ஜம்மு காஷ்மீர் மக்கள் பாதுகாப்பு சட்டத்தில் ஃபரூக் அப்துல்லா கைது - மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஃபரூக் அப்துல்லா படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஃபரூக் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் மக்கள் பாதுகாப்பு சட்டத்தில் (J&K Public Safety Act) அம்மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டிருப்பதற்கு மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஃபரூக் அப்துல்லா எங்கே என்று கேட்டு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த ஹேபியஸ் கார்பஸ் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவிருந்த நிலையில் செப்டம்பர் 16-ம் தேதி ஃபரூக் அப்துல்லா மீது இந்த சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

ஃபரூக் அப்துல்லா மீது இந்த சட்டத்தை ஏவியிருப்பது, இந்திய அரசு அப்பட்டமாக சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதை காட்டுவதாக அம்னஸ்டி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் நடந்துவரும் மனித உரிமை மீறல் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இது நடந்துள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

"ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் வீட்டுச் சிறையில் உள்ள ஃபரூக் அப்துல்லா பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்ததாக அவரது கைது ஆணை குறிப்பிடுகிறது.

மாற்றம் வரும் என்ற வாக்குறுதிக்கு மாற்றாக, அரசியலில் மாற்றுக் கருத்துகள் உடையவர்கள் மீது அடக்குமுறைச் சட்டத்தை ஏவுவது தொடர்கிறது. இது இந்திய அரசின் நேர்மையற்ற நோக்கத்தைக் காட்டுகிறது.

ஜம்மு காஷ்மீரில் மக்கள் பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு நீண்ட வரலாறு உண்டு. கண்மூடித்தனமாக மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்துவது குற்ற நீதி முறையை வளைக்க இந்திய அரசுக்கு எப்படி உதவுகிறது என்றும், அது எப்படி பொறுப்புணர்வை, வெளிப்படைத் தன்மையை, மனித உரிமைகளுக்கான மரியாதையை சிதைக்கிறது என்றும் நாங்கள் எங்கள் முந்தைய உரை ஒன்றில் ஆவணப்படுத்தியுள்ளோம்.

"சட்டமற்ற சட்டத்தின் அடக்குமுறை: குற்றச்சாட்டோ, விசாரணையோ இல்லாமல் ஜம்மு காஷ்மீர் மக்கள் பாதுகாப்புச் சட்டத்தில் கைது" என்ற தலைப்பில் அந்த உரை வெளியானது.

காஷ்மீர் முற்றாக முடக்கப்பட்டு 40 நாள்களுக்கும் மேலாகிறது. சர்வதேச மனித உரிமை அளவுகோள்களுக்கு முரணான நிர்வாக காவல் சட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் குரல்கள் முடக்கப்பட்டுள்ளன" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

இதனிடையே மக்கள் பாதுகாப்பு சட்டத்தில் ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டிருப்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் "ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஃபரூக் அப்துல்லாவை மக்கள் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது ஆழ்ந்த கவலையைத் தருகிறது.

மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரை சிறைக்குள் ஒரு சிறையில் தள்ளியிருப்பது, விதி மீறல், தான்தோன்றித் தனம், சட்டவிரோதம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தவிர, மூத்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் பலரும் ஃபரூக் அப்துல்லா மீது மக்கள் பாதுகாப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டித்துள்ளனர். மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா இது தொடர்பாக டிவீட் செய்துள்ளார்.

"83 வயதான, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஃபரூக் அப்துல்லா, மக்கள் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.... அவரை விசாரணையின்றி 2 ஆண்டுகள் வரை காவலில் வைக்கமுடியும்.

எவ்வளவுதூரம் யோசனை இல்லாமல் இது போக முடியும்...

ஒன்று தெரியுமா: 1994ம் ஆண்டு, (நரசிம்ம) ராவ் அரசாங்கத்தின் சார்பில் வாஜ்பேயி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியாவின் சார்பில் வாதாடி வென்றவர் இவர்".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :