5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: ’மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்’

தேர்வு எழுதும் பெண் படத்தின் காப்புரிமை Newsday LLC/Getty Images
Image caption ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு என்பது கூடுதல் சுமையாக இருக்குமென பெற்றோர் வேதனை

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த உமா ஐந்தாம் வகுப்பு படிக்கும் தனது மகளை பொதுத்தேர்வுக்கு தயார் செய்வது எப்படி என ஆசிரியர்களிடம் பேசிவருகிறார்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து, உமாவைப் போல பல பெற்றோர்கள் பொதுத் தேர்வை தங்களது குழந்தைகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என யோசித்துவருகிறார்கள்.

''வகுப்பில் நடக்கும் தேர்வில் பதில் தெரிந்திருந்தாலும், ஒரு சில பரீட்சையில் என் மகள் கவிதா பதில் எழுதாமல் விட்டுவிடுவாள். தேர்வு முடிந்து, வீட்டில் நான் அதே கேள்வியை கேட்டால் பதில் சொல்வாள். இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வை அவள் எழுதவேண்டும் என்பது எனக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,''என தவிப்புடன் பேசுகிறார் உமா.

முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தாலும், பெற்றோர்கள், மத்தியில் குழந்தைகள் தேர்ச்சி பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டுவருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

''ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு என்பது கூடுதல் சுமையாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. ஆசிரியர்களிடம் பேசி இந்த தேர்வுக்குத் தயார் செய்யவேண்டும். கவிதாவின் முழு ஆண்டு தேர்வுக்கு மட்டும் வேலையிலிருந்து நான் விடுப்பு எடுப்பேன். இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு என்பதால், நான் அரை ஆண்டு தேர்வுக்கும் நன்றாக அவளைத் தயார் செய்யவேண்டும் என எண்ணுகிறேன். பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதினால் அந்த வயதில் பரீட்சை எழுதுவதற்கான முதிர்ச்சி இருக்கும். அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு இல்லாத கல்வி முறைக்கு மாற்றலாமா என யோசிக்கிறேன்,''என்கிறார் உமா.

பொதுத் தேர்வுக்கு தயாராகும் குழந்தைகள் பலர் மன உளைச்சல் காரணமாக தன்னிடம் சிகிச்சைக்கு வந்துள்ளதை நினைவுகூர்ந்த மனநல மருத்துவர் அபிலாஷா, குழந்தைகளுக்கு ஏற்றபடி கல்வித்திட்டம் அமைப்பதற்கு பதிலாக தேர்வுக்கு தயாராகும் நோக்கத்துடன் கல்வித்திட்டம் இருப்பதாகக் கூறுகிறார்.

Image caption மனநல மருத்துவர் அபிலாஷா

''10 அல்லது 12ம் வகுப்புத் தேர்வுக்கு தயாராகும் நேரத்தில் ஏற்படும் மன உளைச்சலை சரிப்படுத்த பல குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை அளித்துள்ளேன். தேர்வு சமயத்தில் பெற்றோரும் கடுமையான மன உளைச்சலுடன் நடந்துகொள்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு என்பது குழந்தைகள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ளும் பருவம். அந்த பருவத்தில் தனித்திறகளை வளர்த்துக் கொள்ள நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். ஆனால் மனப்பாட கல்வி அவர்களை தேர்வுக்குத் தயார் செய்வதால், திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்காது,''என்கிறார் அபிலாஷா.

விளையாட்டு, இசை, நடனம் போலத் திறமைகளை வளர்க்கும் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட குழந்தைகள் தேர்வில் மதிப்பெண் வாங்குவது முக்கியம் என பெற்றோருக்கு தோன்றும் என்கிறார் அபிலாஷா.

''பொதுத்தேர்வுக்கு தயாராகவேண்டும் என்றால்,திறமைகளை வளர்க்கும் வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புவதை பெற்றோர் நிறுத்திவிடுவார்கள். மனப்பாட கல்வி ஆளுமை வளர்ச்சிக்கு உதவாது. குழந்தைகள் ஒன்றாக வளர்வதற்கு பதிலாக தேர்வுக்கு தயாராகவேண்டும் என்ற இலக்கில் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவார்கள் என்பதால், அவர்களின் ஆளுமை வளர்ச்சி பாதிக்கப்படும். வெறும் மனப்பாட கல்வியை விட தரமான கல்வி தேவை,''என்கிறார் அபிலாஷா.

