பெரியாரின் பெண்ணுரிமை கருத்துகள் மேற்கத்திய சிந்தனை மூலம் வளர்ந்தது எப்படி?

  • சுனில் கில்னானி
  • வரலாற்றாசிரியர்

காந்தியும் அவரது தொண்டர்களும் வெண்ணிற ஆடையை உடுத்தியபோது, தன் தொண்டர்கள் கறுப்பு நிற ஆடையை உடுத்த வேண்டுமெனக் கூறினார் பெரியார். தன்னைப் பின்பற்றுவோரின் மத நம்பிக்கைகளை காந்தி, தடவிக்கொடுத்தபடி கடந்துசென்றார்.

பெரியார் தன் பேச்சைக் கேட்க வந்தவர்களின் மத நம்பிக்கையையும் ஜாதிப் பழக்கவழக்கங்களையும் தூற்றினார். அவர்களை முட்டாள்கள் என்றார். அவர்களின் கடவுள்களை செருப்பால் அடிக்கப்போவதாகச் சொன்னார். காந்தி, தேசிய இயக்கத்தைக் கட்டியெழுப்ப விரும்பினார். பெரியாருக்கு திராவிட தென்னிந்தியா போதுமானதாக இருந்தது.

பெரியாரின் சிந்தனைகளுக்கான தத்துவ மூலம் எது என்பதைக் கண்டறிவது மிகச் சிக்கலானது. பெரியாரின் கடிதங்கள், காகிதங்கள், குறிப்புகளை வைத்து பல ஆண்டுகள் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, பெரியாரைப் பொறுத்தவரை தன்னுடைய சொந்தக் கருத்தாக இல்லாதவற்றை மேற்கொள்காட்டிச் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்கிறார்.

ஆனால், பெண்ணுரிமை, பெண் விடுதலை குறித்த பெரியாரின் சிந்தனைகளுக்கு 1927ல் வெளியான சர்ச்சைக்குரிய ஒரு புத்தகம் காரணமாக அமைந்தது. காந்திக்கும் காங்கிரசிற்கும் சுத்தமாகப் பிடிக்காத புத்தகம் அது.

அந்தப் புத்தகம் அமெரிக்க பத்திரிகையாளரான கேத்தரீன் மேயோ எழுதிய 'மதர் இந்தியா' எனும் நூல். இந்து சடங்கு சம்பிரதாயங்கள் எப்படியெல்லாம் பெண்களைச் சுரண்டுகின்றன என்பதை இந்தப் புத்தகத்தில் வெளிப்படுத்தியிருந்தார் கேத்தரீன் மேயோ.

குழந்தைத் திருமணம், பாலியல் நோய்கள், விதவைகள் நடத்தப்படும்விதம் குறித்த புள்ளிவிவரங்களுடன் இந்தக் கருத்தை அவர் முன்வைத்தார். பதினான்கு வயதுக்கு முன்பாக பெண்கள் திருமணம் செய்துகொடுக்கப்படும் பாரம்பரியத்தை அரசு ஏற்பது குறித்தும் அவர் தனது புத்தகத்தில் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென சில காங்கிரஸ் தலைவர்கள் விரும்பினார்கள் என்பது உண்மைதான். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து இம்மாதிரி கருத்து வெளிவந்தது, இந்திய சுயாட்சி என்பது பெண்களுக்கு மிக மோசமான விஷயமாக அமையும் என்பதைப் புலப்படுத்தியது.

கேத்தரீன் மேயோ பிரிட்டிஷ் உளவாளி என்ற சந்தேகம் பல இந்தியர்களுக்கு இருந்தது. காங்கிரஸ் தலைவர்களைப் பொறுத்தவரை இந்து மதம்தான் பெண்களின் மிகச் சிறந்த பாதுகாப்பு என்றார்கள்.

மதர் இந்தியாவில் சொல்லப்பட்ட கருத்துகளை பெரியார் வேறு மாதிரி பார்த்தார். இந்து மதத்தின் மீதான தாக்குதல் அவருக்கு மகிழ்ச்சியளித்தது என்றாலும் இந்த சர்ச்சையினால் மேலே வந்த சமூகப் பிரச்சனைகளையும் ஐரோப்பாவில் உருவாகியிருந்த பெண்ணிய இயக்கங்களைப் பற்றியும் அவர் அறிந்துகொண்டார்.

1920களின் பிற்பகுதியிலிருந்தே இந்தியப் பெண்களின் உரிமை குறித்த விவகாரம் சுயமரியாதைப் பிரசாரத்தின் முக்கியமான பகுதியாக இருந்தது. தன்னுடைய உரைகளிலும் தன்னுடைய வாரப் பத்திரிகையிலும் நேரடியாகவும் போலிப் பூச்சுகள் இன்றியும் இவற்றை முன்வைத்தார் பெரியார்.

பெரியாரின் உணர்ச்சிகரமான பேச்சு வழக்கிலான உரைகள் அவரை நகர்ப்புறத்தினரைத் தாண்டி, தமிழ் நிலமெங்கும் கொண்டு சேர்த்தன.

1928-29ல் கிராமப்புற ஆண்களும் பெண்களும் சுயமரியாதைத் திருமணங்களைச் செய்துகொள்ள ஆரம்பித்தனர். பெரும்பாலும் காதல் திருமணங்களான இவை, பிராமண பூசாரிகளும் மந்திரங்களும் இன்றி நடத்தப்பட்டன.

பல நாட்கள் நடக்கும் விமரிசையான திருமணங்களுக்குப் பதிலாக, பெரியார் முன்வைத்த திருமணம் எளிதாகவும் வேகமானதாகவும் இருந்தது.

சடங்குகளுக்காக வாரி இறைக்கப்படும் பணத்தை அந்தத் தம்பதிக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் கல்விக்கு செலவழிக்கலாம் என்றார் பெரியார். அதே நேரம், பாலியல் உறவு என்பது வெறுமனே குழந்தை பெற்றுக்கொள்வதற்காகத்தான் என்று போலித்தனமாக இந்தத் திருமணங்களில் முன்வைக்கப்படவில்லை.

பெரியார் கடைசியாக பேசியது என்ன? - கி. வீரமணி பேட்டி

சுய மரியாதை இயக்கத்திற்கு அதிகாரபூர்வமாக ஐந்து கொள்கைகள் இருந்தன: கடவுள் ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டும், காந்தி ஒழிய வேண்டும், காங்கிரஸ் ஒழிய வேண்டும், பிராமனர் ஒழிய வேண்டும் என்பவையே அவை.

ஆணாதிக்கத்தை ஒழிப்பது என்பது கூடுதல் லட்சியம்தான். ஆனால், காலம் செல்லச்செல்ல பெண்ணும் மாப்பிள்ளையும் சமமாக நடத்தப்படும் சுயமரியாதைத் திருமணங்கள் மிக முக்கியமானவையாக, திருப்புமுனைத் தருணங்களாக அமைந்தன.

பிராமணர்கள் நடத்தும் சடங்குகளை மையமாக வைத்து எழுந்திருந்த இந்து சமூகத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வழியாக இவை அமைந்தன.

பெரியாரின் கொள்கைகளை கிராமம் கிராமாக பரப்ப இவை பயன்பட்டன. தர்க்கரீதியான, பகுத்தறிவின் அடிப்படையிலான விவாதங்கள், ஆண் - பெண் இடையில் ஒளிவுமறைவற்ற பேச்சுகளுக்கு இவை வழிவகுத்தன.

பெரியாரைப் பொறுத்தவரை ஜாதிக்குள்ளேயே வீட்டார் பார்த்து, செய்துவைக்கும் திருமணங்கள் பெண்களின் கல்வியின்மைக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

யாருக்கோ திருமணம் செய்துகொடுக்கும்போது, பெண்கள் ஏதும் தெரியாதவர்களாக இருப்பதை பெற்றோர் விரும்பினர். விளையாட்டுகளில் பங்கேற்பதன் மூலம் பெண்கள் அறிவு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டுமென பெரியார் கூறினார்.

இந்தப் பெண்கள் வளர்ந்து திருமணம் செய்யும்போது - அவர்களே தேர்வுசெய்த ஆணைத் திருமணம் செய்வது சிறந்தது - குழந்தை பிறப்பைக் கட்டுப்படுத்த அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமென பெரியார் விரும்பினார்.

இது மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காகச் சொல்லப்பட்ட கருத்து அல்ல. இது ஆண் - பெண்களின் உடலமைப்பு, பாலியல் நடவடிக்கைகள் ஆகியவை வாழ்வின் பிற அம்சங்களிலும் எப்படி எதிரொலிக்கும் என்பதை வைத்துச் சொல்லப்பட்ட கருத்து.

வட இந்திய மாணவர்கள் பெரியார் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

பெரியார் நெறிமுறைகளற்ற வாழ்க்கை முறையை, ஒழுக்கக்கேட்டை ஊக்குவிப்பதாக தமிழ் இதழ்கள் எழுதின. ஒரு திருமணத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் சொன்னார் பெரியார்:

"'மனைவி, கணவனை மதிக்க வேண்டும் என்றால் ஏன் கணவன், மனைவியை மதிக்கக் கூடாது? மனைவிதான் புகுந்த வீட்டின் உறவுகளை மதிக்க வேண்டுமென்றால் ஏன் மனைவி வீட்டு உறவுகளை, கணவன் மதிக்கக் கூடாது? மனைவி, கணவனுக்குச் செய்வதை கணவன், மனைவிக்குத் திருப்பிச் செய்ய முடியாது என்றால் பெண் என்பவள் வீட்டு வேலைக்கும், உடல் சுகத்துக்கும் மட்டுமே ஆனவள் என்று ஆகவில்லையா? இப்படிப்பட்ட திருமணங்கள் நாட்டில் அரை நொடிகூட நீடித்திருக்க அனுமதிக்கக் கூடாது".

1920ல் கம்யூனிஸ ரஷ்யாவில் நடந்துகொண்டிருந்த சமூக மாற்றங்களின் மீது ஆர்வம் கொண்டார் பெரியார். 1931ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவர் ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். அவர் கிட்டத்தட்ட ஒரு வருடம் வெளிநாட்டில் செலவழித்தார்.

இது இந்திய பொதுப் புத்தியிலிருந்து மேலும் அவரை விலகச்செய்தது. பெர்லினில் அவர் நிர்வாண முகாம்களுக்கும் சென்றார். தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில் அந்தப் படம் இடம்பெற வேண்டுமெனவும் கூறினார்.

அவர் நாடு திரும்பும்போது, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கருத்தடை சாதனங்கள் ஆகியவையே இந்தியாவை முன்னேற்றும் என்ற நம்பிக்கை அவருக்குள் ஆழமாக பதிந்திருந்தது.

விவாகரத்து தொடர்பான சோவியத்தின் கொள்கைகள், குழந்தைகளைப் பாதுகாப்பதில் அரசின் ஆதரவு ஆகியவை குடும்பம் என்ற அமைப்பை எப்படி மாற்றுகின்றன, குடும்பம் என்ற அமைப்பின் தேவையை எப்படிக் குறைக்கின்றன என்பதைக் கவனிப்பதில் அவர் ஆர்வம் காட்டினார்.

அவர் அங்கே எதிர்கொண்ட வேறு சில பொருளாதாரக் கொள்கைகளும் அவருக்கு ஆர்வமூட்டின. அவர் திரும்பிவரும்போது, தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவதற்குப் பதிலாக லாபத்தில் பங்களிக்க வேண்டும், அவர்களை அந்தத் தொழிற்சாலையின் பங்காளிகளாக்க வேண்டுமென்ற சிந்தனையை முன்வைத்தார். தன் குடும்பத் தொழில்களில் அவற்றை அறிமுகப்படுத்தினார்.

அரசியல் பதவிகளில் ஆர்வம்காட்டாமல், மக்களின் மனநிலையில் தாக்கம் செலுத்தி, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதில் பெரியார் தன் பெரும் எதிரியான காந்தியைப் பின்பற்றினார் என்று சொல்லப்படுவதுண்டு.

1948ல் பெரியார் தன்னைவிட வயதில் மிக இளைய பெண்ணை - மணியம்மையை - திருமணம் செய்தபோது அவருடைய ஆதரவுதளம் வெகுவாகக் குறைந்தது.

சுய மரியாதை இயக்கத்தின் ஒரு பிரிவினர் இந்தத் திருமணத்தை கடுமையாக எதிர்த்தனர். அதில் சூழ்ச்சி இருப்பதாகக் கூறினர். பிறகு அவர்கள் பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினர்.

தி.மு.கவும் அதிலிருந்து பிறந்த மற்றொரு திராவிடக் கட்சியான அ.தி.மு.கவும் இப்போது அரை நூற்றாண்டிற்கும் மேலாக தமிழக அரசியலை ஆதிக்கம் செய்கின்றன.

சுதந்திர இந்தியாவின் தேர்தல் அரசியலில் பெரியார் ஒரு குறிப்பிடத்தக்கத் தாக்கத்தைச் செலுத்தினார். பல ஆண்டுகள் முக்கிய வேட்பாளர்களுக்காக அவர் பிரசாரம் மேற்கொண்டார். மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கு அவரை 'கிங் மேக்கராக'க் காட்டியது.

இதனால், அரசின் மீதும் சட்டமன்றங்களின் மீதும் வெளியிலிருந்து அவரால் அழுத்தம் கொடுக்க முடிந்தது. எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், இப்படி அதிகாரம் செலுத்துவது அவருக்கு வசதியாகவே இருந்தது.

அம்பேத்கரைப் போல, பெரியார் தன் கருத்தாக்கங்களை இந்தியா முழுமைக்கும் முன்வைக்கவில்லை. தென்னிந்தியாவின் திராவிடக் கலாசாரத்திலேயே அவரது வேர்கள் ஆழப்பதிந்திருந்தன. அந்தக் கலாசாரத்தில் அவருடைய சிந்தனைகள் தீவிரமாக ஊறியிருந்தன.

ஆனால், புனிதங்களைச் சுட்டுப் பொசுக்கிய அவரே ஒரு புனிதப் பசுவாக உருமாறினார். 1948ல் நடந்த திருமணத்திற்குப் பிறகு, அடுத்த இருபதாண்டுகளுக்கு பெரியாரை ஒதுக்கிவைக்க முயன்ற அரசியல்வாதிகள் பிறகு வேறு மாதிரி நடந்துகொண்டனர்.

1973ல் அவர் மரணமடைந்தபோது, "எல்லா பெரிய அரசியல் கட்சிகளுமே தாங்கள் பெரியாரின் பாரம்பரியத்தையே பின்பற்றுவதாகச் சொல்லின. இத்தனைக்கும் அவர் விரும்பாத பல காரியங்களை அவர்கள் செய்துவந்தனர்" என்கிறார் டேவிட் வாஷ்ப்ரூக்.

மக்கள்தொகை ஆய்வாளர்களும் மருத்துவ - அறிவியல் வரலாற்றாசிரியர்களும் தென்னிந்தியப் பெண்கள் முன்னேற்றத்திலும் சுகாதார மேம்பாட்டிலும் பெரியாரின் பங்களிப்பு மிகைப்படுத்திச் சொல்லப்படுவதாக நியாயமாகவே கருதுகிறார்கள். பெரியார் பிறப்பதற்கு முன்பாகவே தென்னிந்தியாவில் ஏற்படத் துவங்கியிருந்த மாற்றங்களே இதற்குக் காரணம் என்கிறார்கள் அவர்கள்.

ஆனால், முதலாம் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் இடையில் தமிழகத்தில் மக்கள்தொகை வெகுவாகச் சரிந்ததற்கு கருத்தடை முறைகள் குறித்த அவரது தீவிரப் பிரசாரம் முக்கியக் காரணம்.

வேறு எந்தப் பங்களிப்பும் இல்லையென்று வைத்துக்கொண்டாலும்கூட, அவர் தன் சிந்தனைகளை விவாதத்திற்குக் கொண்டுவந்தார். மக்களின் மனதில் பதிய வைத்தார். கிராமப்புறங்களிலும் நகர்ப்புறத்திலும் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பெரும் செல்வாக்குப் படைத்திருந்த பெரியாரின் பிரசாரங்களுக்கும் பெண்களின் முன்னேறத்திற்கும் தொடர்பே இல்லை என்று சொல்வது, பெரியாரைப் போலவே சொல்வதென்றால் - முட்டாள்தனமானது.

தமிழகத்திற்கு வாய்த்த மகத்தான பாரம்பரியத்தையும் மீறி, தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றம் தற்போது தேக்கமடைந்திருக்கிறது. ஆனால் காலம்காலமாக ஏழ்மையாக இருந்த வட - கிழக்கு பழங்குடியின மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றன. 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பார்த்தால், மிகச் சிறிய மாநிலமான சிக்கிம், பெண்கள் எழுத்தறிவில் தமிழகத்தைத் தாண்டி நிற்கிறது.

எழுத்தறிவு விகிகத்தில் ஆண் - பெண் இடையிலான வித்தியாசம் குறைவது, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் ஆண் - பெண் வித்தியாசம் குறைவது போன்றவற்றுக்கு பல காரணங்கள் இருக்கும்.

ஆனால், நீடித்த, தீவிரமான பிரசாரம் இவற்றில் மிக முக்கியமானது. பெண்ணுரிமைக்காகப் போராடுபவர்கள் தேர்தல் சமயத்தில் குரல்கொடுக்காமல், பெரியாரைப் போல தொடர்ந்து மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும். மக்களிடம் சென்று பேசுவது உடனே வெற்றியைத் தந்துவிடாது. ஆனால், நீண்ட கால நோக்கில் இந்தியப் பெண்கள் குடியரசில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

(கட்டுரையாளர் புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியர். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் இயக்குநர். அரசியல் துறை பேராசிரியர். நவீன இந்தியாவை உருவாக்கிய மகத்தான ஐம்பது ஆளுமைகளின் வரலாற்றைச் சொல்லும் இவருடைய Incarnations: India in 50 Lives புத்தகத்தில் பெரியார் குறித்து எழுதப்பட்ட, Sniper of the sacred Cow கட்டுரை பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி தமிழில் இங்கே இரண்டு பாகங்களாக வழங்கப்படுகிறது.

முதல் பாகம் பெரியார்: புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர் என்ற தலைப்பில் வெளியானது. இது இரண்டாவது மற்றும் இறுதி பாகம்.

Allen Lane ஆங்கில நூலை வெளியிட்டது. இந்தப் புத்தகத்தை தமிழில் சந்தியா பதிப்பகம் வெளியிடுகிறது. கட்டுரையின் மொழிபெயர்ப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :