சிங்கப் பெண்: தொடரும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் - கத்தியால் குத்தப்பட்டபோதும் போராடி நகையை மீட்ட தனலட்சுமி

கத்தியால் குத்தப்பட்டபோதும் போராடி நகையை மீட்ட ‘சிங்கப் பெண்’ படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்புக்காக

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில், பறிக்க வந்தவரிடம் தப்பிய மிகச் சிலரில் ஒருவர் பூந்தமல்லியைச் சேர்ந்த 50 வயது தனலட்சுமி.

சங்கிலி பறிப்பு சம்பவங்களில் பாதிக்கப்படும் பெரும்பாலான பெண்கள் காயமடைந்து, அச்சத்தில் உறைந்து போகும் சிசிடிவி காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. இரண்டு சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க வந்தவரிடம் போராடி தனலட்சுமி சாதுரியமாக தனது நகையை மீட்டுள்ளார்.

சுமார் பத்து நிமிடங்கள் தன்னைத் தாக்கியபடியே சங்கிலியை பிடுங்க முயன்ற நபரின் கையை வளைத்துப் பிடித்த தனலட்சுமி, தனது பிடியை இறுக்கியபடி,உதவிக்காக கத்தியுள்ளார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர் கத்தியால் தனலட்சுமியின் கையில் குத்தியபோதும், ரத்தம் வழியும் நேரத்தில், அவரை தள்ளி தனது சங்கிலியை மீட்டுள்ளார்.

''ஹெல்மெட் அணிந்து வந்த நபர் என்னிடம் விலாசம் கேட்டபோது, உதவும் நோக்கத்தில் வழி சொன்னேன். நான் சொல்லிமுடிப்பதற்குள், அந்த நபர் சங்கிலியை இழுத்தார். கத்தியால் குத்தியபோதும் அஞ்சாமல் சத்தம்போட்டேன். அருகிலிருந்தவர்கள் உதவியால் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தோம். என் சங்கிலியை மீட்டேன்,'' என்று பிபிசி தமிழிடம் கூறினார் தனலட்சுமி.

ஹெல்மெட்டை பார்த்தாலே அச்சம்

டி.வி. சீரியல் நிறுவனங்களுக்கு உணவு சமைத்துகொடுக்கும் வேலை செய்துவரும் தனலட்சுமி பல ஆண்டுகளாக ஆசைப்பட்டு வாங்கிய தங்கத் தாலி சங்கிலி அது. சேதமான நிலையில் அந்த சங்கிலி கிடைத்தது. ''இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் வாங்கினேன். இரண்டு மகள்களுக்காக கஷ்டப்பட்டு உழைத்து அவர்களை கரைசேர்த்துவிட்டு, எனக்காக இப்போதுதான் தாலிக் கொடி வாங்கினேன். இந்த திருட்டு சம்பவத்தால், காயம் ஏற்பட்டது மட்டுமின்றி எனக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுவிட்டது. ஹெல்மெட் அணிந்து யாரவது வந்தால் பயமாக உள்ளது,'' என்கிறார் தனலட்சுமி.

சங்கிலி பறிப்பு சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்திருந்தாலும், அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை என்கிறார் தனலட்சுமி. ''போராடி நகையை வாங்கிவிட்டேன். ஆனால் அந்த சம்பவத்தால் காவல்நிலையம், நீதிமன்றம் சென்றேன். ஒரு வார காலம் வேலைக்கு போகமுடியவில்லை. காயமான கையால் வேலை செய்யமுடியவில்லை. மருத்துவ செலவு, சம்பளம் இல்லாமல் இருந்த வேலைநாட்கள் என சுமார் ரூ.20,000 வரை எனக்கு நஷ்டம்,''என்கிறார் தனலட்சுமி.

மன உளைச்சலில் இருக்கும் தனலட்சுமிக்கு ஓர் ஆறுதல் காவல்துறை அதிகாரிகள் அவரை பாராட்டி ஊக்கத்தொகை அளித்துள்ளனர் என்பதுதான். ''எனக்கு பெருமையாக இருந்தது. நகை சேதமானது, காயம் ஆறிவிட்டது. என் முயற்சிக்கு கிடைத்த பாராட்டு ஒரு மனஆறுதலை தருகிறது. சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை தரப்படவேண்டும்,'' என்றார் அவர்.

படத்தின் காப்புரிமை Getty Images

சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர் குறித்து கேட்டபோது, சிறையில் இருப்பதாக தெரிவித்த காவல்துறையினர் அவர் ஜாமீன் கேட்டு மனு போட்டுள்ளார் என்றனர்.

சங்கிலி பறிப்பில் நகையைப் பறிகொடுத்த பல பெண்கள் காவல்துறையிடம் புகார் அளிக்கிறார்கள். திருட வந்த நபர் தப்பித்து ஓடிவிடும் வேளையில் அவரை பிடிக்க எவ்வளவு காலம் ஆகும், பொருட்கள் திரும்ப கிடைக்கின்றனவா என தெரிந்துகொள்ள காவல்துறை அதிகாரிகளை சந்தித்தோம்.

"குறைந்துவரும் சங்கிலி பறிப்பு"

சங்கிலி பறிப்பில் ஈடுபடுபவர்கள் உடனடி பணத் தேவைக்காக திருடுகிறார்கள் என்றும், அவர்களில் 20-30 சதவீதம் பேர் ஜாமீனில் வந்தால் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார் சென்னை நகர காவல்துறையின் கூடுதல் ஆணையர்(சட்டம் ஒழுங்கு) பிரேமானந் சின்ஹா.

''வழக்கின் தன்மையை பொறுத்து ஜாமீன் வழங்கப்படும். சங்கிலி பறிப்பு போன்ற திருட்டுகளில் வெளி வருபவர்கள் மீண்டும் திருட்டுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. முதல்முறை திருட்டில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டவர்கள் ஜாமீனில் வந்ததும், ஒழுங்காக நடந்துகொள்ளவேண்டும் என அச்சத்துடன் இருப்பார்கள். குறைந்தபட்சம் பத்து நாட்கள் விசாரணைக்கு பிறகு அவர்கள் நீதிமன்றம் சென்று, பின்னர் ஜாமீனில் வருவதால், தவறு செய்ய அஞ்சுவார்கள். தொடர் திருட்டுகளில் ஈடுபடுபவர்கள் குறைவு என்றாலும், அவர்கள் ஆபத்தானவர்கள்,''என்கிறார் பிரேமானந் சின்ஹா.

சென்னை நகரம் முழுவதும் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதால் திருட்டுகளில் ஈடுபடுபவர்களை உடனடியாக பிடிக்க முடிகிறது என்றும் சிசிடிவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன என்றும் கூறுகிறார் அவர்.

''கடந்த ஆண்டில் நடந்த சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் சுமார் பாதியளவாகக் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் சுமார் 55 சங்கிலி பறிப்பு சம்பவங்கள் சென்னையில் நடந்துள்ளன. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 21 ஆக குறைந்துள்ளது. சங்கிலி பறிப்பில் ஈடுபடுபவர்கள் செல்லும் பாதையை சிசிடிவி மூலம் தெளிவாக பார்த்து பிடித்துவிடுகிறோம். சிசிடிவி இருப்பதால் ஹெல்மெட் அணிந்து திருடினால் கூட அந்த நபர் செல்லும் பாதை, அவர் பயன்படுத்திய வண்டி ஆகியவற்றை வைத்து விரைவாக பிடித்துவிடுகிறோம்,''என்கிறார் பிரேமானந் சின்ஹா.

சென்னை நகரத்தை பொறுத்தவரை வடமாநில நபர்கள் திருடும்போது, திருடிவிட்டு உடனே அவர்கள் மாநிலத்திற்குச் செல்ல முயற்சிப்பார்கள் என்பதால் அண்டை மாநிலங்களுக்கு ரயில் செல்லும்போது சோதனை செய்து பிடிக்கவும் சிசிடிவி காட்சிகள் உதவியுள்ளன என்கிறார் அவர். ''சமீபத்தில் ஹைதிராபாத்தில் சுமார் 100 வழக்குகளில் சிக்கியுள்ள ஈரானிய கொள்ளையர்கள் தியாகராய நகர் மற்றும் அண்ணா நகர் பகுதியில் சங்கிலி பறிப்பு மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகள் இருந்ததால், அவர்கள் ஒரு மணிநேரத்தில் பிடிபட்டனர்,''என்கிறார் அவர்.

கடல் பாசி எனும் பொக்கிஷத்தைத் தேடி கடலில் இறங்கும் தமிழ் பெண்கள் | Rameswaram women sea divers

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்