பெரியார் கடைசியாக பேசியது என்ன? - கி. வீரமணி பேட்டி

பெரியார்: எந்த அளவுக்கு வட இந்திய இளைஞர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறார்? படத்தின் காப்புரிமை DHILEEPAN RAMAKRISHNAN

பெரியாரின் செயல்பாடுகளும் கொள்கைகளும் எழுத்துகளாகப் பதிவாகியிருக்கின்றன. ஆனால், தனி மனிதராக பெரியார் எப்படிப்பட்டவர் என அவருடன் நீண்ட காலம் பழகியவரும் திராவிடர் கழகத்தின் தற்போதைய தலைவருமான கி. வீரமணி பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.

பெரியார் கோபப்படுவாரா, புத்தகங்களை எப்படித் தேர்ந்தெடுப்பார், சினிமாவில் ஆர்வமுண்டா, வாரிசு இல்லை என்ற கவலை இருந்ததா என பல கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்தார் கி. வீரமணி. பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து:

கே. உங்களுக்கும் பெரியாருக்குமான உறவு எப்படி தொடங்கியது?

ப. நான் கடலூரில் பள்ளிக்கூடத்தில் படித்தபோது என் ஆசிரியர் திராவிட மணி. அவர்தான் என்னுடைய இயற்பெயரான சாரங்கபாணி என்பதை மாற்றி வீரமணி என்று பெயர் சூட்டினார். அவர் எங்களுக்கு மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளை எடுப்பார். பள்ளிப் பாடங்களை ஒரு மணி நேரம் சொல்லித் தருவார். அதற்குப் பிறகு, திராவிட இயக்க ஏடுகளான குடியரசு போன்றவற்றை படிக்கத் தருவார். அவர்தான் பள்ளித் தலைமையாசிரியரும்கூட. 1943ல் அண்ணாவின் திராவிட நாடு இதழுக்காக கடலூரில் 112 ரூபாய் வசூலித்துக் கொடுத்தோம். அப்போது திராவிட மணி எழுதிக்கொடுத்ததை நான் மனப்பாடம் செய்து வாசித்தேன். எல்லாவற்றையும் உணர்ந்து வாசித்தேன் எனச் சொல்ல முடியாது. இருந்தாலும் அந்தக் கொள்கைகளில் ஈர்ப்பு இருந்தது.

அதற்குப் பிறகு 1944 ஜூலை 19ஆம் தேதி நீதிக்கட்சியின் சார்பில் பெரியார் கலந்துகொண்ட மாநாடு நடைபெற்றது. அன்னை மணியம்மையார் அப்போது பெரியாரின் செயலர். அவரும் அந்தக் கூட்டத்திற்கு வந்தார். டார்பிடோ ஜெனார்த்தனன் என்னை பெரியாரிடம் அழைத்துச் சென்றார். அவருடைய தாடி ஆகியவற்றைப் பார்த்தவுடன் ஒரு சிங்கத்தைப் பார்ப்பதுபோல எனக்குப் பயமாக இருந்தது.

இருந்தபோதும் நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒரு தலைவரை நெருக்கமாக பார்த்ததில் எனக்கு சந்தோஷம். என்னைப் பற்றி விசாரித்தார் பெரியார். அதற்குப் பிறகு திராவிடர் கழகமாக பெயர் மாற்றும் மாநாட்டிற்கு என்னை அழைத்துப் போனார்கள். இப்படி வரிசையாக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன்.

பெரியார் அந்த காலகட்டத்தில் அவருடைய வீட்டில் கோடை காலத்தில் ஒரு மாதத்திற்கு வகுப்பு எடுப்பார். பேச்சு பயிற்சி போன்றவை வழங்கப்படும். பெரியாரும் வகுப்புகளை எடுப்பார். பிறகு பல ஊர்களுக்குச் சென்று பேசுவோம். அப்படித்தான் அறிமுகம் ஆரம்பித்தது.

கே. பெரியாரோடு நீங்கள் இணைந்து செயல்பட ஆரம்பித்தது எப்போது?

ப. நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் ஆனர்ஸ் முடித்திருந்தேன். பிறகு, அங்கேயே பொருளாதாரத் துறையில் ஆய்வுப் பணியில் ஓராண்டு வேலை பார்த்தேன். பிறகு சட்டம் படிக்கும் நோக்கத்தில் சென்னைக்கு வந்தேன். அப்போது பெரியார் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அதனால், அவர் நீதிமன்றங்களுக்குச் செல்லும்போது நானும் போவேன். இடையிடையே அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கும் செல்வேன்.

பிறகு, திராவிடர் கழகத்தின் இரண்டு பொதுச் செயலாளர்களில் ஒருவராக என்னை அறிவித்தார் அய்யா. அப்போது நான் சட்டக் கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவரோடு நெருக்கமாக இருக்க ஆரம்பித்தேன். அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டபோது, என்னை அழைத்து நிர்வாகப் பணிகளில் மணியம்மைக்கு உதவியாக இருக்கச் சொன்னார்.

கி. வீரமணி பேட்டி குறித்த முழு காணொளியை காண:

1949ல் திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா தலைமையில் தி.மு.க. உருவானபோதும் நான் திராவிடர் கழகத்திலேயே தொடர்ந்தேன். எனக்கு அய்யாவின் தலைமை பிடித்திருந்தது. தவிர, அவர் திருமணம் குறித்த முடிவை ஏன் எடுத்தார் என்பதெல்லாம், அவரோடு நான் நெருக்கமாக இருந்ததால் எனக்கு நன்றாகத் தெரியும். அவர் தவறாக முடிவெடுக்க மாட்டார் என நினைத்தேன். ஆகவே அவரோடு இருப்பதென முடிவுசெய்தேன்.

1956வாக்கில் ஒரு நாள் திடீரென தந்தி கொடுத்து அழைத்தார் அய்யா. நான் போய் பார்த்தேன். அங்கே ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் பெயர் சிதம்பரம். அவர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர். அவருடைய மகளை உனக்குத் திருமணம் செய்துவைக்கலாம் என நினைக்கிறேன் என்றார். நான் இன்னும் படித்தே முடிக்கவில்லை என்றேன். இல்லை, இந்தத் திருமணம் செய்தால், நீ இயக்கத்திற்குப் பயன்படுவாய் என நினைக்கிறேன் என்றார்.

அப்படி நீங்கள் நினைத்தால், எனக்கு ஆட்சேபணையில்லை. உங்கள் வீட்டில் ஏதாவது சொல்வார்களா எனக் கேட்டார். "அம்மாவை அனுப்பிச் சொல்லச் சொல்லுங்க; வீட்டில் ஒப்புக்கொள்வார்கள்" என்றேன். பிறகு, அந்தத் திருமணம் நடைபெற்றது.

பிறகு, குருசாமி போன்றவர்கள் பிரிந்துசென்ற பிறகு ஒரு நாள் பெரியார் அழைத்தார். சென்று பார்த்தேன். "நாளிதழாக வரும் விடுதலையை நிறுத்திவிட்டு, வாரப்பத்திரிகையாக திருச்சியிலிருந்து கொண்டுவரலாம் என நினைக்கிறேன்" என்றார். நான் கூடாது எனச் சொன்னேன். அப்படியானால், யார் பார்த்துக்கொள்வது என்று கேட்டார். "நீங்கள் பார்த்துக்கொள்ள முடியுமா?" என்ற பெரியார், "இல்லாவிட்டால், திருச்சியிலிருந்தபடி வாரப் பத்திரிகையாக கொண்டுவருகிறேன்" என்று சொன்னார். நான் அப்போதுதான் வக்கீல் தொழிலைச் செய்ய ஆரம்பித்திருந்தேன்.

பிறகு, விடுதலை பொறுப்பை ஏற்க ஒரே ஒரு நிபந்தனை விதித்தேன். "நான் இயக்கத்திலிருந்து சம்பளம் வாங்க மாட்டேன். சம்பளம் கொடுத்தால் பார்க்கும் வேலையைவிட அதிகம் வேலை செய்வேன்" என்றேன். மனைவியுடன் சேர்ந்து பேசிவிட்டு முடிவைச் சொல்வதாகச் சொன்னேன். பிறகு, அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.

கே. அண்ணா பிரிந்துசென்றபோது உங்களை தி.மு.கவிற்கு அழைக்கவில்லையா?

ப. கேட்கவில்லை. கருணாநிதிதான் மாணவப் பருவத்திலிருந்து நெருக்கமாக இருந்தவர். கருணாநிதி என்னை ஒருமுறை தி.மு.கவிற்கு அழைத்தார். அப்போது நான், "நாம் பகுத்தறிவு இயக்கத்தில் இருப்பவர்கள்தானே. உங்கள் பகுத்தறிவு உங்களை அங்கே இருக்கச்சொல்கிறது. என் பகுத்தறிவு என்னை இங்கே இருக்கச் சொல்கிறது" என்று சொன்னேன். அதற்குப் பிறகு அவர் ஏதும் பேசவில்லை.

ஒரு முறை குறிஞ்சிப்பாடியில் நடந்த திருமணத்திற்கு அண்ணா வந்தார். நான் கடலூரில் இருந்தேன். என் சகோதரரைச் சந்திக்க வந்தவர், என்னையும் பார்த்தார். "வா, குறிஞ்சிப்பாடி வரை பேசிக்கொண்டே போய்வரலாம்" என்று அழைத்தார். அப்போது என் படிப்பில் ஓராண்டு இடைவெளி விழுந்திருந்தது. ஆகவே, "நான் உன்னை காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் கல்லூரியில் சேர்த்துவிடுகிறேன். அங்கிருந்து படி" என்று அழைத்தார். என் வீட்டில்கூட அண்ணா சொல்வதைக் கேட்கலாமே என்றார்கள்.

நான் சொன்னேன், "நான் இப்போது பெரியாரின் இயக்கத்தில் இருக்கிறேன். இப்போது அண்ணாவின் பொறுப்பில் படித்தால், அவர் கொள்கைக்கு கடன்பட்டதைப் போல ஆகிவிடும். ஆகவே நான் இங்கிருந்தே படித்துக்கொள்கிறேன்". பிறகு வீட்டிலும் அந்த முடிவை ஏற்றுக்கொண்டார்கள்.

கே. பெரியார் இயக்கத்திலிருப்பவர்களிடம் எப்படிப் பழகுவார், கோபப்படுவாரா?

ப. அவர் கோபமே படமாட்டார். தவறு செய்தால், திரும்பத் திரும்பச் செய்தால், சொன்ன பிறகும் செய்தால் சற்று கோபப்படுவார். மிக நிதானமானவர். தவிர, அந்தத் தவறை ஒப்புக்கொண்டால் அடுத்த நிமிடமே சாந்தமாகிவிடுவார்.

கே. அவருடைய எழுத்தில் பெரும் கோபம் தென்படுகிறது...நேரில் அதுபோல இல்லையா?

ப. நேரில் அதற்கு நேர் விரோதமாக இருப்பார். மணியம்மை எதாவது கொண்டுவந்து கொடுத்தால்கூட, 'தேங்க்ஸ்' என்பார். அப்போது மணியம்மை, மற்றவர்களுக்கு 'தேங்க்ஸ்' சொன்னால் பரவாயில்லை. என்னிடம் ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்பார். 'எனக்கு அது பழக்கம் அதனால் அப்படிச் செய்கிறேன்' என்பார்.

சுற்றுப்பயணத்தின்போது இயக்கத் தோழர்களின் வீட்டில் தங்குவார். அங்கேயே சாப்பிடுவார். சில இயக்கத் தோழர்களின் வீட்டில் தொடர்ச்சியாக தங்கும்படி நேரிடும். அதனால், அவர்களுக்கு ஏதாவது பொருட்களைக் கொடுப்பார். வரும்வழியில் ஏதாவது நல்ல பொருட்களை பார்த்தால், அவர்களுக்கு வாங்கிக்கொண்டு கொடுப்பார். மற்றவர்கள் தமக்காக செலவழிக்கக்கூடாது என நினைப்பார்.

யாரையாவது பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அது அவர்களுடைய ஜீவ சுவாபம். அதை மாற்ற முடியாது என்று சொல்வதோடு விட்டுவிடுவார். கழகம் பிரிந்த பிறகு அண்ணாவைப் பற்றி சில சமயங்களில் கோபமாகப் பேசுவார். அவ்வளவுதான். கூட்டங்களில் அவர் மெதுவாகப் பேசுவதாகத் தெரிந்தால், நாங்கள் அண்ணாவைப் பற்றிக் கேள்வியை எழுதிக் கேட்போம். உடனே ஆவேசமாகப் பேசுவார். அவ்வளவுதான். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் கோபப்பட மாட்டார்.

கே. அவருடைய பேச்சு மொழி, தனிப்பட்ட முறையில் பேசும்போது எப்படி இருக்கும்?

ப. சில நேரங்களில் ஆங்கிலத்தில் பேசுவார். சரியான சொற்களை தேர்ந்தெடுத்துச் சொல்வார். எப்போதும் அபிதான கோசம், அபிதான சிந்தாமணி புத்தகங்களைப் புரட்டியபடி இருப்பார். தன் சிந்தனைகளை டைரியில் எழுதிவைப்பார். ஏதாவது யோசனைகள் புதிதாகத் தோன்றினால் குறித்து வைப்பார். கடைசி 30 ஆண்டுகளில் அவருக்கு பல்லே கிடையாது. இருந்தபோதும் தெளிவாகப் பேசினார். இறக்கும்வரை, அவரை அசைவ உணவை உண்டார்.

கே. பெரியார் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தார். எப்படி நேரத்தை மேலாண்மை செய்தார்?

ப. அவர்தானே இங்கே எல்லாமே. அதனால், அவர் என்ன நினைக்கிறாரோ அது நடக்கும். தவிர பொறுப்புகளைப் பிரித்து அளித்திருந்தார். அவர் கூட்டங்களில் பேசச் செல்வார். பள்ளிக்கூடம் போன்றவற்றை மணியம்மை பார்த்துக்கொண்டார். விடுதலை என் பொறுப்பில் இருந்தது. பண வரவு - செலவுகளைப் பார்வையிடுவார். அறிக்கைகளை அவரே தன் கைப்பட எழுதுவார். அச்சுக்குப் போவதற்கு முன்பாக அதனைத் திருத்தித் தருவார்.

கே. பெரியார் மிகச் சிக்கனமானவர் என்று சொல்லப்படுவதுண்டு. பண விஷயத்தில் அவர் அப்படி இருந்ததற்குக் காரணம் இயக்கம் சார்ந்ததா அல்லது அவருடைய இயல்பே அப்படித்தானா?

ப. அவருடையே இயல்பே அப்படித்தான். ஆனால், அந்த இயல்பை இயக்கத்திற்கு பயன்படக்கூடிய அளவில் செயல்படுத்தினார். தான் சம்பாதித்த சொத்து, தன்னுடைய பூர்வீக சொத்து ஆகியவற்றை இயக்கத்திற்குத்தான் கொடுத்தார். அதைத்தான் அறக்கட்டளையாக்கினார். தனக்கென்று எதையும் அவர் வைத்துக்கொள்ளவில்லை. மணியம்மையும் அப்படித்தான். அவருக்காக பெரியர் மீரான் சாகிப் தெருவில் ஒரு வீட்டை எழுதி வைத்திருந்தார். அது அவருக்கே தெரியாது. பிறகுதான் தெரியவந்தது.

அய்யா இறந்த பிறகு, மணியம்மை தன்னுடைய பூர்வீக சொத்து, இந்த வீடு எல்லாவற்றையும் சேர்த்து பெரியார் - மணியம்மை அறக்கட்டளையை உருவாக்கினார். இது தவிர அய்யா 1938லேயே உருவாக்கிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார அறக்கட்டளையையும் திருமணத்திற்குப் பிறகு பதிவுசெய்தார். பிறகு பெரியாரைவிட்டு விலகியவர்கள் வருமான வரித்துறைக்கு புகார் கொடுத்தனர். அவர்கள் வந்து சோதனை போட்டனர். அவர்கள் அமைப்பு பேரில் ஒரு வரியும் பெரியார் பேரில் ஒருவரியும் விதித்தனர்.

பெரியார் இருக்கும்போது 20 லட்சமாகவும், மணியம்மை காலத்தில் 40 லட்சமாகவும் என் காலத்தில் 60 லட்சமாகவும் உயர்ந்தது. பிறகு, தீர்ப்பாயத்தில் முறையிட்டோம். அவர்கள் ஜப்தி செய்து வைத்திருந்த சொத்துகளை திருப்பி வாங்கினோம். வட்டியையும் பெற்றோம்.

கே. இயக்கம், எழுத்து வேலைகளைத் தவிர, பெரியாருக்கு வேறு ஏதாவது பொழுதுபோக்கு இருந்ததா? சினிமா குறித்து அவருக்கு என்ன பார்வை இருந்தது?

ப. பெரியார் சினிமா பார்க்க மாட்டார். ஒன்றிரண்டு படங்கள் பார்த்திருப்பார். ஆனந்த் தியேட்டரின் உரிமையாளர் உமாபதி திரையரங்கைக் கட்டியவுடன் ஒரு படம் வந்து பார்க்க வேண்டும் எனக் கூப்பிட்டார். ஒரு ஆங்கிலப் படம் சென்று பார்த்தால். சேலத்தில் ராஜகோபால் செட்டியார், சிம்மாசனம் கொடுத்த கமிட்டி ஆகியோர் சேர்ந்து ஒரு படத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

கே. பெரியார் தான் படிக்க வேண்டிய புத்தகங்களை எப்படித் தேர்ந்தெடுப்பார்?

ப. பெரும்பாலும் ஆராய்ச்சி நூல்களைத்தான் படிப்பார். படிக்கும்போதே அடிக்கோடிடுவார். மூலையில் எழுதிவைப்பார். பிரிட்டிஷ் ஹ்யூமனிஸ்ட் அசோசியேஷன், திங்கர்ஸ் லைப்ரரி புத்தகங்களை வாங்கிப் படிப்பார். குடியரசு இருந்த காலத்தில் இங்கர்சால் குறித்த புத்தகங்கள், பொதுவுடமை அறிக்கை போன்றவற்றை மொழிபெயர்த்து வெளியிடச் செய்தார்.

கே. தி.மு.க. வெற்றிபெற்று அண்ணா ஆட்சியைப் பிடித்தவுடன் பெரியாரைச் சென்று சந்தித்தார். இது குறித்து பெரியார் உங்களிடம் ஏதாவது சொல்லியிருக்கிறாரா?

ப. அந்தச் சந்திப்பின்போது நான் அங்கே இல்லை. நான் சென்னையில் இருந்தேன். இரவு 10 மணிக்கு போன் வந்தது. மணியம்மை பேசினார். இப்போதுதான் நாவலர், கலைஞர், அண்ணாதுரை வந்துபோனார்கள் என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு பெரியாரே போனை வாங்கிப் பேசினார். அவரும் அதையே சொன்னார். நான் சரி எனக் கேட்டுக்கொண்டேன். பிறகு மணியம்மையிடம் போனை கொடுத்துவிட்டார்.

படத்தின் காப்புரிமை ARUNKUMARSUBASUNDARAM

'ஆசிரியர் வேறு ஏதாவது சொல்கிறாரா' என்று கேட்டார். நான் கேட்டேன், 'இத்தனை நாட்களாக அவர்களை க.து கட்சி (கண்ணீர்த் துளிகள் கட்சி) என்றுதான் நாம எழுதுகிறோம். அவர்கள் வெற்றிபெற்று, உங்களை வந்து சந்தித்திருக்கிறார்கள். நாளையிலிருந்து அதேபோல எழுதுவதா, தி.மு.கன்னு எழுதுவதா? அய்யா என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள்' என்று சொன்னேன். 'தி.மு.கனே போடுங்க, தி.மு.கனே போடுங்க' என்றார். 'அவர்கள் வந்து பார்த்துவிட்டுச் சென்றதைப் பற்றி ஒரு அறிக்கை எழுதி அனுப்புகிறேன். அதைப் போடச் சொல்லுங்க' என்றார்.

"நேரே வந்தார்கள். சந்தித்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் அவர்கள் மீது ஒரு வசீகரம், அன்பு ஏற்பட்டது. என்னை வழிநடத்த வேண்டுமென அண்ணாத்துரையும் மற்றவர்களும் கேட்டார்கள். நானும், நீங்கள் இயல்பாக வந்துள்ளீர்கள். சரியாக செயல்படுங்கள் என்றேன். எனவே அவர்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அவர்களை ஆதரிக்கலாமென நினைக்கிறேன். இவர்கள் எவ்வளவு கீழே போனாலும் பக்தவத்சலம் அளவுக்கு கீழிறங்க முடியாது. ஆகவே ஆதரிப்பதில் தவறில்லை" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

கே. பெரியாரின் உடல்நிலையில் என்ன பிரச்சனை இருந்தது? அந்தக் குறைபாட்டோடு எப்படி பயணங்களை மேற்கொண்டார்?

ப. பெரியாரின் உடல்நிலை விசித்திரமானது. அவருக்கு நீரிழிவு நோயோ, ரத்தக் கொதிப்போ இல்லை. அவருடைய பெரிய பிரச்சனை குடலிறக்க நோய். அது ஒரு கட்டத்தில் மிகப் பெரிதாகிவிட்டது. அறுவைசிகிச்சை செய்யலாம் என கருதப்பட்டது. ஆனால், அவருக்கு ரொம்பவும் வயதாகிவிட்டது என்பதால் தயங்கினோம். ஒரு முறை சுந்தரம் மருத்துவமனையில் சேர்த்து அறுவைசிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. பிறகு கடைசி நேரத்தில் மணியம்மை தடுத்துவிட்டார்.

பிறகு, 90வது வயதில் சிறுநீர்க் குழாயில் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டார். வலியால் துடிப்பார். பொதுக்கூட்டங்களில் பேசும்போதும் வலியால் கத்துவார். பிறகு வேலூரில் ஒரு மருத்துவர் அவருக்கு துணிந்து அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தார். அறுவை சிகிச்சை தினத்தன்று நான்கைந்து மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அந்த அறுவை சிகிச்சையில்தான் அவர் ஒரு குழாய் மூலம் சிறுநீர் கழிக்கும் வகையில் உடலில் ஓட்டை போடப்பட்டது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அந்தக் குழாயை மாற்ற வேண்டும். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தார். குழாய் மூலம் வரும் சிறுநீர் ஒரு வாளியில் சேரும். அந்த வாளியை அவரை சுமப்பார். அல்லது மிக நெருக்கமான யாராவது தூக்குவோம். வேறு யாரையும் எடுக்க விடமாட்டார். சில சமயங்களில் உடலுக்குள் உள்ள குழாய் நகர்ந்துவிட்டால் வலி அதிகமாகும். அப்போது, ரொம்பவும் கத்துவார். அதைப் பார்க்கவே பயமாக இருக்கும்.

சென்னை தியாகராய நகரில் 1973 டிசம்பர் 19ஆம் தேதி பெரியார் கடைசியாக உரையாற்றினார். படுக்கையில் அமர்ந்தபடிதான் பேசுயிருப்பார். அந்த ஒளிப்பதிவு இப்போதும் இருக்கிறது. அதில்கூட அவர் அம்மா.. அம்மா என அரற்றியிருப்பார்.

கே. இந்த உடல் உபாதையோடு எத்தனை வருடங்கள் இருந்தார்?

ப. ஐந்து வருடங்கள். அதாவது அவரது 90வது வயதிலிருந்து 94வது வயதுவரை இந்த உபாதைகளோடுதான் இருந்தார்.

கே. தனக்கு வாரிசு இல்லை என்ற கவலை பெரியாருக்கு இருந்ததா?

ப. அவர் அதை நினைத்ததில்லை. அவருக்கு எல்லாமே இயக்கம்தான். கொள்கைதான். இவருடைய தந்தையாருடைய சொத்துகள் சகோதரர்களுக்கிடையே பிரிக்கப்பட்டது. பெரியாரின் பங்கு, அவருக்குப் பிறகு அவருடைய சகோதரர்களுக்கே போய்விடும் என்பதால் ஏதாவது செய்யலாமா என்று யோசித்தார். அதற்காக ஈ.வி.கே. சம்பத்தை தத்தெடுக்கலாமா என யோசித்ததுண்டு என கூறியிருக்கிறார். அதுகூட தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்பதற்காக அல்ல. சொத்து தனி நபர்களுக்குச் செல்லாமல் இயக்கத்திற்கு வர பயன்படுமா என்றுதான் அப்படி யோசித்தார்.

மணியம்மையாரை அவர் திருமணம் செய்ததே அதற்காகத்தானே. மகளாக இருந்தால், சொத்தை அளிக்க முடியாது என்றார்கள். மனைவியாக இருந்தால் சொத்தை அளிக்கலாம். திருமணம் என்பது சட்டப்படியான ஒரு ஏற்பாடே தவிர, இயக்கப் பாதுகாப்பிற்காக நான் செய்யக்கூடிய ஒரு ஏற்பாடேயாகும் என்று சொன்னார்.

இயக்கத்தைப் பற்றித்தான் அவருக்குக் கவலை. அவர் முழுமையான பொருள் முதல்வாதி. தனிப்பட்ட பாசம், பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என்பதில் ஈடுபாடு இல்லை. பாசத்திற்காக பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பார். கொஞ்ச விரும்பினால், மற்றவர்கள் குழந்தையைக் கொஞ்சட்டும் என்பார். அவர் 100 சதவீதம் பொருள் முதல்வாதி. ஒரு பொருள் முதல்வாதியின் அணுகுமுறை எப்படியிருக்குமோ அப்படித்தான் அவர் இருப்பார். அதற்கு மேல் இதற்கெல்லாம் பெரிய முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்.

கே. பெரியாரின் கடைசி நாள் எப்படி இருந்தது?

ப. பெரியாரைப் பொறுத்தவரை கடைசி நாள் என்ற ஒன்றே கிடையாது. டிசம்பர் 19ஆம் தேதி தியாகராய நகரில் சிங்கம் போல கர்ஜித்தார். அதற்குப் பிறகு உடல்நலம் குறைய, இங்கே அரசு மருத்துவமனைக்குப் போனோம். பிறகு வேலூர் மருத்துவமனைக்குப் போய்விடலாம் என முடிவுசெய்து புறப்பட்டோம். 20ஆம் தேதி அங்கே சென்றோம். 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களும் நன்றாக இருந்தார். 23ஆம் தேதியன்று அவருடைய மேலாளர் சம்பந்தம் அவரிடம், அய்யா திருவண்ணாமலையில் சுற்றுப் பயணங்கள் நெருங்குகின்றன. தேதிகளை தள்ளிவைக்கச் சொல்லலாமா என்று கேட்கிறார். அதற்கு பெரியார், எதற்காகத் தள்ளிப்போட வேண்டும். சிகிச்சை முடிந்தவுடன் நேரே சென்றுவிடலாம். திருவண்ணாமலை இங்கிருந்து பக்கம்தானே. கூட்டத்திற்குப் போய்விட்டு போகலாம் என்றார்.

ஆனால், திடீரென கோமாவில் விழுந்தார். இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு, உயிர் பிரிந்தது.

தினமும் அவரது உடல் நிலை குறித்து விடுதலையில் எழுதுவோம். கடைசி நாளுக்கு முந்தைய தினம்கூட நன்றாக இருக்கும்படிதான் எழுதச் சொன்னார். கடைசி ஒரு நாளில்தான் எல்லாம் நடந்தது.

கே. தனக்குப் பிறகு இந்த இயக்கம் எப்படி இருக்க வேண்டுமென்ற பார்வை அவருக்கு இருந்ததா?

ப. உங்களுக்குப் பிறகு என்ன என்று அவரிடம் ஒரு முறை கேட்கப்பட்டது. எனக்குப் பிறகு என்ன இருக்கிறது? நான் எழுதிய புத்தகங்கள் இருக்கின்றன. எல்லாக் கொள்கையும் அதிலேயே இருக்கின்றன. கொள்கையைச் செயல்படுத்துபவர்கள் தானாக வருவார்கள். நான் முழு மன நிறைவோடு இருக்கிறேன். எந்தக் குறையும் இல்லை என்பார்.

பெரியார் ஒரு முறை மலர் ஒன்றில் 'எனக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது; துறவியாகிவிடுவேனோ என்று நினைக்கிறேன்' என்று எழுதினார். அப்போது அண்ணா அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அவருக்கு அந்த மலரை நான் அனுப்பிவைத்திருந்தேன். அதைப் படித்த அண்ணா, உலகில் உள்ள தலைவர்களில் தன்னுடைய காலத்திலேயே தன் கொள்கை வெற்றி பெறுவதைப் பார்த்த ஒரே ஒருவர் நீங்கள்தான். நீங்கள் சலிப்புக் கொள்ள தேவையில்லை" என்று பதில் எழுதினார். பெரியாருக்கு அதில் ரொம்பவும் மகிழ்ச்சி.

நல்ல ஏற்பாடுகளைச் செய்திருந்தார். நம்பிக்கையானவர்களை டிரஸ்டில் வைத்திருந்தார். ஒருவரை நீண்ட நாட்கள் கவனித்து எடைபோட்டுப் பார்த்து முடிவெடுப்பார். பெரியாருக்கு தன் காலத்திற்குப் பிந்தைய நாட்களுக்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி கவலை இருக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்