அமித் ஷா அறிவிப்பை அடுத்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒத்திவைத்தது தி.மு.க.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படத்தின் காப்புரிமை FACEBOOK/MK STALIN

இந்தித் திணிப்பை எதிர்த்து வரும் 20ஆம் தேதி நடத்தப்படவிருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தி மொழி தொடர்பான தன்னுடைய பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதையடுத்து இந்த அறிவிப்பை தி.மு.க. வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி தினத்தன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன. எல்லா மொழிக்கும் அவற்றுக்கான முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், நாடு முழுமைக்குமாக ஒரே மொழி தேவை. உலகில் இந்தியாவின் அடையாளமாக அந்த மொழியே இருக்க வேண்டும். இன்று இந்தியாவை அப்படி இணைக்கக்கூடிய ஒரே மொழி, அதிகம் பேர் பேசக்கூடிய இந்தி மொழிதான்" என்று கூறியிருந்தார்.

அமித் ஷாவின் இந்தக் கருத்துக்கு நாட்டின் பல பகுதிகளிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. இந்தித் திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நிலையில், புதன்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

"தமிழக ஆளுநர் என்னை சந்திக்க விரும்புவதாக இன்று காலையில் கூறினார்கள். அந்த அழைப்பை ஏற்று நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலுவும் நானும் ஆளுநரைச் சந்தித்தோம். வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இந்தித் திணிப்பை எதிர்த்து தி.மு.க. நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்து கேட்டார்.

அதற்கு அவர், மத்திய அமைச்சர் அமித் ஷா சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றார். இதை மத்திய அரசு சொல்ல முன்வருமா என்று கேட்டோம். நான் மத்திய அரசின் பிரதிநிதியாகத்தான் இதைச் சொல்கிறேன் என்று உறுதியளித்தார்.

அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். இந்தியாவின் ஒரே மொழியாக இந்திதான் இருக்க வேண்டுமெனச் சொல்லவில்லை. நான் சொன்னதை தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆகவே அவர் சொன்னதை மனதில் கொண்டு 20ஆம் தேதி அறிவித்திருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். எந்த நிலையிலும் இந்தி திணிக்கப்பட்டால் மு. கருணாநிதி வழியில் இந்தி திணிப்பை எதிர்ப்போம்" என்று குறிப்பிட்டார்.

இந்தியைத் திணிக்கப்போவதாகக் கூறவில்லை என்ற அமித் ஷாவின் அறிவிப்பை தி.மு.கவுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுவதாகவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கறுப்புப் பெயின்டால் அழித்து போராட்டம் நடத்தினர்.

இந்தி எழுத்து அழிப்பில் ஈடுபட்ட 22 பேரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்