சரண்யா: யாசகர்கள், முதியவர்கள் மீது வெளிப்படுத்தும் அதீத அன்பு - ஒரு நம்பிக்கை விதை விருட்சமான கதை #IamtheChange

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
யாசகர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சரண்யா

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் இரண்டாம் அத்தியாயம் இது.)

உதவும் கரங்கள் பிரார்த்தனை செய்யும் உதடுகளைக் காட்டிலும் சிறந்தது என்பார்கள், இதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் சரண்யா.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியான சரண்யா சாலைகளில் ஆதரவற்று இருக்கும் முதியவர்களுக்கு தன் குழுவுடன் உதவி செய்து வருகிறார்.

பாட்டி மீது வைத்த அன்பு…

எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சரண்யா தனது பாட்டி மீது வைத்திருந்த அதீத அன்பால் தற்போது ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவி செய்து வருவதாகக் கூறுகிறார்.

"எனது அம்மாவைக் காட்டிலும் எனது பாட்டி மீது நான் அதீத அன்பு வைத்திருந்தேன். திடீரென ஒருநாள் அவர் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார் அன்றிலிருந்து முதியவர்களைப் பார்த்தால் என் பாட்டியின் ஞாபகம்தான் எனக்கு வரும்." என்கிறார் சரண்யா.

நாம் சரண்யாவைச் சந்திக்கச் சென்றபோது, தன் குழுவுடன் ஆதரவற்ற முதியவர் ஒருவரை மீட்கப் போவதாகச் சொன்னார்.

நாம் தினமும் இம்மாதிரியான ஒரு முதியவரையாவது சாலையோரங்களில் கடந்து செல்கிறோம். அவர்களுக்காக வருத்தப்படுவோம், முடிந்தால் அவர்களுக்குக் காசு கொடுப்போம். ஆனால் அவருக்கு மறுவாழ்வு தருவது குறித்தோ, அவரை மீட்க வேண்டும் என்பது குறித்தோ பொதுவாக யாரும் சிந்திப்பதில்லை. ஆனால், தன்னுடைய குழுவுடன் சேர்ந்து தயங்காமல் இந்த பணியை தன்னால் இயன்றவரைச் சிறப்பாகச் செய்து வருகிறார் சரண்யா.

யாசகர்களுக்கு மறுவாழ்வு…

தனது பகுதியில் அட்சயம் என்னும் அமைப்பு யாசகர்களுக்கு உதவி செய்து வருவது குறித்துக் கேள்விப்பட்ட சரண்யா, தானும் அதில் இணைய விரும்பி தனது குடும்பத்தினரிடம் அனுமதி கேட்டுள்ளார்.

பெற்றோரும் இதற்குச் சம்மதம் தெரிவிக்க, மகிழ்ச்சியுடன் தனது பணியைத் தொடங்கியுள்ளார் சரண்யா.

அடியும் விழும்…

அட்சயம் அமைப்பில் சேர்ந்தவுடன் பல யாசகர்களை மீட்க முடிந்ததில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறும் சரண்யா, யாசகர்களை மீட்பதில் உள்ள சவால்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"யாசகம் பெறுபவர்களில் பலர் தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். அவர்களை மீட்பது சவாலானது. குறிப்பாக சில நேரங்களில் எங்களைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயல்வார்கள். அந்த சமயங்களில் சில நேரம் அடியும் விழும்." என்கிறார்.

இவ்வாறு யாசகர்களை மீட்க வேண்டும் என்றால் பல சமயங்களில் அது ஒரே நாளில் முடிவதில்லை என்கிறார் சரண்யா.

"யாசகர்களை மீட்பது என்பது ஒரே நாளில் நடக்கும் காரியம் கிடையாது. ஒவ்வொருவரையும் குறைந்தது 10 நாட்களாவது பின் தொடருவேன். அவர்களின் உண்மையான நிலையைத் தெரிந்துகொள்ள இது உதவும்." என்கிறார் அவர்.

இந்த சேவையில் எத்தனை சவால்கள் இருந்தாலும், அது அனைத்தும் நன்மைக்கு எனத் தாங்கிக் கொள்வதாகக் கூறுகிறார் சரண்யா.

பெண்களை மீட்பதற்கு இந்த சேவையில் பல பெண்கள் தேவை என்பதால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைக்க அவர்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களிடம் பேசி, தன்னைப் போல மேலும் பல மாணவிகளை இந்த சேவையில் பங்கு கொள்ளச் செய்துள்ளார் சரண்யா.

ஒருமுறை முதியவர் ஒருவர் சரண்யாவிடம் காசு கேட்க, தான் பேருந்து செல்வதற்காக வைத்திருந்த ஐந்து ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார் சரண்யா ஆனால் அடுத்த நாள் அவர் அதே இடத்தில் மீண்டும் காசு கேட்டுக் கொண்டிருந்தார் அவரை தொடர்ந்து கண்காணித்ததில் அவர் போதை பழக்கத்திற்காகக் காசு கேட்பது தெரியவந்துள்ளது. பின் அவரை ஒரு காப்பகத்தில் சேர்த்ததாக சரண்யா தெரிவித்தார்.

தங்களால் மீட்கப்படுபவர்களுக்கு குடும்பம் இருப்பது தெரிந்தால், குடும்பத்தோடு சேர்க்க முயல்வோம். இல்லையென்றால் அவர்களைக் காப்பகத்துக்கு அனுப்புவோம் என்கிறார் சரண்யா.

முதல் அத்தியாயத்தைப் படிக்க:உத்தரப் பிரதேச பெண் தருமபுரி நதியை மீட்கும் கதை

முதல் அத்தியாயத்தைக்காண:

எடுத்துக்காட்டாக….

சரண்யாவின் பெற்றோர் சிறுவயதிலிருந்து கடுமையாக உழைப்பவர்கள், சரண்யாவின் ஒரு தம்பிக்குப் பிறவியிலிருந்து கால் நடக்க முடியாமல் போய்விட்டது.

இந்த கடினமான சூழலிலும், தனது படிப்பைத் தொடர்ந்து கொண்டே பகுதி நேரத்தில் பணிபுரிந்தும் வருகிறார் சரண்யா.

எத்தனையோ நாட்கள் சாப்பாடு இல்லாமல் தூங்கியதும் உண்டு என்று கூறும் சரண்யாவைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.

தான் வாழும் பகுதியில் உள்ள இளம் பெண்களுக்கு உத்வேகமளிக்ககூடியவராக திகழும் சரண்யா, சாலைகளில் யாசகம் கேட்பவர்கள் நன்றாக வாழ்வதைப் பார்ப்பதில் அத்தனை சந்தோஷமாக இருக்கும் என இயல்பாகக் கூறி மீண்டும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்