சென்னை மாமல்லபுரம் மீனவ குப்பம் டூ ஆஸ்கர் - 9 வயது சிறுமியின் சாதனை கதை

கமலி

பத்து அடி தூரத்தில்தான் கடல், அங்கு சிறியதாக அமைக்கப்பட்டிருக்கும் ஸ்கேட் போர்டிங் தளத்தில் சிரித்த முகத்துடன் உற்சாகமாகப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் கமலி.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள மீனவக் குடியிருப்பைச் சேர்ந்தவர் கமலி.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் இவர் அந்த பகுதியில் ஸ்கேட் போர்டிங்கில் ஈடுபட்டிருக்கும் ஒரே பெண் குழந்தை.

நாம் கமலியிடம் சென்று பேசியபோது ஆர்வத்துடனும், சற்றும் குழந்தைத்தனம் மாறாமலும் பேசினார்.

அதற்குள் அவரின் நான்கு வயது தம்பி தனது ஷூக்களை அணிந்து கொண்டு ஸ்கேடிங் செய்யத் தயார் ஆகிறார்.

அந்த ஸ்கேட் போர்டிங் தளத்தைச் சில சிறுவர்கள் சூழ்ந்து கொண்டனர். கமலி ஸ்கேட் செய்வதை ஏற்கனவே அவர்கள் பல முறை பார்த்திருக்கக்கூடும் இருந்தும் இன்றும் ஆச்சரியத்துடன்தான் பார்க்கிறார்கள்.

"அதற்குள் கமலி, என் தம்பிக்கு நான்தான் ஸ்கேடி போர்டிங் சொல்லி தருகிறேன். அவனுக்கு மட்டுமல்ல இங்கு நிறையப் பேர் வருவார்கள் அவர்களுக்கும் நான்தான் சொல்லிக் கொடுப்பேன்" என்கிறார்.

தனது ஐந்து வயதிலிருந்து ஸ்கேடிங் போர்டிங்கில் ஈடுபட்டு வரும் கமலி தனக்கு சர்ஃபிங் மற்றும் ரன்னிங்கிலும் ஈடுபாடு என்றார்.

ஸ்கேட் போர்டிங்கில் இதுவரை எத்தனை பரிசுகளை வாங்கியிருப்பாய் என்று கேட்டதற்கு விரல்களை எண்ணி முடித்துவிட்டு, "நிறைய வாங்கியிருக்கிறேன் ஆனால் எத்தனை என தெரியாது." என அதே குழந்தைத்தனம் மாறாமல் சொல்கிறார்.

கமலியின் இந்த திறமைகள் குறித்து அவரின் தாய் சுகந்தியிடம் பேசியபோது, "கமலி இந்த விளையாட்டில் ஈடுபடும்போது பெண் குழந்தைக்கு எதற்கு இதெல்லாம் என்று எல்லாரும் கேட்டார்கள் ஆனால் இப்போது அதே பெற்றோர்கள் என் குழந்தைக்கும் சொல்லிக் கொடுக்கச் சொல் என்கிறார்கள் அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது." என்கிறார் முகத்தில் பெருமையுடன்.

மேலும், மாமல்லபுரத்தில் மீன் பஜ்ஜிக் கடை நடத்திக் கொண்டு தனது பெற்றோர்களின் உதவியுடன் தனது குழந்தைகளை வளர்த்துவரும் சுகந்தி, "எனது எந்த ஒரு விருப்பமும் இதுவரை நிறைவேறியதில்லை ஆனால் எனது குழந்தைகளின் கனவை நிறைவேற்றுவதே எனது முதல் விருப்பம்," என்று தெரிவிக்கிறார்.

அதற்குள் கமலி தனது சர்ஃபிங் உடையில் தனது மாமா மற்றும் தம்பியுடன் சர்ஃபிங் செய்ய கடலுக்குள் செல்ல தயாராகிவிட்டிருந்தார்.

இவர் குறித்து தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கமலியின் நம்பிக்கை கதை குறித்து மேலும் காண:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்