அமெரிக்காவும் சீனாவும் சண்டையிட்டால் தமிழகம் ஏன் தடுமாறுகிறது?

us china trade war படத்தின் காப்புரிமை Eblis / getty

'சில்லென்ற கோவை' என்று உள்ளூர்வாசிகள் பெருமைப்படும் கோயம்புத்தூரில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் மனங்கள் இப்போது பொருளாதார மந்தநிலையால் தகிக்கின்றன.

கோவையில் இருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் உலகின் வேறு இருநாடுகளில் நடக்கும் பொருளாதார மோதல், மேற்குத் தமிழகத்தின் தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் வாழ்விலும் எதிரொலிக்கிறது.

இங்குள்ள தொழிலார்களில் பிகார், மேற்கு வங்கம், ஒடிஷா போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கணிசமாக உள்ளனர் என்பதால் பாதிப்புகள் மேலும் நீள்கின்றன.

"கோவைக்கு நான் வேலைக்கு வந்து 10 ஆண்டுகள் இருக்கும். வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாய விடுப்பு கொடுக்கப்படுகிறது. மாதத்தில் எட்டு நாட்கள் வேலை இல்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னை நம்பி என் குடும்பம் இருக்கிறது. ஐந்து வயதில் எனக்கு ஒரு மகன் இருக்கிறான். நான்கு மாதங்களாக என்ன செய்வதென்றே தெரியவில்லை."

பிகாரின் ஜமூய் மாவட்டத்தில் இருந்து கோவைக்கு புலம்பெயர்ந்து வந்து நூற்பாலை ஒன்றில் வேலை செய்யும் பிரகாஷ், பிபிசி தமிழிடம் கூறிய வார்த்தைகள் இவை.

Image caption பிரகாஷ், நூற்பாலைத் தொழிலாளி: கட்டாய விடுப்பால் வேலை இல்லை.

"இதுவரை வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே விடுப்பு இருந்தது. இப்போது மாதத்துக்கு 10 நாட்கள் கட்டாய விடுப்பு என்பது சாதாரணமாகிவிட்டது. நான் இங்கு வந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வளவு மோசமான சூழ்நிலையை கண்டதில்லை," என்றார் மேற்கு வங்கத்தில் இருந்து வந்து கோவையில் வேலை பார்க்கும் ரோகித் குமார்.

இந்திய ஜவுளித் துறையின் பிரச்சனை என்ன?

இந்தியாவின் நூல் உற்பத்தி கணிசமான அளவு ஏற்றுமதிகளைச் சார்ந்துள்ளது. அதனால், ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் எதாவது பிரச்சனை என்றால் இங்கு பாதிப்பு எளிதாகிறது. ஏற்றுமதியை அதிகம் சாராமல் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்வதும் அவ்வளவு சுலபமாக இல்லை.

இந்திய ஜவுளிச் சந்தையின் பெரும் பங்கை தங்கள் வசம் வைத்திருக்கும் பெரு நிறுவனங்கள் வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து கொள்முதல் செய்கின்றன.

காரணம் வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யும் சரக்குகளுக்கான குறைந்த வரி. இந்திய உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது அவை குறைந்த விலையில் கிடைக்கின்றன.

பணமதிப்பு நீக்கத்தால் ஜவுளியின் சில்லறை வர்த்தகத்தில் நாடு முழுதும் உண்டான பாதிப்பு உற்பத்திச் சங்கிலியின் கண்ணிகளாக இருக்கும் நூற்பாலைகள் முதல் நெசவாளர்கள் வரை எதிரொலித்தது.

அடுத்து அமலான சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜி.எஸ்.டி) கீழ் வெவ்வேறு வகை நூல் மற்றும் துணி வகைகளுக்கு வெவ்வேறு வரி விகிதம் விதிக்கப்பட்டது வரி செலுத்துதல் மற்றும் வரிவிலக்கு / கூடுதலாக செலுத்திய வரிகளைத் திரும்பப் பெறுதல் ஆகியவற்றில் சிக்கலை உண்டாக்கியது. அதாவது ஒரே வகை ஆடையைத் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரி விகிதம்.

அடுத்ததாக ஆண்டாண்டு காலமாகத் தொடரும் பஞ்சுப் பதுக்கல். பஞ்சு நூலாகி, நூல் துணியாகி, துணி ஆடையாகத் தைக்கப்பட்டு சந்தைக்கு வர இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகின்றன. இந்த மூன்று மாத காலத்தில் பஞ்சின் விலை குறைந்துவிட்டால், ஆடை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பஞ்சின் தற்போதைய சந்தை மதிப்பிலேயே துணி மற்றும் ஆடைகள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இதன் காரணமாக பஞ்சுப் பதுக்கலைத் தவிர்த்து, அதை எப்போதும் சந்தையில் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் கிடைக்கச் செய்தால் நூற்பாலைகள் முதல் நெசவாளர்கள் வரை இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

கோவையைச் சுற்றி நிகழும் இந்தப் பிரச்சனைகளின் மையம் கோவையில் இல்லை என்பதுதான் இவற்றுக்கான தீர்வுகளைப் பெறுவதில் சிக்கலை உண்டாக்குகிறது.

அமெரிக்க - சீன வர்த்தகப் போர்

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்தது.

அந்தப் பட்டியலில் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளும் அடக்கம்.

ஏற்கனவே பஞ்சுப் பதுக்கல், அதனால் உண்டான் பஞ்சு விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் இந்திய ஜவுளித் துறைக்கு, இங்குதான் கூடுதல் பிரச்சனை உண்டானது.

சீனா ஆடை உற்பத்திக்கு இந்தியாவில் இருந்து கணிசமான அளவு நூல் இறக்குமதி செய்து வந்தது.

இறக்குமதியை நிறுத்திய சீனா

தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்ததால், சீனா அங்கு தனது ஆடை உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதை குறைத்துக்கொண்டது.

ஏற்றுமதியை குறைத்துக்கொண்டதால், உற்பத்தியும் குறைந்தது. ஆடை உற்பத்தியை சீனா குறைத்துக்கொண்டதால், நூலின் தேவையும் குறைந்தது.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் நூலின் அளவையும் குறைத்துக்கொண்டது சீனா. அதனால் இந்திய நூற்பாலைகளில் உற்பத்திகள் தேங்கத் தொடங்கின.

நூற்பாலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் பிபிசி தமிழுக்கு அளித்த தகவலின்படி, இந்தியா ஏப்ரல் மாதம் முதல் சுமார் 30% அளவுக்கு அதிகமான நூல் உற்பத்தி செய்துள்ளது.

சீனா இறக்குமதியை குறைத்துக்கொண்டபின் ஏற்றுமதி செய்வதற்கும் சேர்த்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நூலின் அளவுதான் இந்த 30%.

கட்டாய விடுப்பு - கலங்கும் தொழிலாளர்கள்

உள்நாட்டுத் தேவைகள் போக இந்த 30% நூல், ஏற்றுமதியைக் கருத்தில்கொண்டு கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டது என்பதால் அவற்றை உள்நாட்டுச் சந்தைகளில் உடனடியாக விற்பனை செய்ய இயலாது. காரணம் தேவையைவிட இங்கு உற்பத்தி அதிகம்.

இந்த சங்கிலித் தொடர் பாதிப்புகளின் காரணமான, இந்திய நூற்பாலைகள் இப்போது உற்பத்தியைக் குறைத்துள்ளன. இதன் விளைவு, ஆலைகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் கட்டாய விடுப்பு.

ஆலை நிறுவப்பட்டு பல பத்தாண்டுகளாக தொடர்ந்து வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்பட்ட நூற்பாலைகள் தற்போது வேறு வழியில்லாமல் வாரத்துக்கு இரண்டு - மூன்று நாட்கள் செயல்படாமல் இருக்கின்றன.

நாளின் 24 மணி நேரமும் இயக்கப்பட்ட ஆலைகள், 16 மணி நேரம் மட்டுமே இயக்கப்படுகின்றன.

பதுக்கல் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவின் பஞ்சு விலை சர்வதேச அளவை விட அதிகமாக இருப்பதால், இந்திய ஆடை உற்பத்திகள் விலையும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சர்வதேச ஏற்றுமதி என்று வரும்போது வங்கதேசம், வியட்நாம் போன்ற பிற ஆடை உற்பத்தி நாடுகளுடன் போட்டியிடுவதால் இந்தியாவுக்கு சிக்கல் உண்டாகிறது.

"இந்தியாவில் தேங்கும் தயாரிப்புகளை அப்படியே ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக, மதிப்புக்கு கூட்டல் செய்து வேறு உற்பத்திப் பொருட்களாக மாற்றி, ஏற்றுமதி செய்தால் அவற்றின்மூலம் இந்தியாவுக்கு கிடைக்கும் அந்நியச் செலாவணி 10 மடங்கு அதிகரிக்கும். அதற்கான மூலப் பொருட்கள் எளிதில் மட்டுமல்லாது குறைவான விலையிலும் கிடைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். அவர்களும் அதற்கு ஆவன செய்வதாகக் கூறியுள்ளனர்," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கோவையில் உள்ள ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி. அருள்மொழி.

மாற்று வழி என்ன?

இந்தியாவில் தற்போது தயாரிக்கப்படும் ஆடைகளில் சுமார் 70% அளவுக்கு பருத்தியை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. 30% அளவுக்கு மட்டுமே செயற்கை நூலிழையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன என்கிறார் அருள்மொழி.

Image caption அருள்மொழி

செயற்கை நூலிழை மூலம் தயாரிக்கப்பட்ட ஆடைகளின் சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்கு தற்போது 4 - 5% மட்டுமே. செயற்கை நூலிழை உற்பத்தியை அதிகரிப்பதில் நாம் கவனம் செலுத்தினால் உள்நாட்டில் நூல் தேங்குவதைத் தவிர்ப்பதுடன், செயற்கை நூலிழை நூல்கள் மற்றும் ஆடைகளுக்கான சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்கை இப்போது உள்ள அளவைவிட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரிக்கவும் முடியும் என்கிறார் அருள்மொழி.

ஆனால், அது நிகழ்வது ஒன்றும் அவ்வளவு எளிதாகத் தெரியவில்லை. உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கில், இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் வரி (anti-dumping duty) செயற்கை நூலிழை செய்யப் பயன்படும் பாலிஸ்டர், விஸ்கோஸ் போன்ற மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ளதால், அவை கட்டுப்படியாகும் விலைக்கு கிடைப்பதில்லை.

சமீப ஆண்டுகளில் ஜவுளி ஏற்றுமதிக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்பட்டதும் இன்னொரு பாதிப்பாக உள்ளது.

ஜி.எஸ்.டி விகிதத்தை சீராக்குவது, பஞ்சுப் பதுக்கலை ஒழிப்பது, மூலப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவற்றுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால், செயற்கை நூலிழை சார்ந்த ஜவுளி உற்பத்திக்கான மடைமாற்றம் இந்தியாவில் எளிதாகும்.

உலக அளவில் ஜவுளித் துறையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு செயற்கை நூலிழையின் பங்கு இருக்கும் சூழலில் இந்தியா அதை நோக்கி மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்காமல், வேகமான பாய்ச்சலைத் தொடங்க சாதகமான சூழலை எதிர்நோக்கியுள்ளது இந்திய ஜவுளித் துறை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :