விக்ரம் லேண்டர் குறித்த தகவலை பெறும் முயற்சியில் நாசா ஆர்பிட்டர்

விக்ரம் படத்தின் காப்புரிமை ISRO

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் திசை - இஸ்ரோவுக்கு உதவும் நாசா

நிலவில் சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் இடத்துக்கு மேலே நாசாவின் ஆர்பிட்டர் இன்று (செவ்வாய்கிழமை) கடக்க உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் முக்கிய படங்கள், தகவல்களை இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்வோம் என்று நாசா தெரிவித்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதில் நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், அதற்குள் பிரக்யான் எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை அனுப்பப்பட்டன.

திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பிரிந்து நிலவை சுற்றிவரத் தொடங்கியது. அதேபோல் லேண்டர் பிரிந்து நிலவின் தென் துருவத்தை நோக்கி பயணத்தைத் தொடங்கியது. நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட முதல் லேண்டர் இதுதான். கடந்த 7-ம் தேதி விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. உலகமே அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து பிரதமர் மோடியும் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால், நிலவின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 2.1 கி.மீ. உயரத்தில் லேண்டர் வரும் போது திடீரென சமிக்ஞை துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ தலைவர் கே.சிவன் உட்பட விஞ்ஞானிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். நிலவில் 'சாப்ட் லேண்டிங்' எனப்படும் மெதுவாகத் தரையிறங்குவதற்குப் பதில், வேகமாக தரையிறங்கி (ஹார்ட் லேண்டிங்) விழுந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நிலவின் தரையைத் தொடுவதற்கு 335 மீட்டர் உயரத்தில் தான் சமிக்ஞை துண்டிக்கப்பட்ட தாகத் தகவல்கள் வெளியாயின.

அதன்பின், சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் லேண்டர் விழுந்து கிடக்கும் இடத்தை இஸ்ரோ கண்டுபிடித்தது. நிலவில் ரோவர் ஒரு நாள் ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவில் ஒரு நாள் என்பது பூமியில் 14 நாட்களாகும். எனவே, 14 நாட் களுக்குள் லேண்டருடன் சமிக்ஞையை ஏற்படுத்த இஸ்ரோ தீவிர முயற்சி செய்து வருகிறது.

இதற்கிடையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசாவும் இஸ்ரோவுக்கு உதவ முன்வந்துள்ளது. நாசாவின் சார்பில் ஏற்கெனவே கடந்த 2009-ம் ஆண்டு அனுப்பப்பட்டுள்ள 'நிலவு புலனாய்வு ஆர்பிட்டர்' (எல்ஆர்ஓ), நிலவைச் சுற்றி ஆய்வு செய்து வருகிறது. நாசாவின் ஆர்பிட்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேலே இன்று கடக்க உள்ளது.

அப்போது, விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பும் என்றும், அதனுடன் சமிக்ஞை தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற் படுத்த, 'ஹலோ' என்று ரேடியோ தகவலை நாசா அனுப்பி உள்ளது.

''சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் குறித்த படங்கள், தகவல்கள் என எது கிடைத்தாலும் இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்வோம்'' என்று நாசாவின் எல்ஆர்ஓ திட்ட விஞ் ஞானி நோவா பெட்ரோ கூறிய தாக 'ஸ்பேஸ்பிளைட்நவ்.காம்' இணையதளம் கூறியுள்ளது என்று விவரிக்கிறது அந்த செய்தி.

`விடுமுறையில் மாற்றம் இல்லை` - தினமணி

படத்தின் காப்புரிமை Getty Images

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை, விருப்பமுள்ள பள்ளிகள் மட்டும் காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்றுவரும் காலாண்டுத் தேர்வுகள் வரும் 23ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், காலாண்டுத் தேர்வு விடுமுறை செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை வழங்கப்படுவதாக, பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி இந்த ஆண்டு காலாண்டு விடுமுறையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு காந்திய சிந்தனைகள் குறித்த செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்கம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட திட்ட இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

இதனால் பெற்றோர் மாணவர்கள், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

எனவே இதுகுறித்து கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி, செப்.24 முதல் அக்.2ஆம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை என்ற உத்தரவே நீடிக்கும்.

இந்த விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்திக் கொள்ளலாம் எனவும், அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா - ஹெல்மெட் அணியாமல் சாலை விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை கடும் அதிகரிப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த 2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஹெல்மெட் அணியாமல் சாலை விபத்தில் கிட்டதட்ட 43,600 பேர் உயிரிழந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 21 சதவீதம் ஆகும். முந்தைய ஆண்டில் ஹெல்மெட் அணியாமல் சாலை விபத்தில் 35, 975 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் 2018 ஆம் ஆண்டில் ஹெல்மெட் அணியாமல் சாலை விபத்தில் சுமார் 6000 பேர் இருந்துள்ளதாக அந்த செய்தி மேலும் குறிப்பிட்டுள்ளது. இதுதான் நாட்டின் மிக அதிக அளவிலான மரணம் ஆகும்.

அதேவேளையில் , காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணியாமல் சாலை விபத்தில் அந்த ஆண்டில் சுமார் 15000 பேர் இருந்துள்ளதக அந்த செய்தி கூறுகிறது.

சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட், சீட் பெல்ட் போன்றவற்றை அணிய வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை இந்த கட்டுரை மேலும் விளக்கியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்