மாமல்லபுரத்தில் நடக்கும் மோதி- ஷி ஜின்பிங் சந்திப்பு தொடர்பான முக்கிய அம்சங்கள் என்ன?

மாமல்லபுரம் படத்தின் காப்புரிமை Soumya Sumitra Behera

இவ்வார இறுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சென்னைக்கு அருகிலுள்ள வரலாற்றுத் தலமான மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசவிருப்பதையடுத்து, அங்கு சீரமைப்பு பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசவிருக்கின்றனர். இந்த வருகையின்போது மாமல்லபுரத்தில் உள்ள முக்கியான வரலாற்றுச் சின்னங்களையும் சீன அதிபர் பார்வையிடவிருக்கிறார்.

வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் சுமார் ஒன்றரை மணியளவில் சென்னை வந்து இறங்கும் சீன அதிபர் சனிக்கிழமையன்று பிற்பகல் வரை சென்னையில் தங்கவுள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் சென்னை வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங், மாலை ஐந்து மணியளவில் மாமல்லபுரத்தில் உள்ள கலாசாரச் சின்னங்களை பிரதமருடன் இணைந்து பார்வையிடுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அவர்கள் எந்தெந்த இடங்களைப் பார்வையிடுவார்கள் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதங்கள், கடற்கரைக் கோவில்கள் ஆகிய மூன்று இடங்களையும் பார்வையிடுவார்கள் எனத் தெரிகிறது. அதற்கேற்றபடி, இப்போது அந்த இடங்கள் மூன்றும் சிறப்புப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

திங்கட்கிழமைவரை, கடும்கட்டுப்பாட்டுடன் இந்த இடங்களைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுவந்த நிலையில் செவ்வாய்க்கிழமையிலிருந்து இந்த மூன்று இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இதற்குப் பிறகு கடற்கரைக் கோவிலை ஒட்டியுள்ள பகுதியில் கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு இரவு விருந்தும் அங்கே நடக்கும். இதில்தான் தமிழக அரசைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளக்கூடும்.

சனிக்கிழமையன்று காலையில், இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் தனியே சந்தித்துப் பேசுவார்கள். அதற்குப் பிறகு அதிகாரிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடக்கும். இந்தப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் சீன அதிபருக்கு மதிய விருந்து அளிப்பார். அதற்குப் பிறகு சீன அதிபர் விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் செல்வார்.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

இதற்கு முன்பாக வெளிநாட்டுத் தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருந்தாலும் இதுபோல இரு நாட்டுத் தலைவர்கள் ராஜீய ரீதியாக தமிழகத்தில் சந்திப்பது இதுவே முதல் முறை.

இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமலிருக்கும் பொருட்டு, காவல்துறை கடுமையான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை முதல் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஊர் முழுவதுமே சாலைகள் அனைத்தும் புதிதாகப் போடப்பட்டுள்ளன. நடைபாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மின்கம்பங்கள் போன்ற பொதுக் கட்டமைப்புகள் அனைத்திற்கும் வண்ணம் தீட்டப்பட்டிருக்கிறது.

மாமல்லபுரம் மிகப் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், அங்குள்ள வரலாற்று கலாச்சாரச் சின்னங்களுக்கு அருகில் அவற்றைப் பற்றிய குறிப்புகள் கிடையாது. இப்போது எல்லா வரலாற்றுச் சின்னங்களுக்கு அருகிலும் மிக அழகிய முறையில் அவற்றைப் பற்றிய குறிப்புகள் வைக்கப்பட்டுவருகின்றன.

மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் முழுமையாக சோதனையிடப்பட்டிருக்கின்றன. முக்கியப் பிரமுகர்கள் வரும் தினத்தன்று விடுதிகளில் யாருக்கும் அறைகளை வாடகைக்கு அளிக்க வேண்டாமெனக் கூறப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

முக்கியப் பிரமுகர்கள் வரும் தினத்தன்று உள்ளூரில் வசிப்பவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வந்தால், தங்களுடன் ஆதார் அட்டையை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளி ஊர்களில் இருந்துவந்து இங்கு பணியாற்றுபவர்களுக்கு காவல்துறையின் சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட ஐநூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாமல்லபுரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகர் முழுவதும் சிசிடிவிகள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் காவல்துறையால் கண்காணிக்கப்பட்டுவருகிறது.

சீன அதிபரின் வருகையை ஒட்டி சென்னையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சீன அதிபருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக வந்ததாகக் கூறி திபத்தைச் சேர்ந்த எட்டு பேர் காவல்துறையால் பிடித்துவைக்கப்பட்டுள்ளனர். விடுதிகளிலும் ஹோட்டல்களிலும் தங்கியிருப்போர் விவரங்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும்படி, ஹோட்டல்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா - பூடான் - சீனா ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில் உள்ள டோக்லாமில் சீனா சாலைகளை விரிவாக்கம் செய்தது. இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த இந்தியா தனது படையினரை அப்பகுதிக்கு அனுப்பியது. பூடானும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இரண்டரை மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் தங்கள் படையினரை அங்கிருந்து விலக்கிக்கொள்வதாக அறிவித்தன.

இந்த விவகாரம் இந்திய - சீன உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்த நிலையில், 2018ஆம் ஆண்டில் சீன அதிபரும் இந்தியப் பிரதமரும் வுஹானில் உள்ள ஈஸ்ட் லேக் பகுதியில் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து 2019ல் இந்தியாவில் இதுபோன்ற பேச்சுவார்த்தை நடக்குமென அப்போதே கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கிறது. இந்தப் பேச்சு வார்த்தையின்போது என்னென்ன விவகாரங்கள் விவாதிக்கப்படுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இருந்தபோதும் இந்தியா - சீனா இடையிலான கட்டுப்பாட்டுக் கோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்வது ஆகியவை குறித்து பேசப்படக்கூடும். இவை தவிர, காஷ்மீர் விவகாரம், சீனா - பாகிஸ்தான் பொருளாதார இணைப்புச் சாலை ஆகியவை குறித்தும் இரு நாடுகளும் பேசக்கூடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :