நரேந்திர மோதி - ஷி ஜின்-பிங் சந்திப்பு: மாமல்லபுரத்தில் நடப்பதற்கு காரணம் என்ன?

மாமல்லபுரம் படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய பிரதமர் நரேந்திரமோதியும், சீன அதிபர் ஷி ஜின்-பிங்கும் அக்டோபர் 11-13ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர். இந்தச் சந்திப்பிற்கு மாமல்லபுரம் ஏன் தேர்வுசெய்யப்பட்டது?

சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச் சென்றால் 62 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது மாமல்லபுரம். பல்லவர் காலத்தைச் சேர்ந்த யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களான குடைவரைக் கோயில்கள், ஒற்றைக் கல் ரதம், அற்புதமான புடைப்புச் சிற்பங்களுக்குப் பெயர்போன மாமல்லபுரம், தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று.

மாமல்லபுரத்தில் எங்கே இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும், எந்தெந்த இடத்தை முக்கியப் பிரமுகர்கள் பார்வையிடுவார்கள் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இருந்தபோதும் கடற்கரைக் கோயில்கள், அர்சுனன் தபசுச் சிற்பம், கிருஷ்ணரின் வெண்ணை உருண்டை ஆகியவற்றை அவர்கள் பார்வையிடக்கூடும் எனத் தெரிகிறது. இதற்கேற்றபடி, அர்ஜுனன் தபசு சிற்பத்தை ஒட்டி நடந்துவந்த பராமரிப்புப் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்படுத்தப்பட்டுவருகின்றன. 16.5 சதுர கி.மீ. பரப்புள்ள அந்த ஊர் முழுவதும் சாலைகள் சீரமைக்கப்பட்டுவருகின்றன. அந்த ஊரில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மாமல்லபுரத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. கடலில் அலைச்சறுக்கு விளையாட்டிற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் 4ஆம் தேதியிலிருந்தே கடலுக்குச் செல்ல வேண்டாமெனக் கூறப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 20ஆம் தேதியே சீனத் தூதரக அதிகாரிகள் மகாபலிபுரத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் புதன்கிழமையன்று மாமல்லபுரம் சென்று அங்கு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்துள்ளனர். இது தொடர்பான விரிவான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமையன்று சென்னையில் நடக்கவிருக்கிறது.

மாமல்லபுரம்

ஒரு சுற்றுலாப் பயணியாகவும் வரலாற்றில் ஆர்வமுடையவராகவும் செல்வோருக்கு மாமல்லபுரத்தில் பார்ப்பதற்கு நிறையவே உண்டு.

வராக மண்டப குடைவரை:

இங்குள்ள வராக மண்டப குடைவரைக் கோயில், அற்புதமான சிற்பங்களைக் கொண்டது. இங்கு வராக மூர்த்தியின் சிற்பம் உள்ளதால் இது வராக மண்டபக் குடைவரை என்று அழைக்கப்பட்டாலும் நரசிம்மருக்காக அமைக்கப்பட்டது என்ற கருத்தும் உண்டு.

படத்தின் காப்புரிமை Getty Images

இரண்டு முழுமையான தூண்களும் சுவற்றோடு ஒட்டிய இரண்டு அரைத் தூண்களும் இங்கே உண்டு. இங்குள்ள கருவறை உள்நோக்கி இருக்காமல், துருத்திக்கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மண்டபத்தின் வடக்குச் சுவரில் பூமா தேவியைத் தாங்கி நிற்கும் வராகமூர்த்தியின் சிற்பம் காணப்படுகிறது.

அர்ச்சுனன் தபசு புறவழி புடைப்புச் சிற்பம்:

அருச்சுனன் தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் மிகப் பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி இங்குள்ள தலசயனப் பெருமாள் கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. சுமார் முப்பது மீட்டர் வரை உயரமும் சுமார் 60 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சிற்பத் தொகுதி அர்ச்சுனன் தபசு என்று பாகீரதன் தவம் என்றும் இருவேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.

ரதக் கோவில்கள்:

பொதுவாக பஞ்ச பாண்டவர் ரதக் கோவில்கள் என்று அழைக்கப்படும் இந்தக் கோயில்கள், நிலத்தில் துருத்திக்கொண்டிருந்த பாறைகளைச் செதுக்கி ஒரே வரிசையில் அமைக்கப்பட்ட கோவில்களாகும். மகாபாரதத்தின் முதன்மைப் பாத்திரங்களுக்காக அமைக்கப்பட்ட கோவில்கள் என பலர் கூறினாலும், அவர்களது உருவங்கள் இல்லாததால், சிவன், திருமால், கொற்றவை ஆகியோருக்காக அமைக்கப்பட்ட கோவில்கள் என்றும் இவற்றைக் கூறுவதுண்டு. ஒவ்வொரு கோவிலும் வெவ்வேறுவிதமான பாணியில் அமைக்கப்பட்டிருப்பது இந்தக் கோவில் தொகுதியின் சிறப்பு.

கடற்கரைக் கோவில்கள்:

மாமல்லபுரம் என்றதும் நினைவுக்குவரும் இரு கோயில்கள்தான் இந்த கடற்கரைக்கோயில்கள். இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. 2004ல் தமிழக கடற்கரைப் பகுதிகளை சுனாமி தாக்கியபோது இந்தக் கோயிலுக்குள்ளும் நீர் புகுந்தது. ஆனால் பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை. கோயிலின் கர்ப்பகிரகத்தில் சிவலிங்கம் இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்நாட்டில் உள்ள மூன்று யுனெஸ்கோ பாரம்பரியத் தலங்களில் மகாபலிபுரமும் ஒன்று.

"தமிழகத்தின் கலாச்சாரப் பரப்பில் மகாபலிபுரத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. செங்கல்கள், மரம் ஆகியவற்றால் கட்டப்பட்ட கோயில்கள் மறைந்து முழுக்கவும் கல்லால் கோயில்கள் கட்டப்பட்ட ஆரம்பித்தது மகாபலிபுரத்திற்குப் பிறகுதான்" என்கிறார் தமிழ் மரபு அறக்கட்டளையைச் சேர்ந்த ஆர். கோபு.

மாமல்லபுரத்தில் பொதுவாகப் பார்க்கவேண்டிய இடங்களாகப் பட்டியலிடப்படுபவை, பஞ்சபாண்டவர் ரதங்கள், அர்ச்சுனன் தபசு சிற்பம், கடற்கரைக்கோயில், கிருஷ்ணனின் வெண்ணை, குடைவரைக்கோயில்கள் ஆகியவை. "இந்தியாவின் பல இடங்களில் குகைக் கோயில்கள் உண்டு. அதேபோல புறவழி புடைப்புச் சிற்பங்கள் உண்டு, கட்டுமானக் கோயில்கள் உண்டு. ஆனால், இவை எல்லாம் ஒரே இடத்தில் இணைந்திருப்பது நாட்டிலேயே மகாபலிபுரத்தில் மட்டும்தான்" என்கிறார் ஆர். கோபு.

மாமல்லபுரம் என்றும் அழைக்கப்படும் மகாபலிபுரம் கி.பி. 630 முதல் 680வரை ஆட்சி செய்த முதலாம் நரசிம்மவர்மப் பல்லவனின் காலத்தில் கட்டப்பட்ட நகரமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தப் பணிகள் அவனது காலத்தில் முடியவில்லை; அவனது சந்ததிகளான இரண்டாம் மகேந்திரவர்மன் மற்றும் பரமேஸ்வரவர்மனின் காலத்தில்தான் முடிவடைந்தன என்றும் சொல்லப்படுவதுண்டு.

இந்தச் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடத்தப்படுவது ஏன்?

தமிழ்நாட்டில் இதுபோல இரு பெரும் தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்முறை. இந்தியாவின் வெளியுறவுத் துறை வரைபடத்தில் தமிழ்நாட்டிற்கு தற்போது முக்கியத்துவம் கொடுப்பதற்கு என்ன காரணம்? இந்திய வெளியுறவுத் துறை இது தொடர்பாக வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இதற்கு முன்பாக கடந்த 2018 ஏப்ரல் மாதம் 27-28ஆம் தேதிகளில் ஹுபெயில் பிரதமர் நரேந்திர மோதியும் ஷி ஜிங்-பிங்கும் சந்தித்துப் பேசினர். 2017ல் டோக்லாமில் ஏற்பட்ட மோதல் நிலைக்குப் பிறகு, இந்தச் சந்திப்பின்போதுதான் இரு தரப்பு உறவுகள் சீரடைந்தன. ஹுபெய் சந்திப்பிற்குப் பிறகு, இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவது இப்போதுதான்.

"தற்போது இந்தியாவைப் பொறுத்தவரை சார்க் நாடுகளைவிட வங்காள விரிகுடா கடலை ஒட்டியுள்ள நாடுகளில் கவனம் செலுத்த விரும்புகிறது. மேலும் வங்காள விரிகுடாக் கடலில் தன் ஆதிக்கத்தைக் காண்பிக்கவும் விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாகவே வங்கக் கடலை ஒட்டிய பகுதியை பேச்சுவார்த்தைக்குத் தேர்வுசெய்திருக்கிறது. இதற்கு முன்பாக இங்கு நடந்த டிஃபன்ஸ் எக்ஸ்போ, தமிழகத்தில் அமைக்கத் திட்டமிட்டிருந்த டிஃபன்ஸ் காரிடார் ஆகியவை இதனையே சுட்டிக்காட்டுகின்றன" என்கிறார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் புதிய வல்லரசு சீனா நூலின் ஆசிரியருமான ஆழி. செந்தில்நாதன்.

ஆனால், இந்தக் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன். "இது முழுக்க முழுக்க அரசியல். தமிழகத்தை எப்படியாவது கவர நினைக்கிறது பா.ஜ.க. அதன் ஒரு பகுதிதான் இது. செல்லும் இடங்களில் எல்லாம் பிரதமர் தமிழில் பேசவதும், தமிழைப் புகழ்வதும் அதற்காகத்தான். மற்றபடி ராஜதந்திர ரீதியாக இந்தச் சந்திப்பை தமிழ்நாட்டில் நடத்த எந்த முக்கியத்துவமும் இல்லை" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

இந்தியா வங்கக் கடலில் தன் ஆதிக்கத்தை காட்ட நினைத்தால் கடற்படைத் தலைமையகம் உள்ள விசாகப்பட்டினத்தில் இதை நடத்தியிருக்கலாம். பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்துவதற்கே வட மாநிலங்களில் எதிர்ப்பு இருக்கும் என்பதால், தென்னிந்தியாவில் நடத்தலாம். இதுபோன்ற காரணங்கள் ஏதுமே இல்லாமல் இங்கு நடத்தப்படுவது, தமிழகத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று காட்டவே என்கிறார் ராதாகிருஷ்ணன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :