இந்தி திணிப்பு: இது இந்தியா, `இந்தி`யா அல்ல: அமித் ஷாவுக்கு எதிராக ட்விட்டரில் டிரண்டாகும் #StopHindiImposition

இந்தி படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவை இணைக்கும் மொழி இந்தியாகதான் இருக்கும் என அமித் ஷா டிவிட்டரில் பகிர்ந்துள்ளதால் #StopHindiImposition என்னும் ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சபையால் இந்திய நாட்டின் அலுவல் மொழியாக இந்தி மொழி அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் இந்தி இலக்கியத்தில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

இந்தி திவஸுக்கு சில தினங்களுக்கு முன்னதாக #WeDontWantHindiDivas என்ற ஹாஷ்டேக் டிரெண்டானது.

இந்திய மொழிகளின் தினம்தான் வேண்டும் என்று தென்னிந்தியர்கள் பலர் ட்விட்டரில் தங்களது கருத்துகளை பதிந்தனர்.

இந்நிலையில் இந்தி திவஸ் தினமான இன்று, தனது ட்விட்டரில் பக்கத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்தியா பல மொழிகளை கொண்ட ஒரு நாடு. ஒவ்வொரு மொழியும் தனித்துவம் வாய்ந்தது. ஆனால் அதே சமயம் உலகளவில் நமது நாட்டின் அடையாளமாக ஒரே மொழி இருத்தல் வேண்டும். தற்போதைய சூழலில் ஒரு மொழி நம்மை இணைக்குமானால் அது இந்தி மொழியாகதான் இருக்கும். ஏனென்றால் அதுதான் அதிகளவில் பேசப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

எனவே தென் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து #StopHindiImposition என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் அடையாளம் அதை விட்டுவிட்டு ஒரே மொழியை திணிக்க முயற்சிப்பது இந்தியாவின் அடையாளத்தை அழிப்பதற்கு முயற்சிப்பதாகும் என பலரும் டிவிட்டரில் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்தி மொழி திணிப்புக்கு எதிரான ஹாஷ்டேக் டிரண்டாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் பல சமயங்களில் #StopHindiImposition என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகியுள்ளது. தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ட்விட்டர் பயனர்கள் இதனை டிரண்ட் ஆக்கியுள்ளனர்.

நாடு முழுவதும் நடுநிலை வகுப்பு மும்மொழிக் கொள்கை அமலுக்கு வருவதாக தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து ட்விட்டரில் #StopHindiImposition #TNAganistHindiImposition போன்ற ஹாஷ்டேகுகள் உலகளவில் ட்ரெண்டாகின.

அமித் ஷாவின் இந்த கருத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

"அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சமத்துவத்துடன் பேணப்படவேண்டிய நிலையில், அதில் ஒரு மொழியான இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்ற வகையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், நாட்டின் உள்துறை அமைச்சரே தன் கருத்தை வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல; கடும் கண்டனத்திற்குரியதுமாகும்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், அமித் ஷா தனது கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

96 பாடலாசிரியர் கார்த்திக் நேதா நேர்காணல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்