காஷ்மீர்: "எங்கே ஃபரூக் அப்துல்லா?"- வைகோ மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஷ்மீர்: "எங்கே ஃபரூக் அப்துல்லா?"- வைகோ மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு படத்தின் காப்புரிமை Getty Images

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவைக் கண்டுபிடித்துத் தரக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது.

வைகோ தக்கல் செய்திருந்த மனுவில் செப்டம்பர் 15ஆம் தேதி நடக்க இருந்த அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவில் ஃபரூக் அப்துல்லா கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்டிருந்தார் என தனது மனுவில் வைகோ குறிப்பிட்டு இருந்தார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் ஃபரூக் அப்துல்லாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என தனது மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று மறுத்த உச்சநீதிமன்றம் விழா முடிந்து இன்றுதான் விசாரித்தது.

அது போலக் காஷ்மீர் டைம்ஸ் இதழின் ஆசிரியர் அனுராதா பாசினின் வழக்கறிஞர் விரேந்த க்ரோவர், "எனது கட்சிகாரர் முறைகேடாகத் தடுத்து வைக்கப்பட்டு 43 நாட்கள் ஆகிறது. காஷ்மீரில் தொலைபேசி வசதியோ, இணைய வசதியோ இல்லை. எதன் அடிப்படையில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது" என்று கேள்வி எழுப்பினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய அரசு தரப்பில் அஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால். "ஊடகவியலாளர்களுக்குத் தொலைத் தொடர்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான நாளிதழ்களும் காஷ்மீரில் பிரசுரமாகின்றன. தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன" என்றார்.

காஷ்மீரில் கிளர்ந்தெழுந்த மக்கள், பதறவைக்கும் காட்சிகள்:

உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் அமைதியை உறுதிப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கல்வி நிலையங்கள் வழக்கம் போல இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், "இந்த மனுக்களுக்கு மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.

ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்ற கேள்விக்கு வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிலளிக்குமாறும் மத்திய அரசுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி அசாத் ஸ்ரீநகர், பாரமுல்லா, ஜம்மு மற்றும் ஆனந்த்நாக் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அரசியல் குறித்த நடிகர் சித்தார்த்நேர்காணலை காண:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: