இந்தியாவிலேயே அசுத்தமான ரயில் நிலையங்கள்: தமிழகம் முதலிடம்

நாட்டிலேயே அசுத்தமான ரயில் நிலையங்கள்: தமிழகம் முதலிடம் படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "நாட்டிலேயே அசுத்தமான ரயில் நிலையங்கள்: தமிழகம் முதலிடம்"

இந்தியாவில் அசுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் தமிழகத்தின் ஆறு ரயில் நிலையங்கள் இடம் பெற்று உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்தியா முழுவதும் உள்ள 720 ரயில் நிலையங்களில் மேற்கொண்ட ஆய்வின்படி, தூய்மையான ரயில் நிலையங்களில் முதல் பத்து இடங்களை பிடித்த ரயில் நிலையங்களை ரயில்வே அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.

இதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் முதலிடத்தையும் ஜோத்பூர் இரண்டாவது இடத்தையும் துர்காபுரா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து முறையே, அடுத்தடுத்த இடங்களை ஜம்முதாவி, காந்தி நகர், சூரத்கர், விஜயவாடா,உதய்பூர் நகரம், அஜ்மீர், ஹரித்வார் ஆகிய ரயில் நிலையங்கள் பிடித்துள்ளன. முதல் பத்து இடங்களில் ராஜஸ்தானில் மட்டும் ஏழு ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Getty Images

நாட்டிலேயே மிகவும் மோசமான நிலையில் அசுத்தமாகக் காணப்படும் பட்டியலில் முதல் பத்து இடங்களில் தமிழக ரயில் நிலையங்களே ஆறு இடங்களைப் பெற்றுள்ளன. சென்னை பெருங்களத்தூர் முதலிடத்தையும், கிண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து முறையே, டெல்லி சடார் பஜார், மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த வேளச்சேரி, கூடுவாஞ்சேரி. சிங்கப்பெருமாள் கோவில், பழவந்தாங்கல் ஆகியவையும் கேரள மாநிலம் ஒட்டப்பாலம், பிகாரை சேர்ந்த அராரியா கோர்ட், உத்தர பிரதேசத்தை சேர்ந்த குர்ஜா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன," என்று அந்த செய்தி விவரிக்கிறது.

தினமணி: "புவி காந்த மண்டலத்தையும் ஆய்வு செய்கிறது சந்திரயான்-2"

நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆா்பிட்டா், புவி காந்த மண்டலம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தகவல் வெளியிட்டுள்ளதாக தினமணியின் செய்தியின் தெரிவிக்கிறது.

"இந்த புவி காந்த மண்டலம்தான், விண்வெளி எரிகற்கள் மற்றும் பிற தாக்கங்களிலிருந்து பூமியை வேலியாகப் பாதுகாத்து வருகிறது. சூரியனிலிருந்து தொடா்ச்சியாக வெளிவரும் எலெக்ட்ரான்ஸ், புரோட்டான் மற்றும் பிற தனிமங்கள் புவியின் ஈா்ப்பு விசையால் ஈா்க்கப்பட்டு, அண்ட வெளியில் புவியைச் சுற்றி 22,000 கி.மீ. தொலைவு தூரத்துக்கு புவி காந்த மண்டலமாக உருவாகி நிற்கிறது.

அண்டைவெளியிலிருந்து வரும் துகள்கள், எரிகற்கள், கதிா்களிலிருந்து இந்த காந்த மண்டலம்தான் பூமியை வேலியாகப் பாதுகாத்து நிற்கிறது. இந்த புவி காந்த மண்டலம் பூமியின் சுற்றளவைப் போல மூன்று முதல் நான்கு மடங்கு தூரத்துக்கு புவியை சுற்றி உருவாகியிருக்கும். அதன் காரணமாக, புவியின் துணைக் கோளான நிலவையும் தாண்டி இந்த புவிகாந்த மண்டலம் அமைந்திருக்கும்.

அதன் காரணமாக, 29 நாள்களுக்கு ஒரு முறை இந்த புவிகாந்த மண்டலத்தை நிலவு கடந்து செல்லும். அவ்வாறு கடந்துசெல்ல 6 நாள்கள் எடுத்துக்கொள்ளும். எனவே, நிலவை சுற்றிவந்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 ஆா்பிட்டரில் இருக்கும் கருவிகளும், கேமராவும் இந்த புவிகாந்த மண்டலம் குறித்தும் ஆய்வு செய்து தகவல்களைத் தரும்" என இஸ்ரோ தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை: "தென்மேற்கு பருவக்காற்று விலகத் தொடங்குவதில் தாமதம்"

படத்தின் காப்புரிமை NASA

இந்திய வானிலை ஆய்வு மைய வரலாற்றில் இல்லாத வகையில் தென்மேற்கு பருவக் காற்று விலகத் தொடங்குவது தாமதமாகியுள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை இயல்பை ஒட்டியே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வடகிழக்கு பருவ மழை பொழிய தென்மேற்கு பருவக் காற்று விலக வேண்டும். அது தற்போது தாமதமாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 148 ஆண்டுகால வானிலை வரலாற்றில் இல்லாத தாமதமாகும்.

கடந்த 50 ஆண்டுகால தரவுக ளின் சராசரி அடிப்படையில் தென்மேற்கு பருவக்காற்று வழக்க மாக ராஜஸ்தான் பகுதியில் இருந்து செப்டம்பர் 1-ம் தேதி வாக் கில் விலகத் தொடங்கும். பின்னர் படிப்படியாக டெல்லி, ஆந்திரா என விலகி, தமிழகத்தில் விலகும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி வாக்கில்தான், ராஜஸ் தானில் இருந்து விலகக் தொடங் கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 1961-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதியும் 2007-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதியும் விலகத் தொடங்கியதே அதிகபட்ச தாமதமாக உள்ளது. இப்போது விலக இருப்பது, இந்திய வானிலை ஆய்வு மைய வரலாற்றில் இல்லாத தாமதமாகும்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்