உடனடியாக வழக்கு பதிவு செய்யாத பள்ளிக்கரணை காவல் துறையினருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

பள்ளிக்கரணை மற்றும் பரங்கிமலை காவல்துறையினர் வழக்கு விசாரணை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோதமாக டிஜிட்டல் பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆகியோரது தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இது போன்ற சம்பவங்கள் ஏன் தொடர்ந்து நடைபெறுகின்றன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

படத்தின் காப்புரிமை Facebook
Image caption உயிரிழந்த சுபஸ்ரீ ரவி

நீதிமன்ற உத்தரவுகளின் முக்கியதத்துவம் குறித்து அரசு வழக்கறிஞர்களை போல அரசு அதிகாரிகள் அறிந்திருப்பதில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், விபத்தை ஏற்படுத்திய பேனரை முறைகேடாக வைக்க காரணமாக இருந்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யுமாறு தெரிவித்தனர். எனினும், அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பதை உத்தரவாகப் பிறப்பிக்கவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருந்தபோது தமிழக அரசு மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஏராளமான உத்தரவுகள் பிறப்பித்தும் பலனில்லை என்றும், தமிழக அரசின் நிர்வாகத்தை நாங்கள் செய்ய முடியாது என்றும் தெரிவித்தனர்.

தலைமை செயலகத்தை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு மட்டும்தான் தாங்கள் மாற்றவில்லை என்றும், ஆளும் கட்சியினர்தான் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் சட்ட விரோதமாக பேனர்களை வைக்கிறார்கள் என்றும் நீதிபதிகள் சாடினர்.

அரசு அதிகாரிகளை குற்றஞ்சாட்டிய நீதிபதிகள், மக்களின் ரத்தத்தை உறிஞ்சுபவர்கள் போல அரசு அதிகாரிகள் உள்ளனர் என்றும், இன்னும் எத்தனை லிட்டர் ரத்தத்தை பொதுமக்கள் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என்றும் நீதிபதிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மேலும், "சுபஸ்ரீ'யின் இத்தனை ஆண்டு வளர்ச்சிக்கு அவர் பெற்றோர் மட்டுமல்ல, சமுதாயத்தின் பங்கும் உள்ளது. நாட்டில் பொதுமக்களின் உயிருக்கு 1 சதவீத மதிப்புகூட இல்லை. அரசியல் கட்சியினரின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைத்தால் மட்டும்தான் விருந்தினர்கள் வருவார்களா?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடைபாதையை சேதப்படுத்தி ஆளுங்கட்சி கொடிவைக்க யார் அனுமதி கொடுத்தது என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், குற்றம் நடக்க அனுமதித்துவிட்டு பின்னர் குற்றவாளிகள் பின்னால் ஓடுவதையே அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது என்றும், பேனர் வைக்கக்கூடாது என்று கட்சிகாரர்களுக்கு திமுக தலைவர்கூட ஏன் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

விபத்து நடக்கக் காரணமாக இருந்த அதிகாரிகள் மற்றும் மெரினாவில் கொடி வைக்க அனுமதி வழங்கிய அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 02:15க்கு ஆஜராக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை

இதனிடையே, திராவிட முன்னேற்ற கழகத்தின் நிகழ்ச்சிகளுக்காக பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துவதாகவும், இந்த அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"அ.தி.மு.க.வினரின் பேனர் மற்றும் கட் அவுட் கலாசாரத்தால் சுபஸ்ரீ என்ற மற்றுமொரு இளம்பெண் உயிர் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று மீண்டும் அறிவுறுத்த விரும்புகிறேன். இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நான் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ, கூட்டமாகவோ இருந்தால் அதில் நான் பங்கேற்க மாட்டேன் என்றும் தெரிவித்து கொள்கிறேன்" என்று அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் மனம் அறிந்து பணியாற்றுவதுதான்தலையாய கடமை

அதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில், மக்களின் மனம் அறிந்து பணியாற்றுவதுதான் தொண்டர்களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என்றும், வரவேற்பு என்ற பெயரில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைப்பதை தொண்டர்கள் நிறுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்