"நீட் ஆள் மாறாட்டம் வியாபம் ஊழலைப் போன்றது" - மருத்துவர்; "தமிழக யோசனையை கேட்கிறது தேசியத் தேர்வு வாரியம்" - அமைச்சர்

நீட் படத்தின் காப்புரிமை Hindustan Times

மருத்துவ படிப்பிற்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வான நீட் வேண்டாம் என்று போராடிய தமிழகம், தற்போது நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க பயோமெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்த நீட் தேர்வில் தேர்வர்கள் சிலர் தங்களுக்குப் பதிலாக வேறொருவரை தேர்வெழுத வைத்து மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்த விவகாரம் ஊடகங்களில் வெளியான பிறகு, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க என்னென்ன செய்யலாம் என தேசிய தேர்வு முகமையிடம் தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

செப்டம்பர் மாத இறுதியில், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது முதலாமாண்டு படிக்கும் உதித்சூர்யா, தனக்குப் பதிலாக வேறொருவரை நீட் தேர்வு எழுதவைத்து மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றார் என்ற குற்றச்சாட்டு ஊடகங்களில் வெளியான பிறகு, உதித் சூரியா கைதானார்.

தொடர்ந்து அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன், ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட வேறு மூன்று மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கைதாகியுள்ளனர். ஒரு மாணவர் தனக்கு பதிலாக தேர்வு எழுதுவதற்கு ரூ.20லட்சம் வரை முகவரிடம் தந்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீட் தேர்வை முறைப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி?

உண்மையான தேர்வர்கள் ஒரு நகரத்திலும், போலியான தேர்வர்கள் வேறு நகரத்திலும் தேர்வெழுதியுள்ளதால் இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் தமிழக மருத்துவ மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர், தேர்ச்சி பெற்று படித்துவருபவர்கள் உண்மையான மாணவர்களா என சிபிசிஐடி விசாரித்துவருகிறது.

ஆள்மாறாட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்துவரும் நிலையில், இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க, மாணவர்களின் லைவ் புகைப்படங்களை பயன்படுத்துவது, ஆதார் தரவுகளில் உள்ள பயோ மெட்ரிக் தகவல்களை, அந்த லைவ் புகைப்படத்தை கொண்டு சரிபார்ப்பது என்ற யோசனையை தமிழக அரசு தேசிய தேர்வு முகமையிடம் முன்வைத்தது.

பிபிசி தமிழிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் "ஆதார் பயோமெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்தி மாணவர்களின் தகவல்களை சரிபார்ப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த அக்டோபர் 9-ம் தேதி வருமாறு தேசிய தேர்வு முகமை அழைப்பு விடுத்துள்ளது" என தெரிவித்தார்.

''தமிழகத்தில் நீட் தேர்வில் மாணவர்கள் செய்த முறைகேடுகள் தொடராமல் இருக்க பயோமெட்ரிக் முறையை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். இந்நிலையில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளோடு கலந்துபேச எங்களை அழைத்துள்ளனர். இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களின் தகவல்களை ஒவ்வொரு கல்லூரியிலும் சரிபார்த்துள்ளோம். அடுத்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையில் எந்த குளறுபடிகளும் இருக்காது,''என்றார் அமைச்சர்.

''பயோமெட்ரிக் மட்டுமே தீர்வல்ல''

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உதித் சூர்யா

நீட் முறைகேடு தொடர்பான வழக்கில் அரசு அதிகாரிகளின் உதவியில்லாமல் மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை என சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது குறித்து கேட்டபோது, ''முழு மூச்சுடன் அரசாங்கம் புலனாய்வு செய்துவருகிறது. அரசு அதிகாரிகளுக்கு பங்குள்ளதா என இப்போது கருத்து தெரிவிக்கமுடியாது,'' என்றார் அவர்.

இந்த ஆண்டு ஆள்மாறாட்டம் நடந்தது வெளியில் தெரிந்துள்ளதால் நடவடிக்கை பாய்கிறது, இதற்கு முந்தைய ஆண்டுகளில், தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இதுபோல நடந்திருந்தால் அந்த தவறுகளுக்கு அரசு எந்தவகையில் தீர்வு கண்டுபிடிக்கும் என கேள்வி எழுப்புகிறார் சமூக ஆர்வலர் மற்றும் மருத்துவர் ரவீந்திரநாத்.

''நீட் முறைகேடு தொடரக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்வது வரவேற்கதக்கது. ஆனால் இந்த பிரச்சனை தமிழகத்தில் மட்டும் நடந்தது என்று உறுதியாக தெரியாத நிலையில் இருக்கிறோம். ஏற்கனவே தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பலத்த எதிர்ப்பு உள்ளது. மருத்துவக் கல்விக்கான இடம் ஒதுக்குவதில் ஊழல் ஒழிக்கப்படும், நேர்மையாக தேர்வு நடத்தி, முறையாக இடம் ஒதுக்கப்படும் என்று கூறி நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. விசாரணை இந்திய அளவில் நடந்தால் பிரச்சனை பூதாகரமாக உருவெடுக்கும். இதனால், மத்திய அரசு விசாரணையை தமிழக அளவில் முடிக்கவேண்டும் என எண்ணுகிறது,''என்கிறார் ரவீந்திரநாத்.

பயோமெட்ரிக் மட்டுமே நீட் பிரச்சனைக்கு தீர்வல்ல. உண்மையான பிரச்சனை, மருத்துவப் படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என்பதுதான் என்கிறார் ரவீந்திரநாத்.

''மருத்துவப் படிப்புக்கான இடங்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், எந்த வகையிலாவது அதனை அடைந்துவிடவேண்டும் என மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் மருத்துவர்கள் இல்லாத நிலையில், அரசாங்கம் ஏன் மருத்துவப் படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தக்கூடாது?'' என்று கேட்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.

வியாபம் ஊழல் போன்றது நீட் முறைகேடு

2013ல் இந்தியாவில் பரவலான கவனத்தைப் பெற்ற வியாபம் ஊழல் போன்றதுதான் நீட் ஊழல். பலரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்கிறார் ரவீந்திரநாத்.

மத்தியப் பிரதேசத்தில் அரசு கல்லூரிகளில் இடம் பெறுவதற்கும், அரசு வேலைகளைப் பெறுவதற்கும் அரசு நடத்தும் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்து எழுதவைப்பது, காப்பியடித்து தேர்வு எழுதுவதற்கு வசதியாக தேர்வு இருக்கையை மாற்றிக்கொள்வது என பலவிதமான முறைகேடுகள் நடந்தன. இதில் ஆயிரக் கணக்கானவர்கள் மீது வழக்குப் பதிவானது. அரசு அதிகாரிகள், முகவர்கள், அமைச்சர் என பலருக்கும் இந்த வழக்கில் தொடர்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. வழக்கில் சம்பந்தப்பட்ட பலர் மர்மமாக இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Getty Images

நீட் முறைகேடு சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்

நீட் தேர்வு முறைகேடுகள் வெறும் ஒரு மாநிலத்தை மட்டும் பாதிக்கும் சம்பவம் அல்ல என்றும் சர்வதேச நாடுகளில் மருத்துவத்தில் பட்டமேற்படிப்பு படிக்க இந்திய மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல்களை இது ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார் கல்வியாளர் தா.நெடுஞ்செழியன்.

''இந்திய மாணவர்கள் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படிக்க நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். அந்த தேர்வை எழுத விண்ணப்பிக்க வேண்டும் எனில், இந்தியாவில் உள்ள அங்கீகாரம் கொடுக்கப்பட்ட வெகு சில கல்லூரிகளில் படித்த மாணவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். தொடர்ந்து முறைகேடுகள் நடந்தால், அங்கீரம் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது. இதனால் பல்லாயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள்,''என்கிறார்.

நீட் நுழைவுத் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களை சோதனை செய்ததில் காட்டிய அக்கறையை, மருத்துவ சீட் வழங்குவதில் பின்பற்றவில்லை என்ற நெடுஞ்செழியன், மாணவர்கள் மத்தியில் தேவையற்ற பயத்தை அரசாங்கம் உருவாக்குகிறது என்கிறார்.

''நுழைவுத் தேர்வின் முடிவுகளை 2013ம் ஆண்டு வெளியிட்டதைப் போல, ஒரு மாணவர் இந்திய அளவில் எந்த ரேங்க் பெற்றார், அதே மதிப்பெண் தமிழக அளவில் எந்த ரேங்க் என்ற விவரங்களை வெளியிட்டால் ஆள்மாறாட்டம் நடைபெறுவதை பெருமளவு குறைக்கலாம்,'' என்கிறார் நெடுஞ்செழியன்.

''நீட் தேர்வால் பலியா அனிதா''

மாணவர்கள் இந்த விவகாரத்தில் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்துகொள்ள நீட் தேர்வு எழுதி தற்போது மருத்துவம் படித்துவரும் மாணவர்களிடமும் பிபிசி தமிழ் பேசியது.

பலரும் கடும் உழைப்பால் தற்போது படிக்கவந்துள்ளதாகவும், சிலர் போலி ஆசாமிகளை வைத்து கல்லூரிகளில் சேர்வது தங்களது நம்பிக்கையை குலைக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் பயின்றுவரும் மாணவி ரஞ்சனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேசும்போது, ''என்னுடன் நீட் தேர்வுக்குத் தயாரான மூன்று தோழிகளும் 12ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், மருத்துவப் படிப்பிற்கு தேவையான கட் ஆஃப் மதிப்பெண் குறைவாக இருந்ததால் தேர்வாகவில்லை. நீட் தேர்வில் தோல்வியை தழுவிய என் தோழிகள், முறைகேட்டில் சீட் பெற்றவர்கள் தங்களது இடங்களை எடுத்துக்கொண்டதாக நினைக்கிறார்கள். பின்தங்கிய கிரமங்களிலிருந்து கடும் சிரமத்திற்கு மத்தியில் படிக்கும் எங்களிடம் காட்டும் கெடுபிடிகளை சிறிதேனும் தவறு செய்பவர்களை தடுப்பதில் அரசாங்கம் காட்டவேண்டும்,'' என்கிறார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர் ரமேஷ், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை என்கிறார். ''அரியலூர் மாணவி அனிதா 12ம் வகுப்பில் 1176/2000 பெற்றபோதும், நீட் தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் குறைந்ததால், மருத்துவப் படிப்புக்கும் இடம் கிடைக்கவில்லை. இதனால் தற்கொலை செய்துகொண்டார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் மூன்று மாணவிகள் இது போல இறந்துள்ளனர். மருத்துவப் படிப்பிற்கு மாணவர்கள் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கும்போது, அரசாங்கம் இதனை ஏன் அக்கறையுடன் நடத்தவில்லை,'' என வினவுகிறார்.

''காலம் தாழ்த்தாமல் இந்த வழக்கு நடத்தப்பட்டு, இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படவேண்டும். ஏன் இந்த விசாரணை சிபிஐக்கு மாற்றப்படக்கூடாது? நம் மாநிலத்தில் நடந்திருந்தாலும், பிற மாநில முகவர்களின் தொடர்பு இதில் இருப்பதால் சிபிஐ விசாரணை இருந்தால், இந்த வழக்கு மேலும் முக்கியத்துவம் பெறும்,'' என்கிறார் மாணவர் ரமேஷ்.

இதுவரை கைதான மாணவர்கள் ஒருபுறம் இருக்க, விசாரணையில் இதுவரை தெரியவந்த தகவல்களை தெரிந்துகொள்ள சிபிசிஐடி அதிகாரிகளை தொடர்புகொண்டோம். பிற மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி மையங்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர்களை இணைத்த முகவர்கள் யார் யார் என்றும், தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்தது யார் என்றும் விசாரித்துவருவதாக அவர்கள் தெரிவித்தனர். விசாரணை நடந்துவருவதால் பிற விவரங்களை தெரிவிக்கமுடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்