'பள்ளியை இடித்துவிட்டு கோயில் கட்ட வற்புறுத்திய கிராமவாசிகள்'

"பள்ளிக்கூடம் வேண்டாம், கோயில் வேண்டும்" - தமிழக கிராமம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'பள்ளியை இடித்துவிட்டு கோயில் கட்ட வற்புறுத்திய கிராமவாசிகள்'

புதுக்கோட்டை அருகே உள்ள ராஜாபகதூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த சிலர், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அமைந்துள்ள இடத்தில் கோயில் ஒன்றைக் கட்டுவதற்காக அந்தப் பள்ளியையே இடிக்கச் சொன்னதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் வார இறுதி விடுமுறைக்குப் பிறகு திங்களன்று பள்ளிக்கு வந்தபோது, பள்ளியின் முதன்மை நுழைவாயில் முன்பு பூசை செய்யப்பட்டு, கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர்.

ஆசிரியர்கள் அளித்த தகவலின்பேரில் வந்த வருவாய் அதிகாரிகள் அவற்றை அகற்ற முற்பட்டபோது அதை சிலர் தடுத்ததாக புதுக்கோட்டை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.

அந்த இடத்தில்தான் கோயில் கட்ட வேண்டும் என்று கடவுளே தங்களிடம் கேட்டுக்கொண்டதாக அந்தக் குழுவினர் கூறினார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை The New Indian Express

இந்தப் பிரச்சனைக்கு சாதிய பின்னணி இருப்பதாக அந்த நாளிதழ் விவரிக்கிறது.

அந்தக் கிராமத்தில் வசிக்கும் இரு வேறு சாதியினரின் ஒரு பிரிவினருக்கு தனியார் நிலத்தில் சொந்தமாகக் கோயில் உள்ளது. தனியாக கோயில் இல்லாத மற்றோரு பிரிவினர் அரசு பள்ளி இருந்த இடத்தில் கோயில் கட்ட முற்பட்டுள்ளனர்.

காவல் துறை தலையீட்டுக்கு பிறகு பள்ளியில் தாங்கள் நட்ட கற்களை அகற்ற அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். 

இந்து தமிழ்: 'பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடங்கள் 5-ஆக குறைக்கப்படுகிறது'

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடங்கள் 5ஆகக் குறைக்கப் பட்டுள்ளன. இதனால் பொதுத் தேர்வு மதிப்பெண் 600-ல் இருந்து 500-ஆக குறைகிறது. மேலும், மாணவர்களே விரும்பிய பாடங் களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் பாடத் திட்டம், தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு முறைகளில் பள்ளிக்கல்வித் துறை சில மாற்றங்களைச் செய்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட அரசாணை:

மாணவர்கள் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு ஏற்றதாகவும், மனவழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும் மேல்நிலை வகுப்புகளுக்கு தற்போது உள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன், புதிதாக 3 முதன்மை பாடத் தொகுப்புகளை நடைமுறைப் படுத்த தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த புதிய முறையை அமல்படுத்தத் தேர்வுத் துறை இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளது.

இதையேற்று மேல்நிலை வகுப்புகளுக்கு தற்போது உள்ள 4 முதன்மை பாடத்தொகுப்புகளுடன், புதிதாக 3 முதன்மை பாடத் தொகுப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி மாணவர்கள் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர மீதமுள்ள 4 முதன்மை பாடங்களில் ஏதேனும் 3 பாடங்களை மட்டும் தேர்வு செய்து எழுதிக் கொள்ளலாம்.

விருப்பமுள்ளவர்கள் 4 முதன்மை பாடங்களையும் சேர்த்து எழுதலாம். எனினும், மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்து எழுதும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும். இந்த புதிய மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு அடுத்த கல்வியாண்டு (2020-21) முதல் பிளஸ் 1 வகுப்பில் அமலாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் தற்போது ஒவ்வொரு பிரிவிலும் தமிழ், ஆங்கிலம் உட்பட 6 பாடங்கள் உள்ளன. ஒரு பாடத்துக்கு தலா 100 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

புதிய நடைமுறையின் படி இனி மாணவர்கள் தங்கள் விருப்பத்தின்படி 5 பாடங்களை மட்டும் தேர்வு எழுதிக் கொள்ளலாம். அதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும்.

இதர முதன்மை பாடங்களில் பிடித்தமான 3 பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு 500 மதிப்பெண்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். அதேநேரம் விருப்பமுள்ள மாணவர்கள் பழைய நடை முறையின்படி மொத்தமுள்ள 6 பாடங்களையும் சேர்த்து தேர்வு எழுதலாம். அவர்களுக்கு 600 மதிப் பெண்களுக்குச் சான்றிதழ் வழங்கப் படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினத்தந்தி: "திருட சென்ற வீட்டில் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்த கொள்ளையன்"

படத்தின் காப்புரிமை தினத்தந்தி

விழுப்புரத்தில் திருட சென்ற வீட்டில் கொள்ளையிட நபர் ஒருவர், ஊஞ்சல் ஆடியுள்ளார். அந்த வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியை சேர்ந்தவரும், தென்பேர் அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருபவருமான இளங்கோ(வயது 56) குற்றசம்பவங்களை தடுக்க போலீசார் அறிவுறுத்தலின்படி தனது வீட்டை சுற்றிலும் 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருந்தார்.

இந்த நிலையில் ஆசிரியர் இளங்கோ நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் டிப்-டாப் உடையணிந்தபடி வந்த நபர் ஒருவர், ஆசிரியர் இளங்கோ வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் இளங்கோ வீட்டின் 2-வது மாடிக்கு சென்றார். அங்குள்ள அறைக்கு சென்று ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா? என்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு எந்த பொருளும் கிடைக்காத நிலையில் விரக்தியுடன் அறையை விட்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது அங்குள்ள ஊஞ்சலில் ஆட ஆசை ஏற்பட்டது. உடனே, அந்த ஊஞ்சலில் அமர்ந்து சிறிது நேரம் ஆனந்தமாக ஆடி மகிழந்தார்.

பின்னர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து வீட்டின் முன்புற பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் பெட்ரோலை திருடிவிட்டு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை ஆசிரியர் இளங்கோ, தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது டிப்-டாப் வாலிபர் ஒருவர் நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டின் 2-வது மாடிக்கு வந்து அங்குள்ள ஊஞ்சலில் 3 நிமிடம் அமர்ந்து ஆடியுள்ளதும், பின்னர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் பெட்ரோலை திருடிச்சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததோடு, அந்த காட்சிகளை கொண்டு திருடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

தினமணி: 'பிரதமர் மோதியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு'

படத்தின் காப்புரிமை Facebook

தில்லியில் பிரதமர் நரேந்திர மோதியை மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி புதன்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம் குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

மேற்கு வங்கம் என்ற பெயரை பங்களா என ஆங்கிலம், இந்தி, வங்காளம் ஆகிய மூன்று மொழிகளிலும் மாற்ற வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்தப் பெயர் மாற்றத்துக்காக, அந்த மாநில சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றியது. எனினும், இந்தப் பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், தில்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் மோடியை மம்தா புதன்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுட்டுரையில் பிரதமர் அலுவலகம் பதிவேற்றம் செய்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்