Image caption ரேணுகா பாலகிருஷ்ணனின் குடும்பம்

ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகளைச் சந்திக்காத தனது மகள்களின் அறிவு வளர்ச்சியில் எந்த பின்னடைவும் இல்லை என்றும் வாதிடுகிறார் ரேணுகா பாலகிருஷ்ணன்.

''என் முதல் மகள் கிராபிக் டிசைனராக இருக்கிறார். இரண்டாவது மகள் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார். இருவரும் தேர்வு முறையைப் பின்பற்றாத தனியார் பள்ளியில் படித்தார்கள். பத்தாம் வகுப்பு தேர்வுக்குச் செல்லும் போது எந்த பயமும் அவர்களுக்கு இல்லை. தேர்வில் மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வி இல்லை என நாங்கள் நம்புகிறோம்,''என்கிறார் ரேணுகா.

இரண்டு மகள்களும் உடல் மற்றும் உள்ளத்தில் உறுதியோடு இருப்பதற்கும், பகுத்தறிவு மேம்படுவதற்கும் பல உலக நடப்புகளைத் தேடி படித்தார்கள் என்று கூறுகிறார் ரேணுகா. ''வரலாறு விஷயங்களை தெரிந்துகொள்ள தஞ்சாவூர் சென்றார்கள். போக்குவரத்து படங்களைப் படிக்க சென்னையில் உள்ள சிக்னலில் ஆசிரியர் வகுப்பு எடுத்தார். பள்ளியில் உள்ள செடி, மரங்கள், பறவைகள் என தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் படித்தவர்கள், தங்களது சுயசிந்தனையில் முடிவுகள் எடுக்கிறார்கள். வாழக்கையில் வெற்றிகரமாக இருப்பதற்கு, தேர்வை விடச் சுயசிந்தனை அவசியம்,''என்கிறார் ரேணுகா.

படத்தின் காப்புரிமை Getty Images

பொதுத்தேர்வு கிராமப்புற குழந்தைகள் மத்தியில் இடைநிற்றலை அதிகரிக்கும் என்றும் ,ஆரம்ப பள்ளியில் பொதுத்தேர்வு நடத்துவது குழந்தைகளுக்குத் தேவையற்ற சுமையைத் தரும் எனக்கூறி, இந்த அறிவிப்பை அரசாங்கம் மீளாய்வு செய்யவேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்புள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு ஆரம்பப்புள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலர் ச.மயில் பொதுத்தேர்வு முறையை மாற்றவேண்டும் என கல்வித்துறைக்கு மனு ஒன்றை அளிக்கவுள்ளதாகக் கூறுகிறார்.

''ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு என்பது இடைநிற்றலை அதிகரிக்கும். முதல் மூன்று ஆண்டுகள் தேர்ச்சியை நிறுத்தவில்லை என்றாலும் அதற்கு பின்னர் தேர்ச்சி பெறாத குழந்தைகளை இந்த முறை பாதிக்கும். கிராமப்புறங்களில் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்குப் பலமுறை பெற்றோரிடம் ஆலோசனை நடத்துகிறோம். ஆனால் இந்த பொதுத்தேர்வு முறையால், தேர்ச்சி பெறாத குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் யோசிப்பார்கள். இந்த தேர்வு குழந்தைகளின் உளவியலைப் பாதிக்கும்,''என்கிறார் மயில்.

பொதுத் தேர்வு நடப்பாண்டு முதல் நடத்தப்படும் என்பது தேவையற்ற ஒன்று என விமர்சிக்கிறார் மயில். '' இந்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கூடுதல் பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதால், தேர்வுக்குக் குழந்தைகளைத் தயார் செய்வதில் சிக்கல் உள்ளது,''என்கிறார் மயில்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்