கொள்ளையடிக்க சென்ற வீட்டில் ஊஞ்சல் ஆடிய திருடன் சச்சிதானந்தம் கைது - சிசிடிவியில் பதிவான காட்சி

படத்தின் காப்புரிமை தினத்தந்தி

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "கொள்ளையடிக்கசென்ற வீட்டில் ஊஞ்சல் ஆடிய திருடன்"

விழுப்புரத்தில் கொள்ளையடிக்க சென்ற வீட்டில் ஊஞ்சல் ஆடிய திருடனை போலீசார் கைது செய்தனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

விழுப்புரம் சுதாகர் நகரை சேர்ந்தவர் இளங்கோ (வயது 56). இவர் தென்பேர் அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 18-ம் தேதி இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது இவருடைய வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த ஒருவர், வீட்டின் 2-வது மாடியில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து சிறிது நேரம் ஆனந்தமாக ஆடினார். இந்த காட்சி, அந்த வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து ஆசிரியர் இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்த சச்சிதானந்தம் (32) என்பதும், கொள்ளையடிப்பதற்காக ஆசிரியர் இளங்கோ வீட்டில் புகுந்ததும், அங்கு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருட முயன்றபோது நாய் குரைத்துள்ளது. அதற்கு பயந்து வீட்டின் மாடிக்குச்சென்றவர் அங்கிருந்த ஊஞ்சலில் சிறிது நேரம் ஆடிவிட்டு அங்கிருந்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சச்சிதானந்தத்தை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்றபோது அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி: கால நிலை மாற்றம் - குழந்தைகளுக்கு அதிக அளவில் பரவும் 'மெட்ராஸ் - ஐ'

கால நிலை மாற்றத்தின் காரணமாக 'மெட்ராஸ் - ஐ' எனப்படும் கண் தொற்று நோய் பாதிப்பு வழக்கத்தைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் அப்பிரச்னை ஏற்படுவதாக கண் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

சென்னையில் உள்ள கண் மருத்துவமனைகளில் நாள்தோறும் ஐம்பதுக்கும் மேற்பட்டோா் 'மெட்ராஸ் - ஐ' பாதிப்புக்காக சிகிச்சை பெற வருவதாகவும் அவா்கள் கூறுகின்றனா்.

படத்தின் காப்புரிமை Getty Images

விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் 'மெட்ராஸ் - ஐ' எனக் கூறப்படுகிறது. அந்த வகையான பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். அதுமட்டுமன்றி, 'மெட்ராஸ் - ஐ' பிரச்னையால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தாலும் மற்றவா்களுக்கு அந்நோய்த் தொற்று எளிதாகப் பரவும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்த நிலையில், 'மெட்ராஸ் - ஐ' தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவா் சௌந்தரி, "'மெட்ராஸ் - ஐ' எளிதில் குணப்படுத்தக்கூடிய மிக சாதாரணமான நோய்த் தொற்றுதான். ஆனால், அதனை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காலம் தாழ்த்தி அலட்சியம் செய்தால் பார்வையில் தெளிவற்ற நிலை ஏற்பட்டு விடும்.

கண் எரிச்சல், விழிப் பகுதி சிவந்து காணப்படுதல், நீா் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை 'மெட்ராஸ் - ஐ'-யின் முக்கிய அறிகுறிகளாகும்.

பொதுவாக ஒரு கண்ணில் 'மெட்ராஸ் - ஐ' பிரச்னை ஏற்பட்டால், மற்றெறாரு கண்ணிலும் அந்தப் பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவா்கள், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கடந்த சில வாரங்களாக நாளொன்றுக்கு குறைந்தது 5 பேருக்காவது 'மெட்ராஸ் - ஐ' பாதிப்பு இருப்பதை நான் உறுதி செய்கிறேறன். அவா்களில், பலா் குழந்தைகள் என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது" என்றார் அவா்.

இந்து தமிழ்: "சென்னைக்கு ரயில் வேகன்களில் தண்ணீர் எடுத்து வருவது நிறுத்தம்"

சென்னை குடிநீர்த் தேவைக்காகக் கிருஷ்ணா நதிநீர் தேவையான அளவு வந்து கொண்டிருப்பதால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் எடுத்து வருவது நேற்றுடன் நிறுத்தப்பட்டது.

படத்தின் காப்புரிமை பிபிசி

சென்னை குடிநீர் ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டதால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை வில்லிவாக்கத்துக்கு ரயில் வேகன்களில் தினமும் சுமார் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்து வரப்பட்டது. அங்கிருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

இதனிடையே, சென்னை குடிநீர்த் தேவைக்காகக் கிருஷ்ணா நீர் திறந்துவிடும் படி ஆந்திர அரசிடம் தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, அண்மையில் கிருஷ்ணா நதிநீரைத் திறக்கப்பட்டது. 5 நாட்களுக்குப் பிறகு, பூண்டி ஏரிக்கு நீர் வந்து சேர்ந்தது. அங்கிருந்து பேபி கால்வாய் வழியாகப் புழல் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து சென்னைக்குத் தினமும் வழங்கும் 525 மில்லியன் லிட்டர் குடிநீரைக் கிருஷ்ணா நீர்வரத்தின் மூலம் வழங்க முடியும் என்பதால், ரயில் வேகன்களில் தண்ணீர் எடுத்து வருவது நேற்றுடன் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது: ரயில் வேகன்களில் தண்ணீர் எடுத்து வருவது நேற்று (அக்.8) பகல் 2.30 மணியுடன் நிறுத்தப்பட்டது. இதுவரை 159 நடை மூலம் மொத்தம் 437 மில்லியன் லிட்டர் (43 கோடியே 72 லட்சம் லிட்டர்) காவிரி நீர் எடுத்து வரப்பட்டது. கிருஷ்ணா நீர் தேவையான அளவு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அடுத்த 10 நாட்களில் சென்னைக்குக் குடிநீர் விநியோகம் 525 மில்லியன் லிட்டரிலிருந்து 575 மில்லியன் லிட்டராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கு ஒரு டிஎம்சி கிருஷ்ணா நீர் வந்ததும் குடிநீர் விநியோகம் அதிகரிக்கப்படும். மேலும், வடகிழக்கு பருவமழையும் தொடங்கவிருப்பதால் தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னைக் குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.257 மில்லியன் கனஅடி. தற்போது 1 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 582 கனஅடி கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. வீராணம் ஏரியிலிருந்து 180 மில்லியன் லிட்டர், கடல்நீரைக் குடிநீராக்கும் 2 நிலையங்களிலிருந்து 180 மில்லியன் லிட்டர், எறுமையூர் கல்குவாரியிலிருந்து 10 மில்லியன் லிட்டர், இவைதவிர, குடிநீர் வாரியத்துக்குச் சொந்தமான விவசாயக் கிணறுகள், வாடகைக் கிணறுகள், ஏரிகள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரையும் சேர்த்து, தினமும் சுமார் 525 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'தீபாவளிக்கு கூடுதல் விடுமுறை இல்லை'

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது ஞாயிற்றுக்கிழமை வருவதால், பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை கிடைக்காது.

கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அளித்து பள்ளிக் கல்வி துறையிலிருந்து அறிவிப்பு வருமென அனைவரும் எதிர்பார்த்திருந்த சூழலில் கூடுதல் விடுமுறை கிடைக்காதென பள்ளிக் கல்வித் துறை கூறி உள்ளது.

Rafale: ஓம் என்று எழுதி ரஃபேலுக்கு ஆயுத பூஜை செய்த இந்திய அமைச்சர் | Rajnath singh shashtra pooja

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :