சௌதி எண்ணெய் ஆலை தாக்குதல் சாமானிய இந்தியர்களை எப்படி பாதிக்கும்?

Saudi Arabia oil drone attack படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சௌதி தாக்குதலால் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்ந்தால் அது இந்தியர்கள் அன்றாடம் வாங்கும் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும்

சௌதி அரேபியாவில் உள்ள உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல், பல தசாப்தங்களாக இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்கச் செய்த்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் புதிய மோதல் ஏற்படுவதற்கான அச்சத்தையும் இது உருவாக்கியுள்ளது.

ஆனால், இதன் பாதிப்புகள் ஆயிரக் கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பாலும் உணரப்படுகிறது,

என்ன நடந்தது?

செப்டம்பர் 14ம் தேதி சனிக்கிழமை சௌதி அரேபியாவின் அப்கைக் எனுமிடத்திலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும், குராய்ஸ் எனும் இடத்திலுள்ள எண்ணெய் வயலையும் இலக்கு வைத்து பல ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல் சௌதி அரசின் எண்ணெய் விநியோகத்தை பாதியாக குறைத்து விட்டதோடு, உலக அளவில் சௌதியின் எண்ணெய் விநியோகத்தை 5 சதவீதம் குறைத்துள்ளது.

ஏமனை சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளனர். செளதி அரசு தலைமையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ராணுவப் படை ஏமன் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஏமன் அரசை எதிர்த்துப் போரிட்டு வரும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இரான் ஆதரவளிக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவுக்கு இதனால் என்ன பாதிப்பு?

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 83 சதவீத எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இதனால், உலகில் அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

இந்தியா பயன்படுத்தும் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு, இராக் மற்றும் சௌதி அரேபியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

10 சதவீதத்திற்கு அதிகமான எண்ணெயை இரானிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வந்தது.

ஆனால், இரான் உடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பின்னர், இந்த ஆண்டு தொடக்கத்தில் இரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது.

அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்தாலும், அவற்றிடம் இருந்து இந்தியாவால் அதிக விலையில் வாங்கப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளரும், எரிசக்தி நிபுணருமான நரேந்திர தனிஜா இது தொடர்பாக குறிப்பிடுகையில், "இந்தியாவுக்கு இரண்டு முக்கிய கவலைகள் உள்ளன. முதலாவதாக, உலக நாடுகளில் சௌதி அரேபியாதான் மிகவும் பாதுகாப்பான எண்ணெய் விநியோக நாடு என்று இந்தியா நம்பியது. இந்த நவீன ஆயுத தாக்குதலும், இந்த தாக்குதல் மிகவும் துல்லியமாக நடத்தப்பட்டிருப்பதையும் பார்த்தால், சௌதியின் எண்ணெய் நிலையங்கள் முன்னர் நினைத்ததைபோல பாதுகாப்பானதாக இல்லை என்று தோன்றுகிறது. இது, இந்தியாவையும், பிற பெரிய எண்ணெய் இறக்குமதி நாடுகளையும் கவலையடை செய்துள்ளது."

"அடுத்ததாக, இந்தியாவின் பொருளாதாரம் விலைவாசி உயர்வால் பதிப்படையும் பொருளாதாரம். இந்திய வாடிக்கையாளர்கள் விலைவாசி உயர்ந்தால், குறைவாக பொருட்களை வாங்கும் இயல்பு உடையவர்கள். எனவே, கச்சா எண்ணெய் விலை உயர்வதால் அதிக கவலை எழுகிறது," என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சௌதியில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால், குவைத் மீது இராக் தாக்குதல் நடத்திய பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு உலக எண்ணெய் சந்தைகளில் எண்ணெய் விலை உயர்வு கண்டுள்ளது.

கடந்த 28 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்கு உயரவில்லை.

சௌதி அரேபியா இந்த தாக்குதலுக்கு இன்னும் முழுமையாக பதிலளிக்கவில்லை. எனவே, சௌதிக்களின் மனதில் என்ன உள்ளது என்று நமக்கு இன்னும் சரியாக தெரியவில்லை.

ஆயுத பலத்தால் இதற்கு பதிலடி கொடுப்பார்களா? ஆம் என்றால், இந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகமாகி, இராக் மற்றும் குவைத் உள்பட வளைகுடா பகுதி முழுவதும் எண்ணெய் விநியோகம் சீர்குலையும். எனவே, விடை காண முடியாத பல கேள்விகளும், விநியோகத்தில் பல கவலைகளும் தோன்றியுள்ளன.

இந்தியாவுக்கு தேவையான எண்ணெயில் மூன்றில் இரண்டு பங்கு இந்த பிராந்தியத்தால் வழங்கப்படுவதால், இங்கு பதற்றம் ஏற்பட்டால் இது இந்தியாவை எதிர்மறையாக பாதிக்கும்.

மிக பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளையும், அவை எண்ணெய் இறக்குமதியையே சார்ந்திருப்பதையும் பார்த்தால், இந்தியாவைவிட பிற நாடுகள் பெரும் அளவுக்கு பாதிக்கப்படாது. இந்தியாவின் பொருளாதாரம் எண்ணெய் பொருளாதாரமாக இருப்பதால், இத்தகைய கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவை நிச்சயம் பாதிக்கும்.

இந்தியருக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

இந்தியருக்கு ஏற்படும் பாதிப்பை பொறுத்தவரை, எண்ணெய் உற்பத்தி எத்தனை நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து அமையும்.

ஆலையில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய சில நாட்கள் ஆகும் என்று சௌதி தெரிவித்துள்ளது. அதிக நாட்கள் ஆக ஆக எண்ணெய் விலை உயரும் என்பதால் மேலதிக பாதிப்புகள் ஏற்படும். இதனால், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியின் செலவு அதிகரிக்கும்.

நிதி தொடர்பாக இந்திய அரசு ஏற்கெனவே சிக்கலில் உள்ளது, எண்ணெய் விலை அதிகரிக்குமானால், இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை செயல்திறனோடு சமாளிப்பதற்கு போதிய நிதி இல்லாமல் போகும்.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிக்குமானால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் அதிகரிக்கும். எண்ணெய் விலை அதிகரிப்பு என்பது தயாரிப்பு துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை உள்பட பல தொழில்துறைகளை பாதிக்கும். இதனால் பணவீக்கம் ஏற்படலாம்.

பிளாஸ்டிக் மற்றும் டயர்கள் போன்ற கச்சா எண்ணெயின் துணை தயாரிப்பு பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.

எண்ணெய் விலை அதிகரிப்பு நாணய மதிப்பையும் பாதிக்கும். கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்குமானால், இப்போது வாங்கி வரும் எண்ணெயை அதிக டாலர் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இதனால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்.

இந்திய பங்கு சந்தைகளில் ஏற்கெனவே பாதிப்பு தொடங்கிவிட்டது. எண்ணெய் விலை அதிகரிப்பு பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால், தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்கு சந்தை வீழ்ச்சி கண்டுள்ளது.

என்ன செய்யலாம்?

"இந்நேரத்தில் அரசால் அதிகமாக எதையும் செய்துவிட முடியாது. ஏற்கெனவே இருக்கும் கையிருப்பை அரசு விநியோகிக்க தொடங்கலாம். இது ஒரு மாதம் போல உதவலாம்.

இந்தப் பிரச்சனை தொடர்ந்தால் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விதிப்பை நீக்கலாம். ஆனால், இதனால் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, பணப்புழக்கமும் குறையும். ஒரு பீப்பாய்க்கு 70 டாலருக்கு குறைவான எண்ணெய் விலை இருக்கும் வரை, அதனால் வரும் பாதிப்பை சரிகட்டலாம்" என்கிறார் கேர் ரேட்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை பொருளியலாளர் மதன் சப்நிவாஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்