சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு: ’தாஹில் ரமானி இடமாற்றம் பதவியிறக்கம் அல்ல’

நீதிபதி சந்துரு

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வி.கே. தாஹில்ரமானியை மேகாலயாவின் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வது குறித்த உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் முடிவும், அதைத் தொடர்ந்து அவர் ராஜிநாமா செய்ததும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரத்தைப் பரந்த பார்வையில் பார்க்க வேண்டும். ஒரு மாநிலத்தின் தலைமை நீதிபதியை மாநிலத்திற்கு வெளியிலிருந்து கொண்டுவரும் கொள்கை1980களின் பிற்பகுதியில்தான் உருவானது. தற்போது இந்தியாவில் 25க்கும் மேற்பட்ட உயர்நீதிமன்றங்கள் இருக்கின்றன. இவற்றில் வடகிழக்கு மாநிலங்களுக்கென தனியான உயர்நீதிமன்றங்கள் உண்டு என்றாலும் அவை ஒப்பீட்டளவில் சிறியவை. இந்தக் கொள்கை ஏற்கப்பட்டு, ஒரு விதியாக மாறிவிட்ட நிலையில், "நான் வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல மாட்டேன்" என யாரும் சொல்ல முடியாது.

மேகாலயாவும் இந்தியாவின் ஒரு பகுதிதான். அதுவும் ஒரு மாநிலம்தான். ஒருவருடைய அந்தஸ்து, சலுகைகள், சம்பளம், படிகள் ஆகியவை மாறாத நிலையில், மேகாலயாவுக்கு மாற்றப்படுவதை ஒருவர் ஏன் எதிர்க்க வேண்டுமெனத் தெரியவில்லை.

தற்போது மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே. மிட்டல், பஞ்சாப் & ஹரியானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். அதுவும் இந்தியாவின் மிகப் பெரிய உயர் நீதிமன்றங்களில் ஒன்று. அதனால், ஒரு பெரிய உயர் நீதிமன்றத்திலிருந்து சிறிய அளவிலான உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் ஒரு நீதிபதியைத் தண்டிக்கிறார்கள் என்ற கேள்வியே எழவில்லை.

இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 214ன்படி, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர் நீதிமன்றம் இருக்கும். அரசியல் சாஸனத்தைப் பொறுத்தவரை, பெரிய உயர் நீதிமன்றம், சிறிய உயர் நீதிமன்றம் என ஏதும் கிடையாது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் விக்டோரியா மகாராணி வெளியிட்ட ஒரு சாஸனத்தின்படி உருவாக்கப்பட்ட உயர் நீதிமன்றம் என்பதால், அந்த நீதிமன்றம் மற்ற நீதிமன்றங்களைவிட உயர்ந்ததாகிவிடாது.

உண்மையில் நாடு முழுவதுமுள்ள பல நீதிபதிகள், தாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவோமோ என அஞ்சுகின்றனர். இங்குள்ள பணிச்சூழல் காரணமாக, அதை ஒரு தண்டனைப் பணியிடமாகவே அவர்கள் கருதுகின்றனர். அதனால், ஒரு நீதிபதியை ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு மாற்றும்போது பதவி உயர்வா அல்லது பதவியிறக்கமா என்ற கேள்வி எழவே வாய்ப்பில்லை. அப்படிக் கருதுவது தனி மனிதர்களின் பார்வை சம்பந்தப்பட்டது மட்டுமே.

சென்னை உயர் நீதிமன்றமோ அல்லது மேகாலயா உயர்நீதிமன்றமோ, தாஹில் ரமானி தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதியாகவே இருப்பார் என்பதால், அவர் பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டவராக நான் கருதவில்லை. அவர் ஒன்றும் தலைமை நீதிபதி பதவியிலிருந்து இறக்கப்பட்டு, தலைமை நீதிபதிக்குக் கீழே பணியாற்றும் நீதிபதியாக்கப்படவில்லை.

படத்தின் காப்புரிமை Facebook

ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நீதியரசர் கீதா மிட்டல் இருக்கும்போது, நீதியரசர் தாஹில் ரமானியால் மேகாலயா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருக்க முடியும். அவரால் மேகாலயாவில் பணியாற்ற முடியாது என்றால், வேறு யாராவது அங்கே சென்று பணியாற்ற வேண்டுமென எப்படி எதிர்பார்க்க முடியும்?

இடமாற்றல் உத்தரவுகளைப் பொறுத்தவரை, நிர்வாக ரீதியிலான தேவையின் அடிப்படையில்தான் செய்யப்படுவதாக உத்தரவுகளில் கூறப்படும். வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அது சமூகரீதியான ஒதுக்கலுக்கு வழிவகுக்கும்.

என்னைப் பொறுத்தவரை, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம், இடமாற்றம் ஆகியவற்றை முடிவுசெய்ய தேசிய அளவிலான ஒரு ஆணையம் இருக்க வேண்டும். கொலீஜியத்தின் இரண்டாவது உறுப்பினரான நீதியரசர் எஸ்.ஏ. பாப்தே, தாஹில் ரமானியின் மாநிலமான மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்தான். போதுமான அளவு கருத்துக்களைக் கேட்டு, ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால், நீதிமன்றம் இந்த இடமாற்றத்திற்கான காரணத்தையும் தெரிவிக்கும்.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரான கட்ஜு, சமூகவலைதளத்தில் இந்த விவகாரம் குறித்து எழுதும்போது இந்த இடமாற்றலுக்குக் காரணம், அவருடைய மோசமான நிர்வாகமும் பணிகளைச் சரிவர கவனிக்காததுமே என்ற பொருள்படும்படி குறிப்பிட்டிருந்தார். ஆறு லட்சம் வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

பில்கிஸ் பானு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை அளித்ததால்தான் தாஹில் ரமானியை இந்த அரசு தண்டிக்க விரும்புகிறது என கூறுகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை அளித்த பிறகுதான் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆகஸ்ட் 2018ல் உயர்த்தப்பட்டார். மேலும், இடமாற்றங்களில் அரசின் தலையீடு என்பது சுத்தமாகக் கிடையாது. இது முழுக்க முழுக்க கொலீஜியத்தின் முடிவுதான். நீதியரசர்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து கொலீஜியத்திற்கு தகவல்கள் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் இந்த இடமாற்றம் குறித்து போராடுவது தேவையற்றது. சரியான தகவல்களின் அடிப்படையில் அவர்கள் இதைச் செய்யவில்லை. உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போதும் இடமாற்றம் செய்யும்போதும் எடுத்தேன், கவிழ்த்தேன் பாணியில் செயல்படாமல் இருப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு. தவிர, பல்வேறு தரப்பினரையும் கலந்தாலோசித்து தேசிய ஜுடிசியல் ஆணையத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். இம்மாதிரி விஷயங்களில் முடிவெடுக்க ஒரு நிரந்தரமான அமைப்பை உருவாக்க வேண்டும்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை உருவாக்குவதற்காக 99வது அரசியல் சாஸனத் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், நீதித் துறையின் சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டுமெனக்கூறி உச்ச நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது. நீதிபதிகள் நியமன ஆணையம் வரக்கூடாது என்று கூறிய அதே வழக்கறிஞர்கள்தான் இப்போது இந்த இடமாற்ற முடிவு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் குறித்து விரிவான விவாதத்தை பா.ஜ.க. அரசு முன்னெடுக்காமல் இருக்கிறது. இந்த ஆணையம் மூலம்தான் உச்ச நீதிமன்ற கொலீஜியம் மனம்போல் முடிவெடுப்பதைத் தடுக்க முடியும்.

(கே. சந்துரு சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :