குடியுரிமை திருத்த சட்டம்: ரஜினிக்கு எதிராக ட்விட்டரில் டிரண்டாகும் ஹாஷ்டேக் - காரணம் என்ன?

ரஜினிகாந்த் படத்தின் காப்புரிமை Getty Images

"எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது," என ரஜினிதாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கு இருதரப்பு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லி உட்பட பல இடங்களில் நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த போராட்டங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகம் மற்றும் உ.பியில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், "எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது." என நேற்று பதவிட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டரில் இரண்டு விதமான ஹாஷ்டேகுகள் டிரண்டாகி வருகின்றன.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ரஜினி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என ஏற்கனவே பல கேள்விகள் எழுந்திருந்தன.

இந்நிலையில் ரஜினியின் இந்த ட்விட்டர் பதிவு அவர் எந்த ஒரு பக்கம் குறித்தும் பேசாமல் பொதுவான சார்பை எடுத்துள்ளது குறித்து பலர் விமர்சித்து வருகின்றனர்.

"அதேசமயம் அவருக்கு ஆதரவான ஹாஷ்டேகில் அவர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கவில்லை வன்முறை வேண்டாம் என்றுதான் சொல்கிறார் அதை நாங்கள் மதிக்கிறோம்," என்று பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் கருத்துக்கள்

இதற்கு முன்பும் ரஜினி கூறிய பல கருத்துக்கள் சமுக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களை பெற்றது.

ரஜினி எப்போதும் யாருக்கும் மனம் வலிக்காமல் பேச முயற்சி செய்கிறார். அவர் பேசுவதிலேயே முரண் இருக்கிறது என்று அந்த சமயத்தில் பலர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தனர்.

முன்னதாக இதேபோல் இந்தி திணிப்பு குறித்து ஒருமுறை பேசியிருந்த அவர், "தமிழ்நாடு மட்டுமல்ல, எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் முன்னேற்றத்துக்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிருஷ்டவசமாக நம் நாட்டுக்கு பொது மொழி ஒன்று கொண்டு வரமுடியாது," என்று கூறி இருந்தார்.

"சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்; அதே நேரத்தில் ஐதீகத்தை பின்பற்ற வேண்டும்," என்று அவர் கூறியாதாகவும், "#MeToo பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும், அதே நேரத்தில் பெண்கள் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது" என்றும் அவர் கூறியதாகவும் சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

கடந்த ஓராண்டில் ரஜினி கூறியவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

'ஸ்டெர்லைட்'

"ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளை போன்றே ஸ்டெர்லைட் போராட்டத்திலும் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டனர்; சமூக விரோதிகள் காவல்துறையினரை அடித்த பிறகுதான் பிரச்சனை தொடங்கியது" என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

''போராட்டம் செய்யும்போது மிகவும் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். தமிழகத்தில் சமூகவிரோதிகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஜல்லிக்கட்டில் கூட அதுதான் நடந்தது. இந்த புனிதமான போராட்டம் கூட வெற்றி கிடைத்தாலும் ரத்தக்கரையோடு முடிந்திருக்கிறது'' என்று கூறி இருந்தார்.

''இந்த சமூக விரோதிகளை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். அவ்விதத்தில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவை நான் பாராட்டுகிறேன். விஷக்கிருமிகளை மற்றும் சமூக விரோதிகளை ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தார். இவ்விஷயத்தில் ஜெயலலிதாவை இப்போதைய அரசு பின்பற்றவேண்டும். இல்லையெனில் மிகவும் ஆபத்தாகும்,'' என்றார்.

இந்த கருத்து சர்ச்சையானது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற ரஜினிகாந்தை, சந்தோஷ் என்ற இளைஞர் கோபமாக "யார் நீங்க?" என்று கேட்பார். அதற்கு ரஜினி, "நான்தான்பா ரஜினிகாந்த்" என்பார். "ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?" என அந்த இளைஞர் கேட்டவுடன் "நான் சென்னையிலிருந்து வருகிறேன்" என்பார்.

அந்த சமயத்தில்"நான்தான்பா ரஜினிகாந்த்" என்ற வார்த்தை ட்ரெண்டானது.

ஆனால், சில மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கும் ஆணையத்திடம் அப்பகுதி மக்கள் ஒரு அமைப்பை குறிப்பிட்டு ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையில் முடிந்ததற்கு அந்த அமைப்பே காரணம் என்று கூறியதாக செய்திகள் வெளிவந்தன.

இதனை அடுத்து ரஜினிக்கு ஆதரவாக அன்றே சொன்ன ரஜினி என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆனது.

'எழுவர் விடுதலை'

கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னை விமானநிலையத்தில் நடிகர் ரஜினிகாத்திடம், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது; இதில் உங்கள் நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், எந்த ஏழு பேர்? அது குறித்து எனக்குத் தெரியவில்லை. இப்போதுதான் அதைக் கேள்விப்படுகிறேன் எனப் பதிலளித்திருந்தார்.

ரஜினிகாந்த்தின் இந்த பதில் கடும் சர்ச்சைக்கு உள்ளானது. பல்வேறு தரப்பினரும் இதை விமர்சனம் செய்தனர்.

ஆனால் அடுத்த நாளே, "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேர் தொடர்பாக தமிழக அரசு அளித்த கடிதம் என்று கூறியிருந்தால், எனக்கு புரிந்திருக்கும். அதை விடுத்து, எடுத்த எடுப்பிலேயே ஏழு பேர் விடுதலைக்காக என்று கேட்டால், எந்த ஏழு பேர் என்றுதான் கேட்கத் தோன்றும். அதற்காக, அந்த ஏழு பேர் யார் என்பது தெரியாத அளவுக்கு முட்டாள் அல்ல இந்த ரஜினிகாந்த்.

பேரறிவாளன் அண்மையில் பரோலில் சிறையிலிருந்து வெளியில் வந்தபோது, அவருடன் 10 நிமிஷங்களுக்கு மேலாக தொலைபேசி மூலம் பேசி அவருக்கு ஆறுதல் கூறியவன் நான்.

7 பேரையும் விடுதலை செய்வதுதான் நல்லது." என்று செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.

'சபரிமலை'

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், அனைத்து பாலினத்தவரும் சமம். சமூகத்தின் அனைத்து கூறுகளிலும் பெண்களுக்கு சம உரிமை உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அனைவரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். ஆனால், அதே நேரம் ஐதீகம் பின்பற்ற வேண்டும்" என்றார்.

"யார் பலசாலி?"

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக திரளும் மிகப்பெரிய கூட்டணி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?' என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரஜினி, "10 பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்த்து போராடுறாங்கனா யார் பலசாலி?' என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.

அப்போ, 'நரேந்திர மோதி பலசாலி என்று சொல்கிறீர்களா?' என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, 'இதைவிட க்ளீயரா யாரும் பதில் சொல்ல முடியாது' என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

'மோதிக்கு எதிரான அலை'

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தோல்வியை தழுவியது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம், பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த திட்டத்தால் தமிழ்நாட்டில் மோதிக்கு எதிரான அலை வீசியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

"ஒரு முறை அரசியல் எதிர்ப்பு அலை உருவாகிவிட்டால் அந்த அலைக்கு எதிராக யாரும் நீந்த முடியாது. அந்த அலையோடு சென்றவர்கள்தான் வென்று இருக்கிறார்கள்," என்றார்.

'காஷ்மீர்'

"காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது" என்றார்.

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய போது, "நாடாளுமன்றத்தில் நீங்கள் (அமித் ஷா) காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆற்றிய உரை, அற்புதம். இப்போது அனைவருக்கும் அமித் ஷா யாரென்று தெரிந்திருக்கும். அதில் எனக்கு மகிழ்ச்சியே," என்றார்.

“காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” - ரஜினிகாந்த்

இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை பகிர்ந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்