நரேந்திர மோதி vs இம்ரான் கான்: ஐ.நாவில் யாருடைய உரை சிறப்பாக இருந்தது?

நரேந்திர மோதி vs இம்ரான் கான் படத்தின் காப்புரிமை Getty Images

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74வது கூட்டத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் உரையாற்றினர்.

இந்த உரைகளை இந்திய மற்றும் பாகிஸ்தான் மக்கள் மட்டுமல்ல, பிற நாடுகளின் மக்களும், அரசியல் ஆய்வாளர்களும் எதிர்பார்த்திருந்தனர்.

பாகிஸ்தானை குறிப்பிட்டு சொல்லாமல் உலக அமைதி மற்றும் தீவிரவாதத்தின் பிரச்சனைகள் பற்றிப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவின் சாதனைகளை உலக நாடுகளின் முன்னால் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்த சர்வதேச தளத்தில் இந்தியாவைக் குற்றஞ்சாட்டி பேசினார்.

இந்த சர்வதேச தளத்தில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய இம்ரான் கான், இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் மூண்டால் உலக நாடுகளில் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துசொல்லி எச்சரித்தார்.

சர்வதேச பிரச்சனைகள் பற்றி மட்டுமே பேசிவிட்டு, நரேந்திர மோதி பாகிஸ்தான் பிரச்சனை பற்றி ஏன் பேசவில்லை?

இம்ரான் கான் அதற்கு எதிர்மாறாக செயல்பட்டார். காஷ்மீரைப் பற்றி பேசிய அவர், நாட்டின் பிற பிரச்சனைகள் பற்றி ஏன் பேசவில்லை?

இந்த இரு தலைவர்களும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய உரைகளின் முக்கிய கருத்துக்களை புரிந்துகொள்வதற்காக அமெரிக்காவிலுள்ள டெலாவேர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முக்தேதர் கான், அமெரிக்காவுக்கான இந்தியாவின் தூதராக பணியாற்றிய நவ்தேஜ் சர்னா மற்றும் பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் ஹரூன் ரஷித் ஆகியோருடன் பிபிசி பேசியது.

நரேந்திர மோதியின் உரை - முக்தேதர் கான் கருத்து

இந்தியப் பிரதமர் பேசியதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால், உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதை உலக நாடுகளுக்கு நினைவூட்டியதுதான்.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி அதிக ஆதரவு பெற்றிருந்ததால், உலகிலேயே அதிக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்று தன்னை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

வறுமையை ஒழித்தல் மற்றும் பருவநிலை மாற்றச் செயல்பாடுகள் ஆகியவற்றில் உலக நாடுகளுக்கு இந்தியாவின் செயல்பாட்டை விரைவில் வெளிப்படுத்த இருப்பதாக நரேந்திர மோதி பேசினார்.

இந்தியா நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சில அரசு கொள்கைகளை அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

ஆனால், காஷ்மீர் பிரச்சனையில், இந்தியாவுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பற்றி நரேந்திர மோதி பேசவில்லை.

படத்தின் காப்புரிமை ANI

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கின்ற சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததைத் தொடர்ந்து அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பற்றியும் அவர் உரையாற்றவில்லை.

இந்தியா குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள் தொடர்பாக, எந்த உறுதியையும் அவர் உலக நாடுகளுக்கு வழங்கவில்லை.

தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில் உலக நாடுகள் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய நரேந்திர மோதி, உலக அமைதியையும், சகோதரத்துவத்தையும் பேணிக்காக்க வேண்டும் என்றார்.

பாரதிய ஜனதா கட்சியினரால் இந்தியாவின் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் பற்றியும் நரேந்திர மோதி எதையும் கூறவில்லை.

உலக நாடுகளுக்கு அமைதியையும், சகோதரத்துவத்தையும் பற்றி எடுத்துக்கூற வேண்டுமென்றால், அத்தகைய மதிப்பீடுகளைச் சொந்த நாட்டில் செயல்படுத்தி, எல்லா சமூகங்களும் இணக்கமாக வாழும் கொள்கைகளை அமலாக்குவதே சிறந்த வழியாக இருக்கும்.

இந்தியப் பொருளாதாரம் சரிவை எதிர்கொண்டு வருவதைப் பற்றியும் நரேந்திர மோதி எதையும் பேசவில்லை.

அவர் அமலாக்கம் செய்கின்ற கொள்கைகள், நிலைமையை மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிடவில்லை.

சமீப காலமாக இந்தியாவில் செய்யப்படும் நிதி முதலீடுகள் குறைந்துள்ளன. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, சர்வதேச நிறுவனங்களுக்கும் கவலை ஏற்படுத்தும் விடயமாகும்.

இந்திய பொருளாதாரம் இயல்புக்கு திரும்பும் என்று உறுதி அளிப்பதற்கு நல்லதொரு வாய்ப்பாக நரேந்திர மோதிக்கு இந்த தருணம் அமைந்திருந்தது. ஆனால், அவர் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீவிர விவாதங்கள் நடைபெற்றன. பிரான்ஸ், சீனா, ரஷ்ய தலைவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்க உலக நாடுகள் விரும்பின.

இந்தப் பின்னணியில், உலகப் பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி முயலவில்லை. அவரது உரையின் தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை போல பேசுவதற்கு முற்பட்டதாக தோன்றியது.

நரேந்திர மோதி தன்னையே புகழந்து கொண்டிருந்தார். பெருமளவிலான பொது மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக அவர் பேசினார். அது மட்டுமல்ல, தனது சாதனைகளையும் அடுக்கினார்.

அவருடைய தொகுதியில் பேசுகிற பேச்சு போல எனக்கு தோன்றியது.

உலக நாடுகளுக்கு இந்தியா வழிகாட்டுவதாகச் சுட்டிக்காட்ட கிடைத்த சிறந்ததொரு வாய்ப்பை நரேந்திர மோதி சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்.

நரேந்திர மோதியின் உரை - நவ்தேஜ் சர்னா கருத்து

பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரையில், வளர்ச்சி பிரச்சனைகளில் கவனம் செலுத்தினார். தனது பதவிக் காலத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தெரிவித்து, அவற்றைப் பற்றி உலக நாடுகளுக்கு தெரிவிக்க விரும்பினார்.

பொது மக்களின் பங்கேற்பால் ஏற்படும் நேர்மறை விளைவுகள், இந்தியாவின் வளர்ச்சியில் ஒருமித்த எண்ணம் ஆகியவை பற்றி நரேந்திர மோதி பேசியதோடு, ஐக்கிய நாடுகளின் சிந்தாந்தத்தோடு, இந்தியாவின் கொள்கைகள் ஒத்துப்போவதை குறிப்பிட்டு காட்டினார்.

இந்த சித்தாந்தத்தை மனதில் கொண்டு உலகப் பிரச்சனைகள் மற்றும் சவால்களின் போது எடுக்கின்ற நிலைபாடுகளில் இந்தியா உறுதியோடு உள்ளது. பருவநிலை மாற்றம் பற்றி பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

இந்தியா கணிசமான மாசுபாட்டை ஏற்படுத்தாவிட்டாலும், நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அதிகரித்துள்ளது,

சூரிய எரிசக்திக்கு சர்வதேச கூட்டணிகள் உருவாக்கப்படவில்லை. பேரிடர் குறைப்பு உள்கட்டுமானங்களை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஐநா பொது சபையின் கருத்துக்கு ஏற்ற உரை

அமைதி மற்றும் அகிம்சை வழியில் இந்தியா நடைபோடுகிறது என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி நடவடிக்கைகளில் முன்னணியில் செயல்படுவதோடு, தியாகங்களைச் செய்வதில் இருந்து ஒருபோதும் விலகிச் செல்லவில்லை என்றும் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

தீவிரவாதம் உலக அளவில் மனிதக்குலத்திற்கு எதிரான சவாலான பிரச்சனையாக இருப்பதால், இதற்கு எதிராக இந்தியா குரல் கொடுக்கிறது என்றும் மோதி கூறினார்.

இத்தகைய சவாலுக்குத்தான் உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென தெரிவித்த அவர், தீவிரவாதத்திற்கு உதவி அளித்து அல்லது ஆதரவு அளிக்கும் நாடு பாகிஸ்தான் என்று குறிப்பிட்டு சொல்வதை தவிர்த்துவிட்டார்.

தீவிரவாதம் மனிதகுலத்தின் சவால், பிராந்திய பிரச்சனையல்ல என்று மாண்பு குறையாமல் பேசிய நரேந்திர மோதி, உலக சவால் என்பதால், அதனை தடுத்து ஒழிக்கச் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்பதை விவரித்தார்,

படத்தின் காப்புரிமை Getty Images

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை பற்றி அவர் பேசவேயில்லை. காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா கூறிவிட்டதால், இது பற்றி நரேந்திர மோதி ஐநாவில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படவும் இல்லை.

மகாத்மா காந்தியின்150வது பிறந்த ஆண்டு கொண்டாடப்படும் வேளையில், அவரிடம் இருந்தும், "இணக்கம் மற்றும் அமைதி" என்ற சுவாமி விவேகானந்தாவின் 125 ஆண்டுகால பழம்பெரும் செய்தியில் இருந்தும் தூண்டுதல் பெற்று இந்தியா செயல்பட்டு வருவதாக பிரதமர் மோதி தெரிவித்தார்.

"வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, பருவநிலை நடவடிக்கை மற்றும் அமைப்பாக பலதரப்பு முயற்சிகளை மேம்படுத்துதல்" என்பது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74வது அமர்வின் தலைப்பாகும்.

இந்த தலைப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் உரை சரியாகப் பொருந்தியிருந்தது,

இந்தியாவின் வளர்ச்சி சர்வதேச சமூகத்தால் பகிரப்படும் ஒன்று என்றும், இதனால் பிற வளர்ச்சி நாடுகள் இந்த மாதிரியை பின்பற்றலாம் என்றும் மோதி விளக்கினார்.

படத்தின் காப்புரிமை Google

இம்ரான் கான் உரை - ஹரூன் ரஷித் பார்வை

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார்.

இதற்கு முன்னால் பேசி வந்த கருத்துக்களையே அவர் பேசினார். இருப்பினும், இந்த முறை இதனை சொன்ன தளம் உலக நாடுகள் தீவிரமாக எடுத்துக் கொள்கின்ற சர்வதேச தளமாக இருந்ததுதான் வித்தியாசம்.

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் உருவாகுமானால், அதனால் இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்ல, உலக நாடுகள் பாதிக்கப்படும் என்று இம்ரான் கான் பேசினார். உலக நாடுகளை அச்சுறுத்தும் தொனியில் அவர் பேசியுள்ளார்.

இந்த கூற்றுகள் தொடர்பாக சர்வதேச சமூகமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ இது தொடர்பாக ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

காஷ்மீர் பிரச்சனை பற்றி இம்ரான் கான் ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய விதம் பாகிஸ்தான் முழுவதும் வெகுவாக பாராட்டப்படுகிறது.

"இம்ரான் கான் தனது பணியில் வெற்றியடையவில்லை"

படத்தின் காப்புரிமை Getty Images

இம்ரான் கான் தனது உரையின் நோக்கங்களைப் பெறுவதில் வெற்றியடையவில்லை. காஷ்மீரில் அவசரக்காலச் சட்டத்தை முடிவுக்கு வர வேண்டுமென அவர் பேசினார்.

13 ஆயிரம் கஷ்மீரி இளைஞர்களை இந்தியா கைதுசெய்து வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டிய இம்ரான் கான், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரினார்,

இவர் பேசிய ஓரிரு நாட்களில் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமானால், இவரது உரை வெற்றியடைந்துவிட்டதாக கருதலாம். ஆனால், அதற்கு வாய்ப்பு குறைவுதான்.

உரையாற்றுவதாலோ, கோபத்தை வெளிக்காட்டுவதாலோ, அச்சுறுத்தல் விடுப்பதாலோ எதையும் சாதிக்க முடியாது. உங்களின் கூற்றுகளை சர்வதேச சமூகம் எவ்வாறு பார்க்கிறது என்பதில்தான் எல்லாம் அடங்கியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தப் பிரச்சனையில் அமெரிக்கா மட்டுமே பங்காற்ற முடியும் என்பதுதான் இதுவரை தெளிவாக தெரிகிற விடயமாகும்.

ஆனால், இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எவ்வித பக்கச் சார்பையும் எடுக்கவில்லை. அவர் பாகிஸ்தான், இந்தியா ஆகிய இருநாடுகளையும் மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார்.

அமெரிக்க அதிபரின் அணுகுமுறை இப்படியே இருக்குமானால், இந்தியாவுக்கு எதிராக பிற நாடுகள் நடவடிக்கைகளை எடுக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது.

'விமர்சிக்கும் எதிர்க்கட்சி'

ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரைகளைக் கேட்டுள்ள மக்கள், பாகிஸ்தானில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்றபோது இம்ரான் கான் இவற்றைப் பேசியிருக்கலாம். ஐக்கிய நாடுகள் சபையில் அவர் இவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்கின்றனர்.

காஷ்மீர் பிரச்சனை, சர்வதேச பிரச்சனைகளான பருவநிலை மாற்றம் மற்றும் முஸ்லிம்கள் என்றாலே பயம் என்கிற அளவில் மட்டுமே அவரது பேச்சு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அனைவரும் கருதுகின்றனர்.

ஆனாலும், சிலவேளைகளில் ஊழல் பற்றி அவர் குறிப்பிட்டார். ஆனால், பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சனைகளை இம்ரான் கான் ஐக்கிய நாடுகள் சபையில் பேசியிருக்க கூடாது என்று எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது.

பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சனைகள் பற்றி அவர் அதிகமாக பேசவில்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சர்தாரி அல்லது நவாஸ் ஷெரிப் ஆகியோர் பற்றி இம்ரான் கான் குறிப்பிடவில்லை என்பதில் எதிர்க்கட்சிகளுக்கும் மகிழ்ச்சியே.

அவரது குடும்ப சிக்கல்களை பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் அவர் பேசவில்லை என்பதால் சிலர் ஆறுதல் அடைந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :