கர்ப்பிணிக்கு சாலையில் பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்: நெகிழ்ச்சி சம்பவம்

கர்ப்பிணிக்கு சாலையில் பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்: நெகிழ்ச்சி சம்பவம் படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: கர்ப்பிணிக்கு சாலையில் பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்

சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்தின்போது சாலையில் தவித்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர் சித்ராவுக்கு காவல் ஆணையர் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

இரவு ரோந்து பணியில் சூளைமேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் சித்ரா ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில் சென்னை சூளைமேடு சௌராஷ்ட்ரா நகர் 8ஆவது தெருவை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான பானுமதிக்கு அதிகாலை பனிக்குடம் உடைந்து பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதையடுத்து அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ பிடிப்பதற்காக சாலைக்கு வந்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் ஆட்டோக்கள் எதுவும் வரவில்லை. இதற்கிடைய வலி அதிகரித்ததால் பானுமதி வீட்டுக்கு வெளியே வந்து சாலையில் நின்றிருந்தார்.

பிரசவ வலியால் துடித்த அவரை தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றார். ஆனால் பானுமதிக்கு பனிக்குடம் உடைந்து ரத்த போக்கு அதிகமாக இருந்ததால் வாகனத்தில் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

உடனடியாக தனது ரோந்து வாகனத்தை வைத்து ஆய்வாளர் சித்ரா, பெண் காவலர் மற்றும் அருகில் குப்பை சேகரிக்கும் பெண்களின் உதவியுடன் பானுமதிக்கு பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறகு 108 ஆம்புலன்ûஸ வரவழைத்து பெண் மற்றும் குழந்தையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தை நலமாக உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Facebook

ஆய்வாளர் சித்ராவின் துணிச்சலான செயலுக்கு அந்தப் பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு நேரில் வந்தும் மற்றும் சமூக வலைதளங்களிலும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், ஆய்வாளர் சித்ராவை நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தார்.

96 திரைப்பட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா நேர்காணல்

இந்து தமிழ்: 'பொதுத்தேர்வு 5, 8-ம் வகுப்புகளுக்கு ஏன்? - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யவே 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

ஆதிதிராவிடர் பள்ளிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு நாடு முழுவதும் அறிவித்துள்ளது. மாணவர்களின் திறனை மேம்படுத்தவும் ஆசிரியர்- மாணவர்கள் இடையில் கற்றுத்தரும் அளவை மேம்படுத்தவும் இது கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக அரசைப் பொறுத்தவரை 3 ஆண்டு காலத்துக்கு விதிவிலக்கு அளிக்க உள்ளோம். தற்போது 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதலாம். ஆனால், மூன்றாண்டுகளுக்குப்பின் அப்போது தேர்வு எழுதியதில், யார் தேர்வு பெறுகிறார்கள் என்பது பட்டியலிட்டு வெளியிடப்படும். 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.

படிப்படியாக அவர்கள் கல்வித் திறனை மேம்படுத்த 3 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பெற்றோரிடத்தில் நல்ல வரவேற்பைத் தந்துள்ளது. 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வு வரும்போது, மாணவர்களின் கற்றல் திறன் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய ஏதுவாக அமையும்.

இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பே இல்லை. கல்வியாளர்கள் அத்தனை பேரும் அன்றைய கால கட்டத்தில் ஒன்றிலிருந்து 8-ம் வகுப்புவரை பொதுத்தேர்வை சந்தித்துள்ளனர். அதனால் அவர்களுக்கு ஆட்சேபம் இல்லை. வேறு இடத்திலிருந்துதான் இது போன்ற கருத்துகள் வருகின்றன.

மொழிப் பாடங்களுக்கு ஒரே தாள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பாடங்களுக்கான கேள்விகளும் ஒரே கேள்வித் தாளில் கேட்க முடியுமா?

அதற்கான கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மொழிப் பாடத்தைப் பொறுத்தவரை அந்த மதிப்பெண்கள் உயர்கல்விக்குத் தேவைப்படுவதில்லை. இருந்தாலும், மாணவர்கள், ஆசிரியர்கள் நிலையைக் கருத்தில் கொண்டுதான் குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினத்தந்தி: பொருளாதார சரிவு: இவைதான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள சலுகைகள்

படத்தின் காப்புரிமை Getty Images

பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டு வசதி, ஏற்றுமதி துறைகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை வழங்கும் அறிவிப்புகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. முக்கிய தொழில் துறைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 சதவீதம் என்ற அளவில் சரிந்து உள்ளது.

இந்த மந்தமான நிலையிலிருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி இருக்கிறது.

ஏற்கனவே கடந்த மாதம் 23ஆம் தேதி டெல்லியில் நிருபர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மோட்டார் வாகனத்துக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் சலுகைகள் அறிவித்தார். வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மூலதனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நிருபர்களைச் சந்தித்து மேலும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார். அவை வீட்டு வசதி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி மற்றும் ஏற்றுமதி தொழில் துறைக்கு ரூ.50 ஆயிரம் கோடி, ஆக மொத்தம் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான சலுகைகளை அறிவித்தார்.

அப்போது அவர் கூறியவை,

தொடங்கி நிறைவு பெறாமல் நின்று போயுள்ள வீட்டு வசதி திட்டங்களை நிறைவு செய்வதற்காக ரூ.20 ஆயிரம் கோடியில் நிதி ஏற்படுத்தப்படும்.

இந்த நிதியில் ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கும். எஞ்சிய ரூ.10 ஆயிரம் கோடியை வெளி முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும். இந்த நிதியைக் கொண்டு, திவால் நடவடிக்கைக்கு ஆளாகாத, வாராக்கடன் முத்திரை குத்தப்படாத வீட்டு வசதி நிறுவனங்களுக்குத் திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்காகக் கடன் அளிக்கப்படும்.

இதன் மூலம் வீடு வாங்குகிற 3½ லட்சம் பேர் பலன் பெறுவார்கள். வீட்டு வசதி நிதி நிறுவனங்கள், தளர்த்தப்பட்ட விதிகளின்கீழ் வெளிநாடுகளிலிருந்து கடன் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

வீட்டு வசதி கடன்களுக்கான வட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வீட்டு வசதி கடன்களை நாடும் அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.

ஏற்றுமதியாளர்கள் ஏற்று மதியின்போது செலுத்துகிற வரிகளைத் திரும்பப் பெறுவதற்கான புதிய திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். இது தற்போதுள்ள திட்டத்தை விட ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கம் தரக்கூடியதாக அமையும்.

இந்த திட்டத்தினால் அரசு ரூ.50 ஆயிரம் கோடி விட்டுக் கொடுக்க வேண்டியது வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதிக்கான தொழில் முதலீடுகளை வழங்குகிற வங்கிகளுக்கு அதிகளவில் காப்பீடு வழங்க ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.1,700 கோடி அனுமதிக்கப்படும். இது, வட்டி உள்ளிட்ட ஏற்றுமதி கடன் செலவுகளைக் குறைக்க உதவும். குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பலன் பெறும்.

ஏற்றுமதி கடன்களுக்கு முன்னுரிமை வழங்க ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. ஏற்றுமதிக்காகக் கடன்கள் வழங்க ரூ.36 ஆயிரம் கோடி முதல் ரூ.68 ஆயிரம் கோடி வரையில் ரிசர்வ் வங்கி விடுவிக்கும்.

உலக அளவில் பிரபலமாக உள்ள துபாய் வணிக திருவிழா போன்று இந்தியாவிலும் 4 இடங்களில் மெகா ஷாப்பிங் திருவிழா மார்ச் மாதம் நடத்தப்படும்.

விலை உயர்ந்த ஆபரண கற்கள், நகைகள், கைவினைப்பொருட்கள், யோகா, சுற்றுலா, ஜவுளி, தோல் துறைகளை மையப்படுத்தி இந்த ஷாப்பிங் திருவிழா நடத்தப்படும்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் இந்த நடவடிக்கையும் சேர்கிறபோது அது பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த உதவும். இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.

பணவீக்கம் 4 சதவீத அளவுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தொழில்துறை உற்பத்தி, முதலீடுகளில் முன்னேற்றம் காணப்படுகிறது.

வங்கிகளிலிருந்து அதிகளவில் கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடன்களுக்கான வட்டிகளையும் வங்கிகள் குறைக்கத்தொடங்கி இருக்கின்றன. இதுதொடர்பாக ஆய்வு செய்வதற்கு 19-ந் தேதி பொதுத்துறை வங்கி தலைவர்களைச் சந்திக்க இருக்கிறேன்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்குகிற கடன்களுக்கான வட்டியை கடந்த பிப்ரவரி மாதம் முதல் 110 அடிப்படை புள்ளிகள் அளவுக்குக் குறைத்துள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு வங்கிகள் வழங்குகிற கடன்களுக்கு வட்டியை அந்த அளவுக்குக் குறைக்கவில்லை. ஆனால் இதில் வட்டி விகிதங்கள் குறைப்பை விரைவாக, முழுமையாக அமல்படுத்த வங்கிகளுக்கு அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

தினமணி: 'தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பேனர்கள் அகற்றம்'

படத்தின் காப்புரிமை Facebook
Image caption சுபஸ்ரீ

தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேனர்கள், கட்அவுட்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்கிறது தினமணி நாளிதழ்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்ததில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் லாரி மோதி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுக்கும், அதிகாரிகளுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள், கட்அவுட்கள் ஆகியவற்றை அகற்றும் பணிகளில் உள்ளாட்சி அமைப்பினரும், காவல் துறையினரும் கடந்த இரண்டு நாள்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, மாநிலத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேனர்கள், கட்அவுட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பேனர்கள், கட்-அவுட்கள் அகற்றப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக பேனர்களை வைத்தது தொடர்பாக 250-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக வைக்கப்படும் பேனர்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளும், அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர்.

பேனர்கள், கட்-அவுட்கள் வைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 19-இல் தீர்ப்புக் கூறப்பட்டது. அதில், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் வைப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு மீறப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சட்டத்துக்குப் புறம்பாக பேனர்கள், கட்-அவுட்களை வைப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, ஓராண்டு சிறை தண்டனை அல்லது ஒரு பேனருக்கு ரூ.5 ஆயிரம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியின்றி அச்சடிக்கும் அச்சக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடி சீல் வைக்கப்படும்.

- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :