காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்: பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கண்ணோட்டங்கள்

காஷ்மீர் படத்தின் காப்புரிமை EPA

தனது நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியல்சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்வதற்கு இந்தியா எடுத்த முடிவு குறித்து, நாட்டில் மாறுபட்ட அரசியல் கருத்துகள் நிலவுகின்றன.

இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின் எதிரெதிர் தரப்பில் இருந்து இரண்டு இந்திய அரசியல்வாதிகளை - வைஜயந்த் ஜே பாண்டா மற்றும் சசி தரூர் ஆகியோரை- இந்தியாவின் முடிவால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் பற்றி கருத்து கூறுமாறு தனித்தனியே பிபிசி கேட்டுக்கொண்டது. கண்ணோட்டங்கள் தனித்தனியாக பெறப்பட்டவை. ஒருவருக்கு பதில் அளிக்கும் வகையில் இன்னொருவர் கூறியது அல்ல.

'எல்லையற்ற நன்மைகளைப் பெறும் வாய்ப்பு'

வைஜயந்த் ஜே பாண்டா நான்கு முறை எம்.பி.யாக இருந்தவர், இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) தேசிய துணைத் தலைவராக இருப்பவர்.

காஷ்மீர் விஷயத்தில் அரசின் நடவடிக்கைக்கு பாஜகவின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமின்றி, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும், காஷ்மீர் பிரிவினைவாதிகளும், இந்தியாவில் எதிர்க்கட்சியினர் சிலரும், இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, இது கண்ணீரில் போய்தான் முடியும் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP

ஆனால், பயன்தராத அரசியல் சட்டம் 370வது பிரிவு அமலில் இருந்த காலத்தில் நிலவியதைவிட, அதை நீக்கிய பிறகு நிலைமை எப்படி மோசமாகிவிட முடியும்?

அந்த காலக்கட்டத்தில் காஷ்மீரில் 40,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இரண்டு போர்கள் நடந்துள்ளன. 1990களில் தீவிரவாதம் வளர்ந்த காலத்தில் அந்தப் பகுதியில் சிறுபான்மையினராக இருந்த காஷ்மீரி பண்டிட் சமூகத்தவர்கள் லட்சக்கணக்கில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டதும் நடந்தது.

இப்போது எல்லையில்லாத நன்மைகளைப் பெறும் வாய்ப்பு காஷ்மீருக்குக் கிடைத்துள்ளது.

காஷ்மீருக்கு 370வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து என்பது, இந்திய நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட பல புரட்சிகரமான தீர்ப்புகளும், நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்களும் அங்கு பொருந்தாது என்பதாகும்.

குழந்தைத் திருமணம் தடுப்பு, தலித்களுக்கான உரிமைகள் , பெண்கள் மற்றும் ஒருபாலுறவினருக்கு எதிரான செயல்பாடுகளை ஒழிக்கும் முயற்சி, ஊழல் தடுப்பு உள்ளிட்ட சட்டங்களை அங்கு அமல் செய்ய முடியாமல் போனது.

படத்தின் காப்புரிமை ABID BHAT

1949ஆம் ஆண்டில் இந்திய அரசியல் சாசனத்தில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசாங்கம் 370வது பிரிவை சேர்த்தபோது, அந்த மாநிலத்துக்கு தனிப்பட்ட அரசியல்சாசனம், கொடி, சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. நீண்டகால நோக்கில் அவை ஒருபோதும் நீடிக்கும் விஷயமாக இருக்கவில்லை. ஜவஹர்லால் நேருவே அவ்வாறு கூறியுள்ள நிலையில், அது தற்காலிகமானது என்பது வெளிப்படையாகத் தெரிந்த விஷயமாக உள்ளது.

1947 அக்டோபரில் இந்தியாவுடன் முறைப்படி காஷ்மீர் சேர்க்கப்பட்டபோது, மற்ற மன்னராட்சி மாகாணங்கள் சேர்க்கப்பட்ட அதே விதிமுறைகளின்படிதான் சேர்க்கப்பட்டது.

அதன்பிறகு, சரியாகச் சொல்வதானால், 370வது பிரிவு சேர்க்கப்பட்டதும், அதன் மீதான திருத்தங்களும் இந்திய நாடாளுமன்றத்தால் செய்யப்பட்டன. இதில் பாகிஸ்தானுக்கோ அல்லது வேறு எந்த அமைப்புக்குமோ எந்த சட்டபூர்வ பங்கும் கிடையாது. இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட எந்தவொரு மாநிலத்தையும் போன்றதுதான் காஷ்மீரும்.

முக்கியமாக, அந்தப் பகுதி மக்களுக்கு முன்பு இருந்ததைப் போன்ற அதே ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து கிடைக்கும், இந்தியாவின் வேறு எந்தப் பகுதியில் உள்ளவர்களைப் போல இவர்களுக்கும் கிடைக்கும். அங்கும் தேர்தல்கள் நடைபெறும். 200 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளிட்ட 1.36 பில்லியன் குடிமக்களைப் போல, சமத்துவத்துக்கான உரிமைகள் கிடைக்கும்.

ஒரு யூனியன் பிரதேசம் என்ற வகையில், மற்ற மாநிலங்களைவிட இந்தப் பகுதிக்கு அளிக்கப்படும் மத்திய அரசின் அதிகாரங்கள் குறைவாக இருக்கும் என்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய மற்றும் மாநில ஆதாரவளங்களை மத்திய அரசு சிறந்த முறையில் ஒருங்கிணைத்து செயல்படுத்த இது உதவியாக இருக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

1948ல் இருந்து, ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு மத்திய அரசு பெருமளவு நிதி ஒதுக்கிய போதிலும் (தனிநபர் அடிப்படையில் நாட்டின் மற்ற பகுதிகளைவிட நான்கு மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டது), அதற்கு உரிய பயன்கள் கிடைக்கவில்லை.

நிறைய சமூகப் பொருளாதாரக் குறியீடுகளில் இந்திய சராசரிக்கு நெருக்கமாக காஷ்மீரின் குறியீடுகள் இருந்தாலும், அது சொந்த வளர்ச்சியால் கிடைத்தது அல்ல, டெல்லியில் இருந்து கிடைத்த உதவிகளால்தான் அது ஏற்பட்டது.

சிறப்பு அந்தஸ்து காரணமாக இந்திய கஜானாவில் இருந்து பெருமளவு நிதி அங்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டது. பாதுகாப்பு சூழ்நிலைகள் மோசமாக இருந்ததால், மாநில பொருளாதாரத்தில் முதலீடுகள் தடுக்கப்பட்டன.

அது இப்போது பெரிய அளவில் மாற்றம் காணும். அக்டோபர் மாதத்தில் பெரிய தொழில் கூட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது தங்கள் சார்பில் பெரிய அளவில் முதலீடுகளை அறிவிக்கப் போவதாக இந்தியாவில் மிகப் பெரிய சில நிறுவனங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளன. பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல காஷ்மீரின் வளர்ச்சியில் பங்கேற்பதில் வேறு பல நிறுவனங்களும் ஆர்வம் காட்டியுள்ளன.

இந்தியா முழுக்கவே உணர்ச்சிபூர்வமான அம்சமாக நிலம் கருதப்படுகிறது. அதில் காஷ்மீர் மட்டும் விதிவிலக்கு அல்ல. இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் காஷ்மீரில் நிலம் வாங்குவதை 370வது சட்டப்பிரிவு தடுப்பதுடன் மட்டுமின்றி, காஷ்மீரி அல்லாத ஆண்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு அந்தச் சொத்தில் உரிமை கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது. நவீன சுதந்திர ஜனநாயகத்தில் இதுபோன்ற பாரபட்சங்களுக்கு இடம் இருக்க முடியாது.

வேறு சில மாநிலங்களிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் உள்ளன என்றாலும், அதில் முக்கியமான வேறுபாடு உள்ளது. உதாரணமாக, வடக்கில் உள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்தில், இந்தியாவில் வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்குவதற்கு முன்னதாக, குறிப்பிட்ட ஆண்டுகள் அங்கு வாழ்ந்தவராக இருக்க வேண்டும்.

அந்தப் பகுதியுடன் இணைந்தவராக இருக்கிறார் என்ற உறுதியை நிரூபித்தால்தான் நிலம் வாங்க முடியும் என்பது வாதத்திற்கு நல்ல விஷயமாக இருந்தாலும், பிராந்தியவாதம் அல்லது பாலின அடிப்படையில் மொத்தமாகத் தடை விதிப்பது தனித்தீவு போன்ற சூழ்நிலையைத்தான் உருவாக்கும்.

இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலம் என்ற நிலையைப் பாதுகாப்பது பற்றியும் வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.

இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டதன் அடிப்படைக் காரணமாக உள்ள அம்சம் என்பதால் பாகிஸ்தான் இதனால் மன உளைச்சல் கொண்டிருக்கிறது. ஆனால் பாகிஸ்தானின் கிழக்குப் பகுதி மொழி மற்றும் இனப் பாகுபாடு காரணமாக பிரிந்து சென்று வங்கதேசம் என்ற நாடாகிவிட்ட நிலையில், பாகிஸ்தானில் அது நிச்சயமாக மிகைப்படுத்தப்பட்ட விஷயமாக உள்ளது.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் அளவு குறைந்து வருவதற்கு மாறாக, இந்தியாவில் அது அதிகரித்து வந்துள்ளது. பிரிவினையின் போது இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த முஸ்லிம்கள் மக்கள் தொகை இப்போது 14 சதவீதத்துக்கும் அதிகம் என்ற நிலைக்கு அதிகரித்துள்ளது.

அனைத்து வகையிலும் இந்திய முஸ்லிம்கள் வெற்றியாளர்களாகவும் இருந்து வருகின்றனர். அரசியல், நீதித் துறை மற்றும் ராணுவத்தில் அவர்கள் உயர் பதவிகள் வகித்துள்ளனர். நாட்டின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.

காஷ்மீரிகள் விரும்பிய தன்னாட்சி என்பது ஏற்கெனவே மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் கூட்டமைப்பு முறையில் இடம் பெற்றிருக்கிறது. அதில் முழுமையாக ஒருங்கிணைந்த பகுதியாக மாறுவதன் மூலம், இப்போது யூனியன் பிரதேசமாக இருந்தாலும் அல்லது மீண்டும் மாநிலமாக மாறினாலும், அதன் மக்களுக்கு நல்ல வாழ்க்கைச் சூழலை உருவாக்கித் தருவதற்கு ஏற்ற வசதிகளைப் பெற முடியும்.

ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையத் அக்பருதீன் குறிப்பிட்டபடி, 370வது பிரிவைப் பொருத்த வரை வெளிப்புற தாக்கம் எதுவும் கிடையாது.

அங்கு தற்காலிகமாக மேற்கொள்ளப் பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வன்முறைகள் தூண்டப்படுதல் மற்றும் உயிரிழப்புகளை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியுள்ளது; பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதைப் பொருத்தவரை, சிம்லா ஒப்பந்தத்தின்படி செயல்படுவதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக இருக்கிறது. உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டு வந்து, மோதலுக்கு முடிவு கட்டுவதற்கு அதில் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

'காஷ்மீர் நடவடிக்கை ஜனநாயகத்துக்குச் செய்த துரோகம்'

சசி தரூர் காங்கிரஸ் கட்சி எம்.பி. மற்றும் முன்னாள் வெளியுறவு இணை அமைச்சர்

தங்களுடைய ''நிரந்தர குடியிருப்புவாசிகளை'' வரையறுக்க காஷ்மீருக்கு அதிகாரம் அளித்தல், அவர்களை வேறுபடுத்திக் காட்ட (மற்ற மாநிலத்தவர்கள் அங்கு சொத்துகளை வாங்கவோ அல்லது பாரம்பரிய உரிமையாகப் பெறவோ முடியாமல் தடுப்பது) வகை செய்யும் அரசியல் சாசன 370 மற்றும் 35ஏ பிரிவுகளை ரத்து செய்திருப்பது துணிச்சலான முடிவாகக் கருதப்படுகிறது.

தன்னாட்சி என்பது காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியைத் தனிமைப்படுத்தி விட்டது என்று அரசின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மாநிலத்தில் பெருமளவிலான பிரிவினைவாத வன்முறையைத் தடுக்கத் தவறிவிட்டது என்றும் கூறுகின்றனர்.

இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்ததால், காஷ்மீரி பண்டிட்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பகுதிகளில் இருந்து விரட்டப்படுவதை அது அனுமதித்தது என்றும் குறிப்பிடுகின்றனர். புரட்சிகரமான இந்திய சட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை (தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தலித் சமுதாயத்தினருக்கு அதிகாரம் கிடைப்பதை உறுதி செய்வது போன்றவை) அமல் செய்ய முடியாமல் சிறப்பு அந்தஸ்து தடுத்துவிட்டது என்றும் தெரிவிக்கின்றனர்.

இவை அனைத்துமே உண்மைதான். ஆனால் அது 370வது பிரிவால் நடக்கவில்லை.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதால், காஷ்மீரி அல்லாதவர்கள் தாராளமாக நிலம் வாங்கலாம் என்பதாலும், அங்கு தாராளமாக முதலீடு செய்யலாம் என்பதாலும் அங்கு அதிக பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று அரசின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

உண்மையில், சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, வெளி மாநிலங்களில் உள்ள முதலீட்டாளர்களுக்கு மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்; இந்தியாவில் மிகப் பெரியதாக உள்ள ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் மாநிலத்தில் திட்டங்களைத் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளன. மாநிலம் பற்றிய திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஏற்கெனவே தலைப்புகளைத் தேர்வு செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

அழகான காஷ்மீரி பெண்களை இனிமேல் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதால், பாலின-சம நிலை பிரச்சனைகளை எளிதில் தீர்த்துவிடலாம் என்ற துரதிருஷ்டவசமான கருத்தை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும் இந்த முடிவால் ஏற்படும் குறுகிய கால மற்றும் நடுத்தரக் கால பாதிப்புகள், பேச்சளவில் உள்ள நீண்டகால ஆதாயங்களைவிட அதிகமாக இருக்கும் என்று பலரும் கவலைப்படுகிறார்கள்.

அந்த மக்களையோ அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையோ கலந்து ஆலோசிக்காமல் இந்திய அரசு எடுத்துள்ள முடிவு, இந்தியாவின் ஜனநாயகக் கலாசாரத்துக்கு முரணாக அமைந்ததால், ஜம்மு காஷ்மீருக்கும் இந்தியக் குடியரசுக்கும் இடையிலான உறவு நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது முதன்மையான விஷயம்.

படத்தின் காப்புரிமை ABID BHAT

இந்த விஷயம் தந்திரமாகக் கையாளப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது, இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கான அச்சுறுத்தலாகவும் உள்ளது: இப்போது ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் இதைச் செய்ய முடியுமானால், எதிர்காலத்தில் உங்களுக்கும் இதேபோல செய்ய முடியும் என்ற அச்சமாக அது இருக்கிறது.

மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாக அரசு கூறிக் கொள்வது (இந்திய அரசியல்சாசனத்தின்படி அது கட்டாயம்), அரசு என்பதை டெல்லியால் நியமிக்கப்படும் ஆளுநரைக் குறிப்பிடுவது என்பது, அரசியல் சாசன திருத்தம் செய்வதற்கு தன்னுடைய அனுமதியைத் தானே பெறுவது போன்ற செயலாக உள்ளது.

மற்ற கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமலே இந்த முடிவு நாடாளுமன்றத்தில் (ஆளும்கட்சிக்குப் பெரும்பான்மை இருப்பதால், மசோதா நிறைவேறுவது உறுதியான விஷயம்) சமர்ப்பிக்கப்பட்டது: மாநில சட்டமன்றம் ஆறு மாதங்களுக்கு மேலாக சஸ்பென்ட் செய்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் ``தடுப்புக்காவல்'' வைக்கப்பட்ட நிலையில் இது தாக்கல் செய்யப்பட்டது;

இந்த முற்றுகை நடவடிக்கை எடுக்கப்பட்டதில் காஷ்மீர் முழுக்கவே இருளில் மூழ்கியதைப் போல ஆகிவிட்டது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, தேர்வுகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளன, கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, தொலைக்காட்சி சேனல்களின் செயல்பாடு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, தொலைத்தொடர்பு சேவைகள் இல்லை, சாதாரண தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப் பட்டுள்ளன, இணையதள சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளன.

நமது காஷ்மீர் குடிமக்களில் மிகப் பெரும்பாலானோர் , தங்களுடைய அந்தஸ்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏறத்தாழ முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

உச்சநீதிமன்றத்தில் அரசின் வழக்கறிஞர்கள் நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் விளக்கங்கள் அளித்தாலும் (அரசின் நடவடிக்கைகளை எடுத்து அங்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது), சட்டத்தின் விதிகளின்படி தான் செயல்பட்டிருப்பதாகக் கூறினாலும், இந்த நடவடிக்கை இந்திய ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகமாகக் கருதப்படுகிறது. ``காவல் படை அரசாங்கம்'' என்று வர்ணிப்பது மிகவும் சரியானதாக இருக்கும்.

பொருளாதாரப் பாதிப்பு ஏற்கெனவே வெளிப்படையாகத் தெரிகிறது. காஷ்மீரின் வாழ்வாதாரமாக இருக்கும் சுற்றுலா பெரிய அழிவைச் சந்தித்துள்ளது. இயல்புநிலை உள்ளதாக உலகிற்குக் காட்டுவதற்கு முந்தைய அரசுகள் பல தசாப்தங்களாக மேற்கொண்ட முயற்சிகள், காஷ்மீர் மாநிலத்தில் பிரச்சினை இல்லை, சுற்றுலா செல்ல பாதுகாப்பான இடமாக உள்ளது என்று உறுதி அளித்து, காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என தங்கள் குடிமக்களுக்கு விடுத்த அறிவுறுத்தல்களை வெளிநாட்டு அரசுகள் திரும்பப் பெறும்படி செய்த நடவடிக்கைகள் ஆகியை இதன் மூலம் நொறுக்கப் பட்டுள்ளன.

இதில் 2017ல் அந்த மாநிலத்துச் சென்ற பிரதமர், சுற்றுலாவா தீவிரவாதமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று இளைஞர்களுக்கு (இந்தியாவின் மற்ற பகுதிகளைவிட வேலையில்லா பிரச்சினை அங்கு இரு மடங்காக 24.6 சதவீதம் என்ற அளவில் உள்ள நிலையில்) அழைப்பு விடுத்தார் என்பது விநோதமாக உள்ளது.

இந்த வேலையில்லா இளைஞர்கள் பலருக்கு சுற்றுலாத் துறை மூலம் வேலை கிடைத்திருக்கும். ஆனால் ஜம்மு காஷ்மீரில் அடக்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் அவர்களின் வேலை வாய்ப்பு பறிபோயுள்ளது. வெளிநாட்டு அரசுகள் மீண்டும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. புகழ்பெற்ற படகு இல்லங்களின் தொழில் வணிகம் பாதிக்கப் பட்டுள்ளது. காஷ்மீரின் சிறந்த கைவினைக் கலைஞர்கள், கார்ப்பெட் தயாரிப்பாளர்களின் தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய மதச்சார்பின்மையின் அடையாளமான - அமர்நாத் யாத்திரை - ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்து யாத்ரிகர்கள் பனிபடர்ந்த வடக்குப் பகுதிக்குச் செல்லும் யாத்திரைக்கு கொடூரமாக இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகக் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் முடக்கியுள்ளதன் மூலம், ஜனநாயக விரோத சக்திகளுக்கான கதவுகளை அரசு திறந்துவிட்டிருக்கிறது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம்.

சிறப்பு அந்தஸ்து இருந்த காரணத்தால்தான், கருத்து வேறுபாடுகளை மறந்து காஷ்மீரி தலைவர்கள் பலர், இந்தியாவுக்கு உள்பட்ட தன்னாட்சி முறையின் பாதுகாவலர்களாக, பிரதான அரசியலில் பங்கேற்க முடிந்தது.

இப்போது அந்த கவசம் பறிக்கப்பட்டுள்ளது; தீவிரவாதத்தைத் தடுக்க மாநில அரசியல்வாதிகள் தேவையற்றவர்கள் என்பது போன்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அரசு வெற்றி பெற்றுள்ளதாக டெல்லி கூறிக்கொள்கிறது - ஆனால் இப்போது பயங்கரவாதத்துக்குப் புதிய உத்வேகம் ஏற்படக்கூடும், அநீதி என்று இதைப் புதிய விஷயமாக தீவிரவாதிகள் பிரச்சாரம் செய்யக்கூடும். தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்கள் முன்பைவிட அதிக அளவில், அவர்களுடன் கை கோர்க்கக் கூடும். இந்தியாவின் தைரியமான, ராணுவ வீரர்களுடன் மோதலில் ஈடுபடக் கூடும்.

இதுவரை டெல்லியின் நடவடிக்கைகள் அமைதியாக வரவேற்கப்பட்டுள்ள நிலையில், அடக்குமுறைகள் தளர்த்தி, நீக்கப்பட்ட பிறகு என்ன நடக்கும் என்பதை அனுமானிப்பது, இப்போதைக்கு சாத்தியமில்லை. தடைகளை ஒரு நாள் அகற்றித்தான் ஆக வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :