இந்தி திணிப்பு குறித்து கமல் ஹாசன்: அரசு சத்தியத்தை ஷா மாற்றக் கூடாது

இந்தி திணிப்பு குறித்து கமல்: அரசு சத்தியத்தை ஷா மாற்றக் கூடாது படத்தின் காப்புரிமை Twitter

இந்தி திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் மய்யமாகப் பேசி ஒரு காணொளியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தக் காணொளியில் இந்தி என்ற பதத்தைப் பயன்படுத்தாமல், அரசை விமர்சித்துள்ளார்.

மறைமுகமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் காணொளியில் உள்ளவற்றை அதே வார்த்தைகளில் இங்கே தருகிறோம்.

விட்டுக்கொடுக்க முடியாது

கமல், "பல ராஜாக்கள் தங்கள் ராஜ்ஜியங்களை விட்டுக் கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால், விட்டுக்கொடுக்க முடியாதென பல இந்தியர்கள், பல மாநிலங்கள் சொன்ன விஷயம் மொழியும் கலாசாரமும்தான்.

1950ல் இந்தியா குடியரசு ஆனபோது, அதே சத்தியத்தை அரசு மக்களுக்குச் செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ அல்லது சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முயற்சிக்க கூடாது." என்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்தும் இந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர், "ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது பன்மடங்கு பெரியதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவுக்கோ, தமிழகத்திற்கோ தேவையற்றது."

மேலும், "பெரும்பாலான இந்தியர்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழியில் பாடுவதில்லை. வங்காளிகளைத் தவிர... இருப்பினும், அதை சந்தோஷமாகப் பாடிக்கொண்டிருக்கிறோம், பாடிக்கொண்டு இருப்போம். காரணம் அதை எழுதிய கவிஞர் எல்லா கலாசாரத்துக்கும், மொழிக்கும் தேவையான இடத்தையும், மதிப்பையும் அதில் கொடுத்து இருந்தார்." என்று தெரிவித்துள்ளார்.

அற்புத விருந்து

கமல், "இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து. அதைக் கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும். தயவு செய்து அதைச் செய்யாதீர்கள்.

வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும். வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத திருநாடு." என்று கூறியுள்ளார்.

கமல் பேசிய காணொளியைக் காண

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: