பாஜக வேட்பாளர் தமிழ்செல்வன்: மஹாராஷ்டிராவின் ஒரே தமிழ் எம்எல்ஏ மீண்டும் வெல்வாரா?

கேப்டன் தமிழ்செல்வன்

வரவிருக்கும் அக்டோபர் 21-ஆம் தேதியன்று நடைபெறவுள்ள மஹாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில், மும்பையில் உள்ள சயன் கோலிவாடா சட்டமன்ற தொகுதியில் தமிழரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கேப்டன் தமிழ்செல்வன் மீண்டும் களமிறங்குகிறார்.

மும்பையின் சயன் கோலிவாடா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2014 சட்டமன்ற தேர்தலில் வென்ற தமிழ்செல்வன், மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒரே தமிழ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

மீண்டும் வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்த தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார்.

கடந்த முறை பாஜக சார்பில், இந்த தொகுதியில் போட்டியிட்ட தமிழ்செல்வன், நான்குமுனை போட்டியில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மராத்தியர்கள், தமிழர்கள், குஜராத்தி இன மக்கள், வட இந்தியர்கள் என பலர் வாழும் சயன் கோலிவாடா சட்டமன்ற தொகுதியில் மும்பை தமிழ் சங்கம், தமிழ் பள்ளி உள்ளிட்ட தமிழர்கள் சார்ந்த முக்கிய இடங்கள் உள்ளன.

மும்பையில் தமிழர்களின் நிலை, இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் அரசியல் வியூகங்கள் மற்றும் தனது வெற்றிவாய்ப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பிபிசி தமிழிடம் தமிழ்செல்வன் பேசினார்.

''கடந்த 1970களின் இறுதியில் நான் மும்பைக்கு வந்தபோது இருந்த நிலை வேறு. தற்போதுள்ள நிலை வேறு. ஆனால் ஒரு விஷயம் மட்டும் மாறவில்லை. அன்றும், இன்றும், என்றும் நாடு முழுவதிலும் இருந்து வரும் எண்ணற்ற மக்களின் பசியாற்றும், வேலைவாய்ப்பு வழங்கும் நகராக மும்பை இருந்து வருகிறது,'' என்று தமிழ்செல்வன் குறிப்பிட்டார்.

தந்தை கம்யூனிஸ்ட் - மகன் பாஜக

''என் தந்தை ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்தார். அப்போதுதான் சமூக சேவையில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அப்படித்தான் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு முதலில் தோன்றியது,'' என்று அவர் நினைவுகூர்ந்தார்.

'ஒன்பது ரூபாய்க்கு எனது முதல் பணியில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்ட நான், பிறகு சிறுதொழிலில் ஈடுபட்டேன். அதன்மூலம் நானே பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடிந்தது'' என்று தமிழ்செல்வன் குறிப்பிட்டார்.

''எனது 14,15 வயது முதல் நான் மும்பையில் வாழ்ந்து வருகிறேன். எனக்கு ஆரம்பம் முதலே பாஜகவில் ஈடுபாடு இருந்தது. கட்சியின் சாதாரண உறுப்பினராக இருந்த எனக்கு மக்களிடையே இருந்த தொடர்பு மற்றும் என பணிகளை பார்த்து கட்சி அங்கீகரித்ததால்தான் தற்போது என்னால் சட்டமன்ற உறுப்பினராக ஆக முடிந்தது.''

''மும்பையில் முதல்முறையாக தமிழர் ஒருவருக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது எனக்குதான்'' என்று கூறிய தமிழ்செல்வன், ''மராத்தி, மராத்தி அல்லாதவர்கள் என்று பார்க்காமல், கட்சி எனக்கு முன்பும், தற்போதும் வாய்ப்பு வழங்கியது எனது சமூக சேவை செயல்பாடுகளும், மக்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளும்தான்'' என்று மேலும் கூறினார்.

''என் தொகுதி மட்டுமல்ல மற்ற தொகுதிகளை சேர்ந்த தமிழர்களுக்கும் என்னாலான உதவிகளை தொடர்ந்து செய்து வந்துள்ளேன். தாராவியில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டபோது எட்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த சாலை மறியல் போராட்டங்களில் நானும் கலந்து கொண்டேன்,'' என்று குறிப்பிட்டார்.

''என் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல, மும்பை தமிழர்களுக்கு ஆதரவாகவும் பலமுறை சட்டமன்றத்தில் நான் பேசியுள்ளேன். தாராவி சீரமைப்பு திட்டம் குறித்து பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளேன்'' என்று தமிழ்செல்வன் மேலும் கூறினார்.

மும்பையில் தமிழர்களுக்கு எதிரான மனநிலை உள்ளதா?

''நான் மராத்தி இனத்தை சேர்ந்தவன் இல்லை என்றபோதும், முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் எனது மக்கள் நலப்பணிக்கு முக்கியத்துவம் தந்து மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளார். பாஜகவும் இன, மொழி பாகுபாடுகள் பார்ப்பதில்லை. எங்கள் கட்சியின் சார்பாக இஸ்லாமியர்களுக்கும் மாநகராட்சி தேர்தல் உள்பட பல தேர்தல்களில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது'' என்று தமிழ்செல்வன் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமித் ஷாவுடன் தேவேந்திர பட்நாவிஸ் (கோப்புப்படம்)

கடந்த 60 மற்றும் 70களில் மும்பையில் சிவசேனா கட்சி தமிழர்களுக்கு எதிரான சில நிலைப்பாடுகளை மேற்கொண்டது குறித்தும், தற்போது அந்த கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இருப்பது குறித்தும் கேட்டபோது, ''ஆரம்பத்தில் தமிழர்கள் மற்றும் தென்னியந்தர்களுக்கு எதிரான சில நடவடிக்கைகளில் சிவசேனா ஈடுபட்டது. தற்போது இங்கு நிலை வெகுவாக மாறிவிட்டது,'' என்று தெரிவித்தார்.

''ஆரம்ப காலத்தில் தமிழர்கள் மும்பையில் அதிகம் இருந்தாலும், தமிழர்களின் அரசியல் செயல்பாடு குறைவாக இருந்தது. ஆனால் தற்போதைய நிலை முற்றிலும் மாறிவிட்டது.''

''ராஜ் தாக்கரே ஒருவர் மட்டும்தான் இன்னமும் மராத்தி அல்லாதவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வைத்து வருகிறார். அதனால் அவரின் கட்சி மக்களிடையே செல்வாக்கு இழந்துவிட்டது'' என்று தமிழ்செல்வன் மேலும் கூறினார்.

தனது வெற்றிவாய்ப்பு பற்றி கேட்டதற்கு பதிலளித்த அவர், ''நிச்சயம் எனக்கு வெற்றிவாய்ப்பு பலமாக உள்ளது. அதேபோல் மாநில அளவில் பாஜக - சிவசேனா கூட்டணிக்கும் சிறப்பான வெற்றிவாய்ப்பு உள்ளது. நிச்சயம் எங்கள் கூட்டணி 250 இடங்களுக்கு மேல் வெல்லும்,'' என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை ANI

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் தொடர்ந்து அண்மைக் காலமாக அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து வரும் நிலையில், தங்கள் கட்சியை உடைக்க பாஜக சதி செய்வதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

இது குறித்து பேசிய தமிழ்செல்வன், ''பாஜக மற்ற கட்சிகளை உடைக்கத் தேவையில்லை. மிகவும் வலுவாக உள்ள கட்சி மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர். சிறந்த கட்சி, தலைமையின் ஆளுமை செயல்பாடு போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு அவர்களாகவே பாஜக வசம் வருகின்றனர்,'' என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்